லொஸ் ஏஞ்சல்ஸ்; தெருவெங்கும் கஞ்சா வாடை | தினகரன் வாரமஞ்சரி

லொஸ் ஏஞ்சல்ஸ்; தெருவெங்கும் கஞ்சா வாடை

பாலியல் பொருட்களை விற்கும் ஒரு கடை

அதற்காக அமெரிக்கப் பொலிஸார் ஒன்றும் அலட்சியமாக இல்லை. அவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை விரட்டிப் பிடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடுகளும் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகின்றது. போர்ட்லன்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது. அங்கு பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும் அவர் உயிருடன் இருக்கும் வரை பொலிஸ் திணைக்களம் அவரை கண்காணிக்கும் என்றார் அவர். அக்குற்றவாளிக்கு பாடசாலைகளுக்கு அருகில் குடியிருக்க அனுமதி கிடையாது. ஒருதடவை அவ்வாறான குற்றம் புரிந்த ஒருவர் இன்னுமொரு தடவை அதே குற்றத்தைச் செய்ய யோசிக்க மாட்டார் என்பதற்காகவே இவ்வாறான ஏற்பாடு. 

கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சல்ஸில் நாம் தங்கியிருந்தபோது ஒரு நாள் இரவு ரயிலேறி ஹொலிவூட் பார்க்கச் சென்றோம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஹொலிவூட் நகரின் தெருக்களில் உச்ச ஹொலிவூட் நட்சத்திரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருககும். வெளியிலிருந்து அந்நகரத்தைப் பார்க்க வருபவர்கள் தமக்குப் பிடித்தமான நடிகர் நடிகைகளின் பெயர்களை குனிந்த தலை நிமிராமல் தேடி படம் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.  

ஆனால் ஒன்றை சொல்லித்தான ஆக வேண்டும். கலிபோர்னியாவில் கஞ்சாவுக்கு முற்றிலும் அனுமதியுண்டு. விதம்விதமான கஞ்சா இலைகள் வண்ண வண்ண பெட்டிகளில் பகிரங்கமாக அங்கு விற்கப்படுகின்றன. தெருவெங்கும் கஞ்சா வாடை! கஞ்சாவுடன் இன்னும் அனுமதி பெற்ற பல வகை போதைகள், லேகியங்களும் அங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன.சமீபத்தில் கனடாவும் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்கியதை நான் நினைத்துக் கொண்டேன். 

ஹொலிவூட்டில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவசியமான உபகரணங்கள், பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து பாலியல் தொடர்புடைய பொருட்களையும் அங்கு கடைகளில் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். இவற்றை அவதானித்தபோது செல்லச் சித்திரவதையுடனான பாலியல் ஷேட்டைகள் அங்கு ஊக்குவிக்கப்படுகிறது என்பதே எனது கணிப்பாக இருந்தது.

கைகள், கால்களைக் கட்டும் கயிறுகளும், கை விலங்குகளும், நபரைக் கட்டி தொங்கவிடும் கயிறுகளும், கண்களைக் கட்டும் துணிகளும் இக்கடைகளில் ஏராளமாக காணக்கிடைத்தது. இன்பம் சலித்துவிடக்கூடாது என்பதற்காக மனிதன் வெவ்வேறு கோணங்களில் அதனை வடிவமைத்து ரசிக்கின்றான் என்பதை இங்கு உணர்ந்து கொண்டேன். அமெரிக்காவில் வெ ளிப்படையாகக் காண முடிந்ததை உலகெங்கும் இரகசியமாகவும், மறைபொருளாகவும், பட்டும் படாமலும் மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை உள்ளடக்கும் வகையில்தான் பல்வேறு நாடுகளில் வெவ்வேறான கலாசாரங்கள் அம்மக்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் என்னால் மட்டுமல்ல, உங்களாலும் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில்தான்   காமசூத்ராவும் தோன்றியது. பண்டைய இந்திய கலாசாரத்தில் பாலியல் வெளிப்படையாகவே போற்றப்பட்டது. இதனை நேபாளத்திலுள்ள கோயில் சிற்பங்களில் இன்றும் காணலாம். கிறிஸ்தவத்தின் இஸ்லாத்தின் வருகையின் பின்னரே படிப்படியான சமூக சிந்தனை மாற்றங்கள் ஏற்பட்டன. 

ஹொலிவூட்டில் நள்ளிரவு ஒருமணியிருக்கும் ஒரு பெண் வீதியிலிருந்தபடி ஒவ்வொருவரையும் நேரில் பார்த்து படம் வரைந்து கொடுத்தார். எனது நீண்ட நாள் ஆசையை அப்போது நிறைவேற்றிக் கொண்டேன். நானும் காசுக்கு என்னை வரைந்து கொண்டேன். குளிரிலும் நித்திரைக் கலக்கத்திலும் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருந்ததால், அப்பெண் படத்தை வரைந்து முடித்ததும்தான் நான் சிரிக்க மறந்து​போனது என் நினைவுக்கு வந்தது. 

