![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/30/q2.jpg?itok=sIr0NXhZ)
பத்து வருடங்களாக பாகிஸ்தானில் மண்ணில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக முழுமையான தொடர்களில் விளையாட சர்வதேச அணிகள் அங்கு செல்லத் தயங்கின. ஆனால் கடந்த செப்டெம்பர், நீண்ட இடைவெளிக்குப் பின் அக்டோபர் மாதங்களில் இலங்கை அணி அங்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச, ரி-20தொடர்களில் விளையாடிது. அத்தொடரில் மீதமிருந்த 2டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் மாதம் மத்தியஸ்த நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பாகிஸ்தான் கிரக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டுடன் இத்தொடரையும் பாகிஸ்தானில் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது குறுகிய போட்டிகள் போலல்லாமல் தொடந்து ஐந்து நாட்கள் ஒரே மைதானத்தில் தமது வீரர்கள் விளையாடுவதற்குரிய பாதுகாப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து, நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின் இறுதியில் இலங்கை கிரிக்கெட்டும், இலங்கை அரசும் நமது வீரர்கள் அங்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதித்தது. இத் தொடருக்கு சிரேஷ்ட வீரர்கள் அடங்கிய முழுமையான டெஸ்ட் அணியே அங்கு சென்று விளையாடவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 11ம் திகதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது போட்டி 19ம் திகதி கராச்சியிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் 1982முதல் இதுவரை 53டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இலங்கை அணி 16வெற்றிகளையும், பாகிஸ்தான் அணி 19வெற்றிகளையும் பெற்றுள்ளன. 18போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக இலங்கை அணியே களமிறங்கியுள்ளது. 2009ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. அத்தொடரின் இரண்டாவது போட்டியின் மூன்றாவது நாள் காலையில் போட்டியில் கலந்துகொள்ள லாஹூர் மைதானத்துக்கு வரும் போதே வீரர்களை ஏற்றிச்சென்ற பஸ் தாக்குதலுக்குள்ளானது.
அதுவரை பாகிஸ்தான் மண்ணில் 21போட்டிகளுக்கு இலங்கை அணி முகம்கொடுத்துள்ளதோடு இலங்கை அணி 6வெற்றிகளையும், 7தோல்விகளையும் பெற்றுள்ளதுடன் 8போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
2000ம் ஆண்டு சனத் ஜயசூரியவின் தலைமையில் அங்கு சென்ற இலங்கை அணி முதன் முதலாக தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரில் இலங்கை 2--1என்ற ரீதியில் வெற்றிபெற்றது. அத்தொடரில் முத்தையா முரளிதரன் சிறப்பாகப் பந்து வீசி தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
இரு நாடுகளுக்கிடையில் ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டமாக பாகிஸ்தான் அணி 2009ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற போட்டியில் 6விக்கெட் இழப்புக்கு 765ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. இலங்கை சார்பில் அதே போட்டியில் இலங்கை அணி பெற்ற 7விக்கெட் இழப்புக்கு 644ஓட்டங்களே இலங்கை சார்பாகப் பெறப்பட்ட கூடிய ஓட்டங்களாகும்.
தனி நபர் ஓட்டமாக பாகிஸ்தான் சார்பில் 2009ம் ஆண்டு கராச்சி மைதானத்தில் யூனிஸ்கான் பெற்ற 313ஓட்டங்களும், இலங்கை சார்பாக 2004ம் ஆண்டு சனத் ஜயசூரிய பெஷாவர் மைதானத்தில் பெற்ற 254ஓட்டங்களுக்கும் பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் மண்ணில் 2009ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற போட்டித் தொடரில் திலான் சமரவீர அடுத்தடுத்த இரு போட்டிகளிலும் இரட்டைச் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் முத்தையா முரளிதரன் 1995முதல் 2009ம் ஆண்டு வரை 9டெஸ்ட் போட்டிகளில் 50விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பாகிஸ்தான் மண்ணில் வெளிநாட்டு வீரர் ஒருவர் பெற்ற கூடிய விக்கெட்டுகளாகும்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக பின்னடைவையே சந்தித்து வருகிறது. அவ் அணி இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3--0என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அத்துடன் இலங்கையுடன் கடைசியாக பாகிஸ்தான் விளையாடிய தொடரிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. 2018ம் ஆண்டு நடைபெற்ற 2போட்டிகள் கொண்ட தொடரை ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்துவீச்சினால் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சிய மைதானத்தில் முதன் முதலாக வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. அத்தடன் இம்மைதானத்தில் கடைசியாக நியூசிலாந்து அணியுடனான தொடரையும் இழந்துள்ளதால் டெஸ்ட் போட்டிகளில் அவ்வணி இலங்கை அணியை விட பின்னிலையிலேயேயுள்ளது. கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கூட பாகிஸ்தான் அணி பெரிதாக சாதிக்கவில்லை.
