![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/21/q1.jpg?itok=h4kxyeOU)
இலங்கை மண்ணில் இலைமறை காயாக இருக்கின்ற விளையாட்டு வீரர்களை இனங்கண்டு, அவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, எயார்டெல் தொலைத்தொடர்பு நிறுவனமும் தெரன ஊடக நிறுவனமும் இணைத்து, தேசிய மட்டத்தில் நடாத்திய வேகப் பந்து வீச்சுப் போட்டியில் 19வயது மேல் பிரிவில் தேசிய மட்டத்தில் 2வது இடத்தப் பெற்று, கிழக்கு மாகாணத்துக்கே பெருமை தேடித் தந்த திருகோணமலை கருமலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயிலாப்தீன் முகம்மது பஹீமுடனான நேர் காணல்.
கேள்வி:- விளையாட்டுத்துறையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் அற்ற திருகோணமலை மாவட்ட பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருமலையூற்று எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்த உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
எனது ஆரம்பக் கல்வியை எங்களது பிரதேச பாடசாலையான
வெள்ளை மணல் அல்- – அஸ்ஹர் வித்தியாலயத்தில் தொடர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அங்கு எனக்கு உடற்கல்வி பாடத்தை கற்பித்து தந்த சாதிக் ஆசிரியரே எனக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்திய முதல்வராவார்.
அவருடைய ஆலோசனையின் பேரில்தான் விளையாட்டுத்துறையில் பிரபல்யமான கிண்ணியா மத்திய கல்லூரிக்கு இடைநிலைக் கல்வியைத் தொடருவதற்காகச் சென்றேன். அங்கு சென்ற எனக்கு விளையாட்டுத்துறையில் மென்மேலும் ஆர்வம் ஏற்பட்டது.
கேள்வி:- கிண்ணியா மத்திய கல்லூரியில் இடைநிலைக்கல்வியில் இருந்து உயர்தரம் வரை கல்வி கற்ற நீங்கள் அங்கு விளையாட்டுத்துறையில் காட்டிய திறமைகள் பற்றி கூற முடியுமா?
2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியின் 19வயது பிரிவின் கீழ், எமது பாடசாலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. இதில் நான் சிறப்பாக பந்து வீசி எனது அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தேன். அதே போன்று இதே வருடம் தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில்
3ஆம் இடத்தைப் பெற்றது. இதிலும் நான் எனது திறமையை வெளிப்படுத்தினேன். எனவே, எனது திறமைக்கு களம் அமைத்து தந்த கிண்ணியா மத்திய கல்லூரியையும் அதன் பயிற்சியாளர்களையும் என்னால் மறக்கவே முடியாது.
கேள்வி:- கடின பந்துவீச்சுப் போட்டியில்தான் மணிக்கு 138கிலோமீற்றர் வேகத்தில் வீசி இந்த சாதனையை நிலை நாட்டியுள்ளீர். எனவே கடின பந்து வீச்சு தொடர்பான பயிற்சிகளை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்?
எனது பிரதேசத்திலோ அல்லது கிண்ணியா பிரதேசத்திலோ கடின பந்து கிரிகெட்டுக்கான வசதிகள் மிகக் குறைவு. இதன் காரணமாக நகர்புறத்தை நாட வேண்டிய தேவையேற்பட்டது. இந்த நிலையில் நான் உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போதே, திருகோணமலையில் உள்ள சென் அந்தனிஸ் கிரிகெட் கழகத்தில் சேர்ந்து கடின பந்துக்கான பயிற்சியைப் பெற்றேன். 2018ஆம் ஆண்டு பிரிவு 3க்காக நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் அந்தனிஸ் அணி சம்பியனானது. இந்தப் போட்டித் தொடரில் கடின பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் எனக்கு நன்கு பயிற்சி கிடைத்தது.
கேள்வி: - கிரிக்கெட்டில் மென்பந்து கடினபந்து ஆகியவற்றுக் கிடையிலான வேறுபாடுகள் பற்றி கூற முடியுமா?
ஆம், மென்பந்து விதி வரையறைகளைக் கொண்டிருக்கவில்லை. விரும்பிய இடத்தில் விரும்பிய மாதிரி விளையாடலாம். கடின பந்து என்பது, அதற்குரிய ஆள் அணியினர், உபகரணங்கள், மைதானம் போன்றன இருந்தால்தான் விளையாடலாம். இந்த நியதிகளால்தான் கடின பந்து கிரிகெட் விளையாட்டில் இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து காணப்படுவதோடு, மென்பந்தில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
மென் பந்தியில் திறமை காட்டுபவர்கள் கடின பந்திலும் திறமை காட்ட முடியும். இதற்கு நானே சிறந்த உதாரணம்.
கேள்வி :- திருகோணமலை மாவட்டத்தில் கடின பந்து கிரிக்கட்டுக்கான வசதிகள் குறித்து ஏதாவது கூறமுடியுமா?
இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை கடின பந்து கிரிக்கட்டுக்கான போதிய வசதிகள் இல்லையென்றே கூறலாம். திருகோணமலை நகர்புறத்தில் ஓரளவு இருந்தாலும் கிராமப் புறங்களில் அறவே இல்லை. உதாணமாக இலங்கையில் பிரதேச மட்டத்தில் ஆகக்கூடுதலான 52விளையாட்டுக்கழகங்களைக் கொண்ட கிண்ணியாவில், கடின பந்துக்கான ஒரு மைதானத்தைக் கூட காண முடியாதுள்ளது. இதனால் இந்த பிரதேச இளைஞர்களின் ஆற்றல்கள் வெளிவருவதில்லை.
இதே போன்றுதான் எந்தவொரு பாடசாலைகளிலும் கடின பந்து கிரிகெட்டுக்கான வசதிகளைக் காண முடியாதுள்ளது.
கேள்வி:- உங்களுடைய எதிர்கால இலட்சியம் என்ன?
தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்.
இப்போது நான், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தில் இணைந்து, கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறேன்.
இந்த நிலையில், தற்போது கொழும்பில் நடைபெற்று வருகின்ற முதற் தர போட்டியில் விளையாடுவதற்கான 20பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் எனது பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அண்மித்திருக்கிறேன் என்று உணர்கிறேன். இறைவன் தான் அந்த வாய்ப்பைத் தர வேண்டும். இந்த இடத்தில் எயார்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் தெரன ஊடக நிறுவனத்தையும் என்னால் மறக்கவே முடியாது.
கேள்வி:- உங்களைப் போன்று கிரிகெட் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் ?
வறுமை, குடும்ப பிரச்சினை மற்றும் ஏனைய வாழ்வியல் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, இளைஞர்களின் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். முயற்சியை தொடர வேண்டும். ஏதோ ஒருவகையில் அது பலனைத் தரும்.
எனது குடும்பத்தில் எட்டு பேர். எனது தகப்பன் ஒரு கடற்றொழிலாளி. ஒரு நாள் கடலுக்குச் சென்று மீன் படவில்லை என்றால் அன்றைய தினம் சாப்பாடு இல்லை.
சீரற்ற காலநிலை, கடல் கொந்தளிப்பு என்றால் வாரக் கணக்கில் சாப்பாடு இல்லை. எனது குடும்பத்தின் இந்த நிலையை ஒரு சவாலாக ஏற்று, எனது பெற்றோரின் தியாகத்தால் எனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தேன், இதன் காரணமாகத்தான் எனது திறமையை வெளிக்காட்ட முடிந்திருக்கிறது. ஆகவே தான் வாழ்க்கையில் எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் இளைஞர்கள் தங்களுடைய முயற்சியை கைவிடக் கூடாது.
கேள்வி:- சாதாரண ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்த நீங்கள், திருகோணமலை மாவட்டத்துக்கு மாத்திரம் அன்றி, கிழக்கு மாகணத்துக்கே பெருமை தேடிக் கொடுத்திருக்கிறீர். இந்த வகையில் மாகாண விளையாட்டுத் திணைக்களத்திடமிருந்து ஏதாவது உதவிகள் கிடைத்திருக்கின்றதா? நிறைய அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடமிருந்து ஏதாவது உதவிகள் கிடைத்திருக்கின்றதா?
இந்த கேள்வி எனக்கு வேதனையையும் கவலையையும் தருகின்றது. அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து ஒரு வாழ்த்துச் செய்தி கூட வரவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் எனது சமூகத்தைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட என்னை ஏதும் விசாரிக்கவும் இல்லை. எனக்கு பாராட்டுக்களையோ வாழ்த்துக்களையோ தெரிவிக்கவும் இல்லை. இதைக் கூட ஒரு சவாலாகவே ஏற்றிருக்கிறேன்.
நேர்கண்டவர் :-ஒலுமுதீன் கியாஸ்
(கிண்ணியா மத்திய நிருபர்)