இரண்டாம் உலகப் போர் முதலாளித்துவம் சோஸலிஸம் என்ற இரு முகங்களை சிருஷ்டித்தது. அதில் முதலாளித்துவத்தின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வலுப்படுத்தவும் அவற்றுக்கு துணையாக செயல்படவும் உருவாக்கிய இராணுவ கூட்டே வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமையமாகும். நேட்டோ என்பதன் ஆங்கில விரிவாக்கம் North Atlantic Treaty Organization – NATO என்பதாகும். 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோவின் எழுபதாவது ஆண்டு நிறைவும் அதன் 31வது உச்சி மகாநாடும் கடந்த வாரம் (3முதல் -4 வரை ) லண்டனிலுள்ள Wartford நகரில் நடைபெற்றது. கடந்த கால மகாநாடுகளைவிட தற்போதைய மகாநாடு அதிக சர்ச்சையும் நெருக்கடி மிக்கதுமாகக் காணப்பட்டது. இக்கட்டுரையும் நேட்டோவுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை புரிந்து கொள்வதாக அமையவுள்ளது.
நேட்டோவின் பிரதான எதிரியாக மீண்டும் ரஷ்யாவே மேலெழுந்துள்ளது. சோவியத் யூனியனின் எச்சங்களை மீளமைக்க முயலும் நிலையில் நேட்டோ ரஷ்யாவை எதிரியாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட அத்திலாந்திக்கை கடந்து மத்திய மற்றும் போல்டிக் குடியரசுகளை நோக்கி நேட்டோ விஸ்தரிக்கப்படுவதனை நிராகரிக்கும் ரஷ்யாவின் அணுகுமுறைகளே நேட்டோவுக்கு பிரதான பிரச்சினையாக எழுந்துள்ளது. அது மட்டுமன்றி துருக்கியுடனான ரஷ்யாவின் நெருக்கமும் நேட்டோவை பாதிக்கும் விடயமாக மாறியுள்ளது. ஆனால் துரதிஷ்டம் நேட்டோ நாடுகள் தமக்குள் மோதும் நிலையையே நடந்து முடிந்த மகாநாடு வெளிப்படுத்தியுள்ளது.
முதலாவது, மோதலாக அமெரிக்கா எதிர் நேட்டோ விடயம் அமைந்துள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதியிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற்றப்பட்டமையும் துருக்கிய படைகள் சிரியாவின் வட பகுதிக்குள் பிரவேசித்தமையும் அதிக சர்ச்சையை மகாநாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் நேட்டோ அமைப்பு மூளைச்சாவடைந்து விட்டது என்றார். காரணம் அமெரிக்காவும் துருக்கியும் நேட்டோ அணியிலிருந்த போதும் தன்னிச்சையாக முடிவெடுத்து சிரியாவின் வடக்குப் பகுதியை கையாண்டுள்ளனர். இது நேட்டோ விதிமுறைக்கு முற்றிலும் முரணானதே. நேட்டோ நாடுகள் கூட்டாக இயங்க வேண்டும் என்பதுவும் போர் மற்றும் இயற்கை அழிவுகள் பற்றிய பாதிப்பினை அங்கத்துவ நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவற்றின் ஆலோசனைக்கு அமைவாகவே நடந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அமெரிக்காவின் படைகளின் வெளியேற்றத்தால் சிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் சிரியாவில் நிகழ்ந்துவரும் போரின் விளைவாகவும் ஈரான் விவகாரத்தினாலும் மற்றும் துருக்கி ரஷ்ய தயாரிப்பான எஸ்-400ஐ கொள்வனவு செய்துள்ளமையாலும் ரஷ்யாவின் செல்வாக்கு இராணுவ ரீதியாக அதிகரித்துள்ளதை தெளிவாக உணர்த்துகிறது. அது மட்டுமன்றி ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை (05.12.2019) சமகாலத்தில் பரிசோதித்துள்ளதாகவும் அது அணுவாயுதத்தை காவிச் செல்லும் வல்லமை உடையதெனவும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதரகங்கள் ஐ.நா. வுக்கு அறிவித்துள்ளன. இவை அனைத்தும் நேட்டோ நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மூன்றாவது துருக்கி நேட்டோவின் தீர்மானம் ஒன்றுக்கு எதிராக வாக்களித்துள்ளமை. அதாவது ரஷ்யாவின் எல்லையோரம் முழுவதும் அமைந்துள்ள, நேட்டோவில் அங்கம் பெறும் கிழக்கு மற்றும் போல்டிக் குடியரசுகளில் நேட்டோ துருப்புக்கள் முகாமிடவேண்டும் என்ற தீர்மானத்தை துருக்கி நிராகரித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் தாக்குதலை தவிர்க்கவும், தடுக்கவும் உதவும் என்ற அடிப்படையிலேயே தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் துருக்கி, சிரியாவின் வடக்கில் குர்திஸ் படைகளுக்கு எதிராக தாம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது. அதனை ஏற்றால் மட்டுமே இத்தீர்மானத்ைத தாம் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் நேட்டோவின் இன்னோர் விதியின் பிரகாரம் நேட்டோ எடுக்கும் தீர்மானத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அத்தீர்மானம் நடைமுறைக்கு வரும்.
