நன்கு வடிவமைக்கப்பட்டு முறையாக அமுல் செய்யப்படும் பொருளாதாரத் திட்டமே பலன் தரும் | தினகரன் வாரமஞ்சரி

நன்கு வடிவமைக்கப்பட்டு முறையாக அமுல் செய்யப்படும் பொருளாதாரத் திட்டமே பலன் தரும்

ஒரு மோட்டார் சைக்கிளில் பெற்றரி சார்ஜ் இல்லாதபோது அதனை ‘உதைத்து’ ஸ்டார்ட் பண்ணுவது போல அல்லது ஒரு கார் இயங்க மறுக்கும்போது ‘தள்ளி’ ஸ்டார்ட் பண்ணுவது போல ஒரு பொருளாதாரமும் தேக்க நிலையில் மெதுவடைந்து செல்லும்போது அதனை ‘தட்டி’ ஸ்டார்ட் பண்ணுவதற்கு நிபுணர்கள் சில கொள்கைகளை நாடுவது இயல்பானது.  

குறிப்பாக 1930களில் நடைபெற்ற உலகப்பெரும் மந்த நிலையின்போது உலகின் முன்னணி கைத்தொழில் மய நாடுகளின் பொருளாதாரங்கள் மந்த நிலையடைந்து தேங்கிப் போயின. வருமானப் பற்றாக்குறை காரணமாக மக்களால் நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்த முடியவில்லை. பொருள்கள் சேவைகள் மீதான கேள்வி குறைவடைந்தது. இதனால் உற்பத்தி மீதான முதலீடுகள் குறைந்தன. இது வேலை வாய்ப்புகளை குறைத்தது. தொழிலின்மை வருமான இழப்புக்கு இட்டுச்செல்ல, கேள்வி மேலும் வீழ்ச்சியடைந்து தொடர்ச்சியாக பொருளாதாரங்கள் மந்த நிலையை அடைந்தன. அதாவது பெற்றரி சார்ஜ் தீர்ந்துவிட்ட வாகனத்தைப் போல. 

இந்த நிலையில், அதனை ‘உதைத்து’ அன்று தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணும் நோக்கில் இங்கிலாந்து பொருளாதார அறிஞரான ஜோன் மேனாட் கெயின்ஸ் என்னும் பிரபு 1936ல் ‘பொதுக் கொள்கை’ என்னும் ஒரு நூலை வெளியிட்டு பொருளாதார மந்தத்தில் இருந்து எப்படி நாடுகளை மீட்டெடுக்கலாம் என்பதற்கான பொருளாதார கொள்கைத் தெரிவுகளை சிபாரிசு செய்தார். தான் இயற்றிய நூல் உலகப் பொருளாதாரத்தை புரட்டிப் போடும் அளவுக்கு புகழ்பெறும் என்று தாம் நம்புவதாக கெயின்சின் நண்பரும் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியவாதியுமான ‘பேனார்ட் ஷா’வுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். எதிர்பார்த்தது போலவே அவர் சொன்ன கொள்கைகளைப் பின்பற்றிய கைத்தொழில் நாடுகள் மந்தத்திலிருந்து மீட்சி பெற்றதற்கான சான்றுகள் உள்ளன. கெலியின்ஸின் இந்தக் கொள்கைகள் பொருளாதாரத்தை அவசரகாலத்தில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போல மூச்சற்றுப்போய் கிடக்கும் ஒருவரை மீட்டெடுக்க செயற்கை சுவாசம் வழங்குவது போல செயற்படக் கூடிய சிந்தனையாக கொள்ளப்படுகின்றன. பொருளாதார வார்த்தைகளில் இக் கொள்கைகள் ‘விரிவாக்கக் கொள்கைகள்’ என அழைக்கப்படுகின்றன. 

01. அரசாங்கத்தின் செலவீடுகளை அதிகரித்தல். 

02. வரிகளைக் குறைத்தல். 

அல்லது இவை இரண்டையும் ஏககாலத்தில் நடைமுறைப்படுத்தல் என்பது விரிவாக்க இறைக்கொள்கை என அழைக்கப்படுகிறது. 

