துரித பொருளாதார வளர்ச்சி ஏன் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது? | தினகரன் வாரமஞ்சரி

துரித பொருளாதார வளர்ச்சி ஏன் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது?

பொருளாதார வளர்ச்சி குறைந்த, பணவீக்கம் குறைந்த மற்றும் வேலையின்மை ஆகியன ஒரு பொருளாதாரத்தின் பேரினப் பொருளாதாரக் குறிக்கோள்களில் முக்கியமானவையாகும். எந்த ஒரு அரசாங்கமும் பொருளாதார வளர்ச்சியை உயர்ந்த மட்டத்தில் பேண வேண்டும் என விரும்பும் அதேவேளை பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும் வேலையின்மை வீதத்தை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வருவதையுமே விரும்பும். இதனை எய்தும் பொருட்டு பேரினப் பொருளாதாரக் கொள்கைத் திட்டங்களை வகுத்துச் செயற்படும்.

பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்தி இயலளவில் ஏற்படும் ஒரு விரிவாக்கமாகும். இதனை இரு ஆண்டுகளுக்கிடையில் மொத்த மெய் உள்நாட்டு உற்பத்திப்பெறுமதிகளுக்கு இடையிலான வேறுபாட்டினால் கணிப்பிடப்படுகிறது. இவ்வேறுபாட்டை நூற்று வீதமாகக் குறிப்பிடுவது பொருளாதார வளர்ச்சி வீதம் எனப்படுகிறது. பொதுவாக மெய்ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வீதத்தை துரிதப்படுத்தலாம்.

பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டின் சராசரி விலைமட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை நூற்று வீதத்தில் குறிப்பிடுவதாகும். சராசரியாக பொருட்கள் சேவைகளின் விலைகள் துரிதமாக அதிகரிக்குமாயின் பணவீக்க வீதமும் அதிகரித்துச் செல்லும். பணவீக்க வீதத்தை மிதமான மட்டத்தில் பேணுவதையே அரசாங்கங்கள் விரும்பும். உயர் மட்டப் பணவீக்கம் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும்.

வேலையின்மை என்பது முனைப்புடன் தொழில் தேடுவோருக்கு அதற்கான வாய்ப்பு கிட்டாத நிலைமையினைக் குறிக்கும். வேலை தேடுவோரில் எத்தனை வீதமானோருக்கு அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை என்பதை வேலையின்மை வீதம் விளக்கும்.

வேலையின்மை உயர்வாக இருக்கும் போது மக்களின் வருமானமும் உழைக்கும் ஆற்றலும் குறைவடையும். இதனால் பொருட்கள் சேவைகள் மீதான கேள்வி வீழ்ச்சியடையும். இதனால் பொருளாதாரத்தின் உற்பத்தி, முதலீடு, என்பன கேள்விக்குள்ளாவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் வீழ்ச்சி ஏற்படும். வேலையின்மை காரணமாக மக்கள் மத்தியில் விரக்தி நிலை உருவாவதுடன் அது பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் வன்முறைகள் வெடிப்பதற்கும் புரட்சிகள் தோன்றுவதற்கும் காரணமாக அமையலாம்.

மேலே நாம் கண்ட மூன்று பொருளாதாரக் குறிக்கோள்களும் எந்த ஒரு நாட்டிற்கும் பொதுவானவையாகும். எல்லா அரசாங்கங்களும் இவற்றை எய்துவதில் முனைப்புடன் செயற்படும். இங்கே எழும் முக்கியமான வினா யாதெனில் இம் மூன்று குறிக்கோள்களையும் ஏக காலத்தில் அடைய முடியுமா என்பதே!

பொருளாதார வளர்ச்சியை துரிதமாக அதிகரிக்கும் நோக்கில் செயற்படும் போது பணவீக்கத்தை குறைக்க முடியுமா? பணவீக்கத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது வேலையின்மையை கட்டுப்படுத்த முடியுமா? பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் போது வேலையின்மையை குறைக்க முடியுமா? ஆகிய வினாக்கள் எமது அவதானத்திற்கு உரியனவாகின்றன.

பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முனைப்புடன் செயற்படும் நோக்கில் தனது செலவீடுகளை அதிகரிக்கும் போது பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த கேள்விப் பக்கமும் அதிகரிக்கும் இதன் விளைவாக பொருளாதாரத்தின் விலை மட்டம் உயரும். மறுபுறம் பொருளாதார விரிவாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகளவு உழைப்பு, மூலதனம் என்பவற்றை பயன்படுத்த முயற்சி செய்யும் போது அவற்றின் கொடுப்பனவுகளாகிய சம்பளங்கள் மற்றும் வட்டி வீதம் என்பன உயர்வதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இவ்வாறு உற்பத்தியின் செலவுகள் அதிகரிப்பதனால் பொருள்கள் கேள்விகளின் விலைகளில் துரித அதிகரிப்பு ஏற்படும் இது செலவுத் தூண்டல் பணவீக்கம் எனப்படும்.

எனவே, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கக் கொள்கைகள் காரணமாக கேள்வித்தூண்டல் பணவீக்கம் ஏற்படுவதுடன் உற்பத்திக் காரணிகளின் விலைகள் உயர்வதனால் செலவுத் தூண்டல் பணவீக்கமும் உருவாகின்றன. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்வதுடன் கேள்வித் தூண்டல் காரணமாக ஏற்படும் பணவீக்கம் செலவுத் தூண்டலின் காரணமாக மேலும் அதிகரிக்கிறது. அத்துடன் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக கேள்வித்தூண்டல் பணவீக்கம் ஏற்படுவதுடன் செலவுத் தூண்டல் பணவீக்கம் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

எனவே, பொருளாதார வளர்ச்சியை அடைய எத்தனிக்கும் போது வேண்டாத விருந்தாளியாக பணவீக்கம் ஏற்படுகிறது. ஒரு இயந்திரம் விசையுடன் இயங்கும் போது அதன் காரணமாக வெப்பம் வெளிவிடப்படுவதைப் போல பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது. எனவே துரித பொருளாதார வளர்ச்சியை அடைய எத்தனிக்கும் போது பணவீக்கத்தை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியாது என்பது புலனாகும்.

மறுபுறம் தொடர்ச்சியான அதிகரித்துச் செல்லும் பணவீக்க நிலைமையினை ஒரு அரசாங்கம் அனுமதிக்க முடியாது. காரணம் அதிகரித்த பணவீக்கம் பொருளாதார உறுதிப்பாட்டை சீர்குலைத்து விடும் என்பதனால் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைக்க முடியாத சூழ்நிலை உருவாகும். எனவேதான் அரசாங்கங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பொருளாதார உறுதிப்பாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த விழைகின்றன. இக்கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியை மெதுவானதாக மாற்றுகின்றன. எனவே பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கக் கட்டுப்பாட்டையும் ஏக காலத்தில் எய்த முடியாது.

இரண்டாவதாக, குறைந்த பணவீக்கத்தை பேணும் அதேவேளை வேலையின்மையை குறைக்க முடியுமா என்றும் கேள்வி எழுகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது கேள்வித் தூண்டல் பணவீக்கம் ஏற்படுகிறது. அதேவேளை பொருளாதார வளர்ச்சியின் போது உற்பத்தி வளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதனால் அவற்றின் வேலையின்மை குறைவடைகிறது. ஆகவே பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது வேலையின்மை குறைவாக இருக்கும் என்று கூறலாம்.

குறைந்த பட்சம் குறுங்காலத்தில் பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையில் எதிர்க்கணிய ரீதியிலான தொடர்பு காணப்படுமென ஏ.டபிள்யூ. பிலிப்ஸ் எனும் அறிஞர் கூறுகிறார். அதாவது பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்தால் அதிகளவு வேலையின்மை ஏற்படும் என்பதுடன் வேலையின்மையை குறைக்க எத்தனித்தால் அதிகளவு பணவீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதே இதன் பொருளாகும். ஆகவே பணவீக்கத்தை கட்டுப்படுத்தல் வேலையின்மையைக் குறைத்தல் ஆகிய இரண்டு பேரினப்பொருளாதாரக் குறிக்கோள்களையும் ஏககாலத்தில் அடைய முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சிக்கும் வேலையின்மைக்குப் இடையிலான தொடர்பினை அவதானிக்கலாம். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அதிகளவு உழைப்பு அவசியமாதலால் பொருளாதார வளர்ச்சியின் போது வேலையின்மை குறைவடைய வேண்டும். எனவே பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மையை குறைத்தல் ஆகிய இரு குறிக்கோள்களையும் ஏக காலத்தில் அடைய முடியும் என்பது தெளிவாகிறது. ஆயினும் அண்மைக்காலத்தில் அவதானிக்கப்பட்டுவரும் ஒரு முக்கிய விடயம், வேலை வாய்ப்பில்லா பொருளாதார வளர்ச்சி (Jobless Growth) என்பதாகும். பொருளாதார வளர்ச்சி அதிகரித்த போதிலும் போதியளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாத ஒரு நிலைமையினை அவதானிக்க முடிகிறது.

தொழினுட்ப வளர்ச்சி காரணமாக தானியங்கி உற்பத்தி செயற்பாடுகள், ரோபோக்களின் பயன்பாடு, சூப்பர் கணினிகளின் (Super Computers )பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு நுட்பங்களின் அதிகரித்த உட்புகுத்தல் என்பன மனித உழைப்பின் தேவையினை குறிப்பிடத்தக்களவு மட்டுப்படுத்தியுள்ளன. எனவே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது வேலையின்மை குறைவடையாத ஒரு சூழலை மேற்குலக நாடுகளில் அவதானிக்க முடிகிறது.

1970 தசாப்தத்தில் மேற்குலக நாடுகள் பலவற்றில் உயர்வான பணவீக்கம், உயர்வான வேலையின்மை மற்றும் குறைந்த பொருளாதார வளர்ச்சி என்பன அவதானிக்கப்பட்டன. குறிப்பாக பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையில் நிலவியதாக கருதப்படும் எதிர்கணியத் தொடர்பினை இக்காலப்பகுதியில் அவதானிக்க முடியவில்லை. பெற்றோலிய விலைகள் உயர்வடைந்த காரணத்தால் உற்பத்தி செலவுகள் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டதுடன் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை எய்தியதுடன் அதன் காரணமாக வேலையின்மையும் அதிகரித்தது.

இப்போது பொதுவாக உலகளாவிய ரீதியில் இதற்கு எதிர்மாறான ஒரு சூழல் நிலவுவதனை நாம் அவதானிக்க முடிகிறது.

இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார வளர்ச்சி வீதங்கள் மிகவும் குறைந்த நிலையில் உள்ளதுடன் உயர் பொருளாதார வளர்ச்சி நிலைய நாடுகளிலும் அவ்வளர்ச்சி வீதங்கள் மெதுவடைந்து செல்கின்றன. அதேவேளை உலகளாவிய ரீதியில் பணவீக்க வீதமும் வேலையின்மை வீதமும் குறைந்த மட்டத்தில் உள்ளன.

இலங்கையிலும் கூட இதே சூழலை அவதானிக்க முடிகிறது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள அதேவேளை பணவீக்கமும் வேலையின்மையும் ஒற்றை இலக்கத்தில் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன.

பொருளாதாரத்தில் பொருள்கள் சேவைகளின் மீதான மக்களின் கேள்வி குறைந்ததையும் இந்த நிலைக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்  

Comments