இதனால் நேட்டோவின் முன் நகர்வுகளில் பிரதானமான விடயம் நெருக்கடியை அடைந்துள்ளது. ரஷ்யாவை கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும் மேற்காசியாவுக்குள்ளும் எதிர்கொள்வதற்கு பதிலாக தமக்குள் மோதிக் கொள்ளும் துயரம் ஏற்பட்டுள்ளது. இது நேட்டோவின் எதிர்காலத்தை பாதிக்கும் விடயமாக மாறியுள்ளது.
நான்காவது, நேட்டோ நாடுகள் எதிர்நோக்கும் பிரதான நெருக்கடி நிதி தொடர்பான விடயமாகும். நேட்டோவிலுள்ள நாடுகள் பாதுகாப்பிற்கான செலவீனத்தின் அளவு பொறுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்படுத்தியிருந்தார். நேட்டோ நாடுகளுள் அதிக துருப்புக்களையும் ஏவுகணைப் பாதுகாப்பு நிலைகளையும் அமெரிக்காவே அதிகம் கொண்டுள்ளது.
ஏறக்குறைய அறுபத்தையாயிரம் துருப்புக்களை ஐரோப்பாவுக்குள் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இவை அனைத்தும் நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்குள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். ஆனால் ஏழு நாடுகள் மட்டுமே தமது தேசிய வருமானத்தில் இரண்டு சதவீதத்தை நேட்டோவின் பாதுகாப்பு செலவீனத்திற்காக செலவிடுகின்றன. அதில் அமெரிக்காவும் ஒன்றாகும். ஜேர்மனி 1.3 சதவீதத்தையே வழங்குகிறது. 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ, நிதி நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறது. 2014 இல் நேட்டோ ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. 2024 இல் அனைத்து நேட்டோ நாடுகளும் தமது தேசிய வருமானத்தில் இரண்டு சதவீதம் வழங்க வேண்டும் என்று.
இது குறித்து ட்ரம்ப் குறிப்பிடும் போது நேட்டோ அங்கத்துவ நாடுகள் மீது கோபமடைகிறேன். காரணம் அங்கத்துவ நாடுகள் முழுமையாக நிதியினை வழங்குவதில்லை. அந்நாடுகளை குற்றவாளிகளாக கருகிறேன் என்றார். இது நேட்டோ அங்கத்துவ நாடுகளை பெரும் நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது.
எனவே, நேட்டோ நாடுகள் தமக்குள் குழம்பியிருப்பதுடன் தமது எதிரியை எதிர்கொள்வதற்கான உபாயங்களை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவினதும் சீனாவினதும் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள் நேட்டோ வந்துள்ளது. இதற்கு காரணம் அடிப்படையில் ஐரோப்பாவுக்குள் எழுந்துள்ள பொருளாதார அரசியல் நெருக்கடியும் நோட்டோவின் விஸ்தரிப்புமேயாகும். அதுமட்டுமன்றி ரஷ்யாவினது இராணுவ ரீதியான எழுச்சியும் அதன் ஒத்துழைப்பும் மேற்காசியா வரை அதன் செல்வாக்கினை வளர்த்துள்ளது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்