![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/14/q2.jpg?itok=7nfn127B)
தெற்காசிய விளையாட்டுப் போட்டில் இலங்கைக்கு முக்கியமானது. சர்வதேச அளவில் இலங்கை வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவதென்றால் தெற்காசிய விளையாட்டுப் போட்டி தான் ஆரம்பப் படி. ஒலிப்பிக்கில் சாதிப்பதற்கு, தெற்காசிய விளையாட்டுப் போட்டி என்ற அறையில் ஆடி இருப்பது அடிப்படை தகைமைகளில் ஒன்று.
எனவே, நேபாளத்தில் முடிவுற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இலங்கைக்கு ஒரு நல்ல சகுணம். 40தங்கம், 83வெள்ளி, 128வெண்கலம் என்று மொத்தமாக 251பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது இலங்கை. தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பெற்ற அதிகப் பதக்கங்களும் இதுதான்.
உண்மையில் இந்தியாவை பதக்கப் பட்டியலில் பின்தள்ளச் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. நேபாளம் 51தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தாலும் அதற்கான புறக்காரணிகள் பல உண்டு.
அதாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இலங்கைக்கு பல சாதகமான காரணிகளை விட்டு வைத்தே முடிந்திருக்கிறது.
நோபளத் தலைநகர் காத்மண்டு மற்றும் பொகாரா இரண்டு நகரங்களை பிரதானமாகக் கொண்டே கடந்த டிசம்பர் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. எந்த நகரில் நடந்தால் என்ன எங்கு பார்த்தாலும் குளிர். நண்பகல் தவிர்த்து காலையும் மாலையும் தற்பவெப்பநிலை 9பாகை செல்சியஸ் வரை இறங்கிவிடும். இதற்கு எந்த விளையாட்டில் பங்கேற்றாலும் போட்டிக்கு மேலதிகமாக ஒருபடி மேல் முயற்சித்தால் தான் ஒரு வெண்கலப் பதக்கத்தையேனும் எடுக்க முடியும். அதுபோக நான்கு, ஐந்தாவது இடங்களுக்கு வருவது கூட மதிப்புக்குரியதுதான்.
இருப்பினும் போட்டிகளுக்காக நேபாளத்தின் உட்கட்டமைப்ப வசதிகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அவைகளையும் வீரர்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே பதக்கம் வென்றது ஒருபக்கம் இருக்க அங்கே போட்டிகளில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளுக்கு கோடி வந்தனங்கள்.
இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை மெய்வல்லுநர் போட்டிகள் தான் இலங்கைக்கு முக்கியமானது. விளையாட்டுப் போட்டிகள் என்றாலே மெய்வல்லுநர் போட்டிகள் தான் முதன்மையானது. அந்த வகையிலும் இலங்கையின் சாதனை உச்சத்தை தொடுகிறது. 36பதக்கங்களைக் கொண்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இந்தியாவை பின்தள்ளி முதலிடத்தை பிடிக்க முடிந்தது பெரிய சாதனை. தடகளப் போட்டிகளில் இலங்கை மொத்தம் 15தங்கப் பதக்கங்களை வென்றதோடு 12வெள்ளி, 8வெண்கலப் பதக்கங்களையும் அள்ளியது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டிகளில் இலங்கை சார்பில் பங்கேற்ற மிக இளம் வீராங்கனையான 20வயது டில்ஷி மஹீசாவுக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்றிருக்கிறது. 400மீற்றர், 800மீற்றர் மற்றும் 400மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கம் வென்றார். அதாவது தடகளப் போட்டிகளில் அதிக தங்கங்களை அள்ளியவர் இவர் தான்.
அடுத்தது நிலானி ரத்நாயக்க ஒரு மாற்று வீராங்கனையாக இரண்டு தங்கங்களை வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தார். அவர் 1500மீற்றர் மற்றும் 5000மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆனால் தெற்காசிய விiளாயட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் வீதி விபத்தில் சிக்கிய நிமாலி லியனாரச்சிக்கு பதிலாக பங்கேற்றே அவர் 1500மீற்றர் ஓட்டப் போட்டியில் வென்றார் என்பது சிறப்பம்சம்.
இவர்கள் தவிர தடகளப் போட்டிகளில் லக்சிக்கா சுகந்தி, சாரங்கி சில்வா, அருண தர்ஷன ஆகியோரும் இரட்டைத் தங்கங்களை வென்றனர். இதில் ஆண்களுக்கான 100மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இமாஷ ஏஷான், சானுக்க சந்தீப்ப, வினோஜ் டி சில்வா மற்றும் யுபும் பிரியதர்ஷன ஆகியோர் புதிய போட்டிச் சாதனையை படைத்தனர். அவர்கள் 39.14விநாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார்கள்.
இதற்கு முன்னர் 2004தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 39.91விநாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்ததே 15ஆண்டுகளாக சாதனையாக நீடித்து வந்தது.
என்றாலும் தெற்காசியாவின் வேகமான வீரர் மற்றும் வீராங்கனை பட்டங்களை இலங்கை வீராங்கனைகள் வெல்ல முடியாமல் போனது ஒரு குறைதான்.
ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் மாலைதீவின் ஹசன் சாயித் 10.41விநாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்து முதல் இடத்தை பிடிக்கும்போதும் இந்த கௌரவத்திற்கு சொந்தம் கொண்டாடி வந்த இலங்கை வீரர் ஹிமேஷ ஏஷான் வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். தெற்காசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் குட்டித் தீவுகளான மாலைதீவு பெற்ற முதல் தங்கம் இது தான்.
பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப் போட்டியிலும் இந்தியாவின் அர்ச்சனா சுசீந்திரன் 11.80விநாடிகளில் போட்டித் தூரத்தை கடந்து முதலிடத்தைப் பெறும்போது அமேஷா டி சில்வாவுக்கு இரண்டாவம் இடமே கிடைத்தது.
என்றாலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை முதல் தங்கத்தை வென்றது சிறப்பு. ஹிருனி விஜேவர்தன அந்தச் சாதனையை புரிந்தார்.
1993ஆம் ஆண்டுதான் இலங்கை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. 26ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை மீண்டும் அந்த உச்சத்தை எட்டி இருக்கிறது.
தடகளப் போட்டிகளுக்கு அடுத்து நீச்சல் போட்டிகள் இலங்கைக்கு கௌரவத்தை தந்தது. இதனை பொத்தாம் பொதுவாக கூறிவிட முடியாது. அந்த கௌரவத்தை தந்தவர் வேறு யாருமல்ல மத்தியூ அபேசிங்க. கடந்த முறையைப் போன்றே இந்த முறையும் அவர் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற தனது சொந்த சாதனையையே சமப்படுத்தினார்.
2016ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மத்தியூ அபேசிங்க 7தங்கம், 2வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்காக அதிக தங்கம் வென்ற ஜூலியன் போலிங்கின் சாதனையை முறியடித்திருந்தார். இம்முறை அவர் 7தங்கம், ஒரு வெள்ளியை வென்றார்.
நீச்சல் போட்டிகளை அடுத்து டைகொண்டோவில் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் முதல் தங்கப் பதக்கமும் டைகொண்டோ போட்டியில் தான் கிடைத்தது. அந்த தங்கப் பதக்கத்தை ரனுக்க பிரபாத் வென்று தந்தார்.
பளுதூக்கல் போட்டியில் இலங்கை இன்னும் தங்கங்களை அள்ள சாத்தியங்கள் இருந்தபோதும் இரண்டு வென்றது பெரிய செய்தி.
ஆனால் கடற்ரை கரப்பந்தாட்டத்தில் இலங்கை தனிக்காட்டு ராஜாவானது. கடற்ரையே இல்லாத நேபாளத்தில் செயற்கை கடற்கரையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர்களின் இரண்டு அணிகள் பங்கேற்றன. அந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமக்குள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பகிர்ந்துகொண்டன.
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் நாடான நேபாளத்தின் விருப்பத்திற்கு அமைய சேர்க்கப்பட்ட கொல்ப் போட்டியில் 2தங்கங்களை வெல்வதற்கு இலங்கையால் முடிந்தது. வுஷு மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் இலங்கைக்கு தலா 2தங்கப் பதக்கங்கள் கிடைத்தது எதிர்காலத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
என்றாலும் குத்துச் சண்டையில் இலங்கை தங்கப் பதக்கம் ஒன்றை வென்றது 20ஆண்டுகளில் முதல் முறையாகும். ஆண்களுக்கான 81கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற ருமேஷ் சந்தகலும் அந்தத் தங்கப் பதக்கத்தை வென்றார்.
குத்துச் சண்டை போட்டிகளில் இலங்கை இம்முறை ஒரு தங்கத்துடன் இரண்டு வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகமாகும். கபடிப் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றாலும் இலங்கை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப் போட்டிக் முன்னேறியதே இது முதல் முறை தான். என்றாலும் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த முடியாமல்போனது.
அணி நிலை போட்டிகளில் இலங்கை சோபிக்காதது பெரிய ஏமாற்றம். இலங்கைக்கு அறிமுகமே இல்லாத கோ கோ விளையாட்டில் பதக்கம் வெள்ளவில்லை.
பெரிதும் அறிமுகமான கால்பந்துப் போட்டியிலும் பதக்கம் வெல்லத் தவறியது. நேபாளத்திற்கு எதிரான விறுவிப்பான போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக கோல் ஒன்றை பெற்று போட்டியை சமநிலை செய்த இலங்கை கால்பந்து அணி பூட்டானுக்கு எதிரான போட்டியில் மூன்று கோல்களை விட்டுக் கொடுத்து பதக்கம் இன்றி நாடு திரும்பியது.
கிரிக்கெட்டில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றாலும் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்காத நிலையில் தங்கம் வெல்லாதது பெரிய ஏமாற்றம்.
கரப்பந்தாட்டம், கைப்பந்தாட்டப் போட்டியில் வெண்கலம் வெல்வதென்பது விளிம்பு நிலை திறமை மாத்திரமே. இவ்வாறான விளையாட்டுகளில் இலங்கை தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் இந்த அணிகளை போட்டிகளில் பங்கேற்கச் செய்வது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் வெளிநாடுகளில் போட்டிகள் நடைபெறும்போது அணி நிலை போட்டிகளில் பங்கேற்பதென்பதே ஒரு சுமை தான்.
எப்படி இருந்தாலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை எதிர்பார்த்த சாதனையை செய்திருக்கிறது. என்றாலும் இது ஆரம்பம் தான், ஆசிய விளையாட்டுப் போட்டி, பொதுநலவாயப் போட்டி, சர்வதேச தடகளப் போட்டி, ஒலிம்பிக் போட்டிவரை இது ஒரு நீண்ட பயணம்.
எம்.எஸ்.எம்.பிர்தௌஸ்