அவ்வணியின் துடுப்பாட்டத்தில் பாபர் அசாமைத் தவிர மற்றைய அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் வழமையான திறமைக்கு இன்னும் திரும்பவில்லை. தலைவர் அசார் அலி, இமாமுல் ஹக், ஹரீஸ் சொஹைல், மஹூட், ரிஸ்வான் என நீண்ட துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் எல்லோரும் ஒரே நேரத்தில் சொதப்புகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர் எனப் பெயர் எடுத்த அசாத் சபிக் கூட நிலைத்து நின்று ஆட முடியாமல் தடுமாறி வருகின்றார்.
பந்துவீச்சில் மொஹம்மட் அமீர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின் வேகப்பந்து வீச்சில் அவ்வணி சற்று பலமிழந்த நிலையிலேயே உள்ளது. மற்றொரு சிறந்த வேகப் பந்துவீச்சாளரான மொஹம்மட் அப்பாஸ் அடிக்கடி காயத்துக்குள்ளாகி அவதிப்பட்டு வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான 16வயது --- ஷா அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பெரிதாக எடுபடவில்லை. பாகிஸ்தான் மண் சுழற்பந்து வீச்சுக்கு அணுகூலமானதால் அவ்வணி யசீர் ஷாவின் பந்து வீச்சையே பெரிதும் நம்பி இத்தொடரில் களமிறங்குகிறது.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. அண்மையில் இலங்கையில் முடிவுற்ற பிரபல நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1 – 1என சம நிலையில் முடித்துக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அண்மையில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தலைவர் திமுத் கருணாரத்ன நிலைத்துநின்று ஆடி வருகின்றார். இவ்வருடம் இலங்கை அணி சார்பாக இதுவரை கூடிய ஓட்டடங்களையும் அவரே பெற்றுள்ளார். 6போட்டிகளில் 427ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவரைத் தவிர குசல் ஜனித் பெரேரா வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுடன் பெற்ற வரலாற்கு வெற்றிக்கு இவரின் துடுப்பாட்மே காரணமாய் அமைந்தது. அஞ்சலோ மெத்தியூஸ், திரிமான்ன புது முகவீரர் ஓசத பெர்னாடோ ஆகியோரின் துடுப்பாட்டமும் இலங்கை அணிக்கு கைகொடுத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான சந்திமாலும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பந்து வீச்சைப் பொறுத்த வரையில் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார். அவருடன் புதுமுக வீரர் விஷ்வ பெர்னாண்டோ குறிப்பிடத்தக்கவர். இவ்வருடம் இலங்கை சார்பாக கூடிய விக்கெட்களை வீழ்தியுள்ளார். 3போட்டிகளில் 16விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரங்கன ஹேரத்தின் ஓய்வின் பின் சற்றுப் பின்னடைவை சந்தித்துவருகிறது. பாகிஸ்தானுடனான தொடரில் காயத்திலிருந்து மீண்டுள்ள தில்ருவன் பெரேரா இணைந்துள்ளதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பாகிஸ்தான் ஆடுகளங்களில் இவரின் வகிபாகம் முக்கியமானது. இவருடன் லக்ஷான் சந்தக்கன், தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய லசித் இபுல்தெனியவும் அணியில் உள்ளதால் சிறந்த பெறுபேரைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
டெஸ்ட் சம்பியன் ஷிப் அடிப்படையில் இத்தொடர் நடைபெறுவதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம். எஸ். எம். ஹில்மி