அமெரிக்காவைப் பொறுத்தவரை அனைத்துப் பெண்களும் மிகவும் கண்ணியமான முறையிலேயே ஆடைகள் அணிந்திருப்பர். என்றாலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் களியாட்ட விடுதிகள் களைகட்டி இருக்கும் என்பதால் அதற்குச் செல்லத் தயாராகி வரும் பெண்களின் ஆடைகள் தலைகீழாக இருக்கும். அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கின்றார்களா என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கும்!  

அங்கே 'டேட்டிங்' என்ற வார்த்தை சர்வ சாதாரணம். ஒரு ஆணும் பெண்ணும் பிடித்தால் வெளியே தனியாக சென்று சந்திப்பார்கள். சிலர் கதைத்து, சிரித்துவிட்டு வருவார்கள். சிலர் உடலுறவு வரை செல்வார்கள். அதற்காக எல்லா டேட்டிங்கும் அத்துமீறியது என்று சொல்வதற்கில்லை. ஒரு ஆண் விரும்பினால் தினம் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்லும் கலாசாரமும் அங்கு உண்டு. இதற்காக விசேட வலைத்தளங்களில் பெண்களையும் ஆண்களையும் தெரிவு செய்யும் வசதி அங்கு கிடைக்கிறது. நான் அறிந்தவரையில் அங்கு விபசாரிகள் இல்லை. அனைத்தும் டேட்டிங் எனும் பெயரில் நாகரீகமாகவே முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் ஒரு பெண் விரும்பாதவிடத்து அவரை பலவந்தப்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்காக அவர்களிடையே உண்மைக் காதல் இல்லையென்பதற்கில்லை. காதலுக்காக உயிரைக் கொடுக்கும் உத்தமர்களும் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். 

அமெரிக்கப் பயணத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம்தான் நாம் இரண்டு அமெரிக்க குடும்பங்களுடன் நேரத்தை செலவிட முடிந்தமை. எங்கள் குழுவைச் சேர்ந்த மூவர் ஒரு குடும்பத்தாரின் வீட்டுக்கு விருந்தினராக அனுப்பி வைக்கப்பட்டோம். யூட்டா மாநிலத்தில் நாம் இருந்தபோது 'சோல்ட்லேக் சிட்டி' எனும் இடத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தை சந்தித்தோம். அவர்கள் காதலித்து திருமணம் முடித்து 25 வருடங்களாக சந்தோஷமாக வாழும் தம்பதியினர். அவர்களது மகன்கள். கணவரின் தங்கைகள், அவர்களுடைய பிள்ளைகளென ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே இருந்தது. வார இறுதியை அவர்கள் என்ன வேலை இருந்தாலும் ஒன்றாக கூடி விடுவார்களாம்! வெள்ளையர்களின் குடும்பங்களில் காணப்படும் இக்கூட்டுக் குடும்ப மனப்பான்மையும் அந்நியோனியமும் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது! 

அதேபோன்று பிலடெல்பியாவில் நாம் சந்தித்த இன்னுமொரு நபர்தான் ஹெனா எனும் 75 வயது பெண்மணி. அவர் திருமணமாகாதவர். அவர் எங்களுடன் தனது பழைய கதைகள், தனிமை, எதிர்காலம் என்பன குறித்து பகிர்ந்து கொண்டார். தேசம் விட்டு தேசம் சென்றாலும் மனிதர்களின் பிரச்சினைகளும் கதைகளும் ஒன்றுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். 

போர்ட்லன்ட் மாநிலத்திற்கு மட்டுமான ஒரு பத்திரிகை நிறுவனத்தையும் பார்வையிடும் வாய்ப்பு எனக்கு அங்கிருந்த நாட்களில் கிடைத்தது. அப்பத்திரிகை நிறுவனரின் ஸ்தாபகரின் பெயர் மட்டும்தான் தங்களுக்குத் தெரியுமேயொழிய அவரை ஒருபோதும் நேரில் பார்த்ததில்லையென அப்பத்திரிகையின் செய்தி ஆசிரியர் எம்மிடம் தெரிவித்தார். இப்படியும் ஒரு ஊடக சுதந்திரமா? இங்கென்றால் அவரவர் தங்கள் அரசியல் தேவையை பூர்த்தி செய்வதற்காகத்தானே ஊடக நிறுவனங்களையே நடத்திக்ெகாண்டிருக்கிறார்கள்! இதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருந்தது. 

லொஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நாள் முழுவதையும் நாம் யுனிவர்சல் ஸ்டூடியோவில் கழிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த மறக்க முடியாத அனுபவம் அடுத்த இதழில்! 

(அடுத்த வாரம் முற்றும்)

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments