![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/08/Slideshow-1200x494.jpg?itok=uF7FkV5y)
இலங்கை தனது பொருளாதாரத்தை நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே திறந்து விட்டிருந்த போதிலும் இற்றைவரை திறந்த பொருளாதார முறைமையின் மூலம் அடைந்திருக்கக்கூடிய நன்மைகளில் சிலவற்றையேனும் அடைய முடியாமல் போன ஒரு நாடாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு சற்றேறக் குறைய சமகாலத்தில் திறந்த பொருளாதார கொள்கைகளை நோக்கி நகர்ந்த தாய்லாந்து போன்ற நாடுகள் அதன்மூலம் பாரிய அடைவுகளை எய்தின.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் வர்த்தக மேம்பாடு ஏற்பட வேண்டும். குறிப்பாக ஏற்றுமதிகளின் பன்முகப்படுத்தல் ஏற்றுமதிகளின் விரிவாக்கம் என்பன தெளிவாக அவதானிக்கக் கூடிய வகையில் ஏற்படவேண்டும். ஆயினும் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகச் செயலாற்றம் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவோ திருப்திகரமானதாகவோ இல்லை என்பதே யதார்த்த நிலையாகும்.
உதாரணமாக, கடந்த 2018ம் ஆண்டு இலங்கையின் மொத்த ஏற்றுமதிகளின் பெறுமதி 11, 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2017 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.7% அதிகரிப்பாகும். ஆயினும் நான்கு தசாதப்த காலமாக திறந்த பொருளாதாரக் கொள்கையை பெரும்பாலான காலப்பகுதியில் பின்பற்றிய இலங்கை போன்ற ஒரு நாடு இதைவிட பலமடங்கு சிறப்பாக செயற்பட்டிருக்க முடியும்.
அதேபோன்று 2018ல் இலங்கையின் இறக்குமதிகள் 22.233 மில்லியன் டொலர்களாக இருந்தன. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6% அதிகரிப்பாகும். இதிலிருந்து இலங்கையின் ஏற்றுமதிகளை விட இறக்குமதிகள் துரிதமாக அதிகரிப்பதும் தெரிகிறது. ஏற்றுமதிகளின் இரண்டு மடங்கு இறக்குமதி செய்யப்படுவதால் வர்த்தகத் துண்டுவிழும் தொகை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கிறது. 2017ல் வர்த்தக துண்டுவிழும் தொகை 9.6 பில்லியன் டொலர்களாகும். 2018ல் இது 10.3 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது எதிர்வரும் காலங்களிலும் இது மேலும் விரிவாகக்கூடிய சாத்தியங்களே தென்படுகின்றன.
சுற்றுலா, நிதி மற்றும் வர்த்தக சேவைகளின் விரிவாக்கம் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டில் இலங்கையர்கள் உழைத்து அனுப்பும் பணம் போன்ற கணிசமான டொலர் வருவாயை இலங்கைக்குள் கொண்டு வந்தாலும் அவை வர்த்தக பற்றாக்குறையை ஈடுசெய்யும் அளவுக்கு போதுமானதாக அமையவில்லை.
இலங்கையின் ஏற்றுமதிகளின் உள்ளடக்கமானது சற்று முன்னேற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு விவசாய ஏற்றுமதி பொருளாதாரமாக இருந்து படிப்படியாக கைத்தொழில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி மெதுவாக முன்னேறிச் செல்வது அவதானிக்கப்படுகிறது.
ஏற்றுமதிகளின் உள்ளடக்கம்
கைத்தொழில் பொருள் 77.9%
விவசாய ஏற்றுமதிகள் - 21.7%
கனிய ஏற்று மதிகள் - 0.4%
அட்டவணையில் ஏற்றுமதிகளில் 21.7 சதவீதம் மட்டுமே விவசாய ஏற்றுமதிகளாக காணப்படுகின்றன. இலங்கையின் கைத்தொழில் ஏற்றுமதிகள் அதிகரித்துச் செல்கின்றமைக்கு சர்வதேச நியமங்களின் படி விவசாயக் கைத்தொழில் பொருள்களும் கைத்தொழில் பொருட்களாக மீள் வரைவிலக்கணப் படுத்தப்பட்டமையும் ஒரு காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் இலங்கை விவசாய ஏற்றுமதிகளில் தங்கியிருக்கும் ஒரு நாடாக இனிமேலும் கருதப்பட முடியாது.
ஏற்றுமதிக் கட்டமைப்பு கைத்தொழில் ஏற்றுமதிகளை நோக்கி நகர்ந்துள்ள போதிலும் அப் பொருட்களின் ஏற்றுமதிப் பெறுமதிகள் போதிய விரிவாக்கத்தை எய்த முடியாமல் மந்த கதியிலான வளர்ச்சியை பதிவு செய்கின்றமை முக்கிய பிரச்சினையாகும்.
மத்திய வங்கி தரவுகளின் படி 2018ல் இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளின் உள்ளடக்கத்தை பின்வருமாறு காட்டலாம்
தைக்கப்பட்ட ஆடை - 44.7%
இறப்பர் ஏற்றுமதி 7.4%
பெற்றோலியம் 5.2%
உணவு மற்றும் குடிவகைகள் 3.9%
இயந்திர உபகரணங்கள் 3.7%
இரத்தினக்கற்கள், வைரம், ஆபரணங்கள் 2.3%
தோல்பொருள்கள் பாதணிகள் 1.2%
போக்குவரத்து உபகரணங்கள் 1.01%
ஏனையவை 8.4%
இதிலிருந்து இலங்கையின் ஏற்றுமதிகள் தைக்கப்பட்ட ஆடைகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளதை காட்டுகிறது. அது தவிர கணிசமான விரிவாக்கம் அண்மைக்காலத்தில் ஏற்படவில்லை என்பதை மேலேயுள்ள தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கையின் சேவைத்துறை ஏற்றுமதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் பொருள் ஏற்றுமதி வர்த்தகத்திலும் உறுதியான பன்முகப்படுத்தலும் விரிவாக்கமும் ஏற்படவில்லை. பொருள் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதன் மூலமே ஒரு நாடு தனது ஏற்றுமதி கட்டமைப்பை வலுவானதாக மாற்ற முடியும்.
சுற்றுலாத்துறை மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள போதிலும் அது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிர்ச்சிகளால் உடனடியாகப் பாதிக்கப்படக் கூடிய, எளிதில் உடைந்து விழக்கூடிய ஒரு துறையாகும். எனவே கைத்தொழில் ஏற்றுமதித் துறையை வலுவானதாகக் கட்டியெழுப்பக்கூடிய கொள்கைகளும் செயற்பாடுகளும் உடனடித் தேவையாகவும் அதிகூடிய கவனத்தை செலுத்த வேண்டிய துறையாகவும் உள்ளது.
இதனைச் செய்வதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு தவிர்க்க முடியாத ஒரு தேவைப்பாடாக உள்ளது.
இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் கொள்கைகளை அமுல்படுத்தும் அதேவேளை, ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியாது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். உலக வர்த்தக நிறுவனத்தின் ஏற்பாடுகளின் படி இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
உதாரணமாக விவசாயப் பொருள். இறக்குமதிகளின் மீது தீர்வைகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் உள்ளன.
தற்போது உலகளாவிய ரீதியில் வர்த்தகத்திற்கு எதிரான போக்குகள் விரிவடைந்து வருகின்றன. மேற்குலக நாடுகள் மட்டுமன்றி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா தொடங்கிவைத்த இறக்குமதிகள் மீது வரிவிதிக்கும் செயற்பாடுகள் ‘பழிக்குப் பழி’ என்ற அடிப்படையில் ஏனைய வர்த்தக பலசாலிகளாலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் மற்றுமொரு வர்த்தக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறானதொரு வெளியகப் புறச்சூழலிலேயே இலங்கை தனது ஏற்றுமதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே ஏற்றுமதியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும் எதிர்வுகூற முடியாதுள்ளது.
இலங்கையின் இறக்குமதிகளின் உள்ளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது.
இறக்குமதிகளின் உள்ளடக்கம் 2018
இடைநிலைப் பொருள்கள் 56.2%
நுகர்வுப் பொருள்கள் 22.4%
மூலதனப் பொருள்கள் 21.1%
ஏனையவை 0.3%
இலங்கையின் இறக்குமதிகளில் 77.6 மூலதனப் பொருள்களாகவும் இடைநிலைப் பொருள்களாகவும் உள்ளது. இது நாட்டின் பொருளாதார உட்கட்டுமானங்களின் வளர்ச்சிக்கும் கைத்தொழில் விரிவாக்கத்திற்கும் அவசியமாகும். இறக்குமதி செய்யப்படும் பொருள் வகைகளை பின்வருமாறு நோக்கலாம்.
புடைவைகள் 12.9%
பெற்றோலியப்பொருள் 13.2%
மசகெண்ணெய் 4.4%
இரசாயன பொருள் 4.1%
பிளாஸ்டிக் 3.1 %
தங்கம் 2.0%
அடிப்படை உலோகம் 3.1%
ஏனைய பொருள்கள் 13.5%
புடவைகள் இலங்கையின் ஆடை தயாரிப்புக்கு அவசியமான உள்ளீடுகளாகும். அத்துடன் ஏனைய இறக்குமதி வகைகளும் உள்நாட்டு கைத்தொழில்களின் உள்ளீடுகளாகவோ இடைநிலை பொருள்களாகவோ உள்ளன. எனவே இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவது இலங்கைக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. உணவுப் பொருள் இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்ளூரில் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கலாம் இது மக்களுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை.
கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்