அதாவது அரச செலவீடுகள் அரசாங்கத்தின் வருமானத்தை விட உயர்வாக அமையும் செயற்பாட்டையே விரிவாக்க இறைக்கொள்கை எனப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் பற்றாக்குறை வரவு செலவுத்திட்டத்தை அமுல்படுத்துவதே இதன் பொருளாகும்.  

உண்மையில் கெயின்ஸ் கூறியது சமநிலை வரவு செலவுத்திட்டத்தை பற்றியதாகும். அதாவது அரசாங்கம் தனது செலவீடுகளை அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகளை உதைத்து இயங்க ஆரம்பிக்க வேண்டும். மக்கள் மத்தியில் வருமானம் இல்லாததே பொருள்கள் சேவைகளை அவர்கள் வாங்க முடியாமைக்கு காரணம். பொருள்கள் சேவைகள் மீதான கேள்வி குறைவதே தனியார் முதலீடுகள் வீழ்ச்சியடையக் காரணம். முதலீட்டு வீழ்ச்சியே வேலை வாய்ப்புகள் குறைவடையக் காரணம். வேலைவாய்ப்புகள் இன்மையே மக்களின் வருமானம் குறையக் காரணம்.

எனவே அரசாங்கம் தனது செலவீடுகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் செலவு செய்யும் ஆற்றலை அதிகரிக்க வேண்டும் அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளைக் குறைக்க வேண்டும். இதில் வரிகளை குறைப்பதை விட அரசாங்க செலவீட்டை அதிகரிப்பதையே கெலின்ஸ் விதந்துரைக்கிறார். உதாரணமாக அரசாங்கம் நூறு ரூபாவாக அரசாங்க செலவீட்டை அதிகரித்தால் அதற்கு உரிய நிலையை ஈட்டவேண்டிவரும். அந்த 100 ரூபா நிதியை அரசாங்கம் வரியாக அறவிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது சமநிலை வரவு செலவுத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பொருளாதாரத்தின் அளவு 100 ரூபாவினால் அதிகரிக்கும் என்பதே கெயின்ஸின் வாதத்தின் சுருக்கமாகும். அவருக்குப் பின் வந்தவர்கள் அரசாங்கம் அதிகளவில் செலவிட்டு வருமானத்தை குறைத்துக் கொண்டால் பொருளாதார விரிவாக்கம் துரிதமாக இருக்கும் எனக்கருதி பற்றாக்குறை வரவு செலவுத்திட்டத்தை விதந்துரைத்தனர். 

எனவே தேங்கிப் போயுள்ள அல்லது உயிருக்குப் போராடும் ஒரு பொருளாதாரத்திற்கு அவசர சிகிச்சை போல கெயின்ஸின் விரிவாக்க இறைக் கொள்கைகள் அமையக் கூடும். 2008இல் இடம்பெற்ற உலகப் பெரும் பொருளாதாரத்தால் பின்னடைவின் (The Great Recession) போதும் கெயின்ஸின் விரிவாக்க இறைக் கொள்கையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவற்றிலும் பின்பற்றப்பட்டது. 

அத்துடன் 1950களில் உலகின் பெரும்பாலான காலனித்துவ குடியேற்ற நாடுகள் அரசியல் சுதந்திரமடைந்தபோது அவற்றின் புதிய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் விரிவாக்க இறைக்கொள்கையுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றினர். 

இவ்வாறு பற்றாக்குறை வரவு செலவுத்திட்டத்தைப் பின்பற்றிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பலவற்றில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார விரிவாக்கத்தையோ வளர்ச்சிச் செயலாற்றத்தையோ அவதானிக்க முடியவில்லை. 

மாறாக அந்நாடுகள் வரவு செலவு திட்டக் குறைநிலை தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்றதன் காரணமாக கடன்சுமைக்கு ஆளாக நேர்ந்தது. 

மறுபுறம் 1970களில் இங்கிலாந்தில் பிரதமர் மார்கிரேட் தாட்சரின் பொருளாதாரக் கொள்கைகளும் அதே காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகிய ரொனால்ட்றேகன் அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளும் உலக அளவில் பெரிதாகப் பேசப்பட்டன. ‘தாட்சரிஸம்’ ‘Thatcherism’ மற்றும் ‘Reagonism’ றேகனிஸம் என அவை குறிப்பிடப்பட்டன.   பொருளாதாரத்தை தூண்டுவிக்கும் கேள்விப் பக்க கொள்கைகளுக்கு பதிலாக நிரம்பல் பக்க கொள்கைகளையே இவர்களின் பொருளாதாரக் கொள்கைகளில் காணமுடிந்தது. 

உற்பத்தியாளர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வருமானம் உழைப்போருக்கு வரிக்குறைப்புகளை (குறிப்பாக வருமான வரி) ஏற்படுத்தி ஊக்குவிப்பு வழங்குதல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளல், புதிய தொழில் நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல், அத்துடன் மனித மூலதனத்தை கட்டியெழுப்ப கல்வி மற்றும் தொழில்நுட்ப, சுகாதார வசதிகளில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளல் என்பன நிரம்பல் பக்க கொள்கை நடவடிக்கைகளில் உள்ளடங்குகின்றன. 

ஒரு நாட்டின் பொருளாதாரத் தேக்க நிலைமைக்கு கேள்விப் பக்கத்தை தூண்டுவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலாகும். மாறாக உற்பத்தியை தீர்மானிக்கும் நிரம்பல் பக்கத்தை தூண்டுவது நேரடி நன்மைகளைத் தரவல்லது. 1970 மற்றும் 1980களில் கிழக்காசிய துரித வளர்ச்சி கண்ட நாடுகள் ஜப்பான், தாய்வான், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் உள்நாட்டு கேள்வியை பூர்த்தி செய்வதற்காகவன்றி ஏற்றுமதிக் கேள்வியை பூர்த்தி செய்யவே உற்பத்தி செய்தன. வரிகளைக் குறைத்து நிரம்பல் செய்வதற்கும் உரிய வர்த்தக சூழலை உரியவகையில் உருவாக்கி அரசாங்கத்தின் மேற்பார்வையுடன் கூடிய தனியார் துறையின் வளர்ச்சி ஊடாகவே அந்நாடுகள் துரிதமாக வளர்ச்சி கண்டன. 

கஜானா காலியாகவுள்ள நாடுகள் பெரும்பாலும் பொருளாதார தேக்க நிலையிலும் அதிகளவு வரிச்சுமையே ஏற்படுத்தி வருவாயைத் திரட்ட முயற்சிக்கும். குறிப்பாக அரசாங்க செலவீடுகள் மிக உயர்வாகவும், வரி – வருவாய்கள் குறைவாகவும் உள்ள பற்றாக்குறை வரவு செலவுத்திட்டத்தை நீண்டகாலமாக செயற்படுத்தியும் பொருளாதாரத்தில் எந்தவித விரிவாக்கமும் இன்றி தேங்கிப் போயுள்ள நிலையில் அரசாங்கத்தின் பொதுப்படுகடனும் கடன் மீளச் செலுத்தல்களும் பயமுறுத்தும் நிலையில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் தனியார் துறையையும் தனிநபர்களையும் கசக்கிப் பிழிந்து வரிகளை திரட்டி வருமானம் பெறமுயற்சிக்கும்.   இது தனியார் துறையின் பொருளாதார செயற்பாடுகள் முடங்கி போவதற்கும் முதலீடுகள் வேறுநாடுகளை நோக்கிச் செல்வதற்கும் ஏதுவாகும். தனிநபர்கள் எவரும் அரசாங்கத்திற்கு வரிசெலுத்த வேண்டும் என்பதற்காக தமது ஓய்வு நேரங்களை தியாகஞ்செய்து மேலதிக வருமானம் பெறும் செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை. எனவே வரிகளைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் விரிவாக்கம் பெறச்செய்ய முயற்சிக்கலாம். ஆயினும் வரிகளை குறைப்பதன் மூலம் பொருளாதாரச் செயற்பாடுகள் தன்னிச்சையாக அதிகரிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாறாக நன்கு வடிவமைக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்டு முறையாக அமுல்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மூலமே அது சாத்தியமாகலாம்.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments