ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்! | தினகரன் வாரமஞ்சரி

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்!

தலைப்பைப் பார்த்து அர்த்தத்தை எப்பிடி வேண்டுமானாலும் எடுத்துக் ெகாள்ளுங்கள். ஆட்சி செய்தவன் என்றும் எடுத்துக்ெகாள்ளலாம்.

ஆனால், நல்லவன் வாழ்வான் என்ற எம்.ஜி.ஆர் படத்தில், கவிஞர் ஆத்மநாதன் எழுதிய பாடலின் பல்லவிதான் இது!

அந்தப் பாடலில் வருகின்ற ஒரு சரணம்,

'தன்மானம் காப்பதிலே

அன்னை தந்தையைப் பணிவதிலே

பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காண

பொதுப்பணி புரிபவர்

மகிழ்ச்சியிலே'

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன்

அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்... என்று மீண்டும் பல்லவிக்குச் செல்வார்.

இங்கு சொல்ல வருவதே தன்மானம் பற்றியதுதான். மானம், அவமானம், தன்மானம் என்ற மூன்றில் எதனை இழந்தாலும் மிஞ்சுவது நடுவில் உள்ளதுதான்!

ஒருவர் மீது அபாண்டத்தைச் சுமத்தி அவரை அவமானப்படுத்தினாலும், எல்லாவற்றுக்கும் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் பார்த்துக்ெகாள்வான் என்று குற்றமற்றவர்கள் சொல்லிக்ெகாள்வார்கள். என்றாலும், அந்த ஆண்டவன் இப்போதெல்லாம், பக்கச்சார்பாகத்தான் நடந்துகொள்கிறான்; கெட்டவர்கள்தான் நன்றாக வாழ்கிறார்கள் என்கிறார் நண்பர். ஊடகத்துறையில் நடக்கின்ற அநியாயங்களைப் பார்க்கும்போது அவருக்கு அப்பிடித்தான் தோன்றுகிறதுபோலும்.

அடுத்தவன் எக்ேகடுகெட்டாலும் பரவாயில்லை, நமக்கு மூக்குடைபட்டாலும் பிரச்சினையில்லை; அவனுக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பது சிலரின் போக்கு. ஆண்டவன் என்பவன் வேறு யாருமல்ல; நாமேதான். நமக்குள்தான் அவன் இருக்கின்றான். நாம் செய்கின்ற நன்மை தீமைகளைப் பொறுத்தே நமக்கான பெறுபேற்றைத் தருவான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது. அதுதான் பிரபஞ்சத்தின் சக்தி என்கிறார் நண்பர். மனச்சாட்சி உள்ளவர்களுக்கு இந்த விளக்கம் அவசியமிராது!

'மானம்' என்ற சொல்லின் அடிச்சொல் 'மான்' ஆகும். மான் என்பது காட்டு  விலங்கினைக் குறிக்கும். ஒரே ஒரு முடி தன் உடலிலிருந்து விழுந்தால்கூட,  உயிரை விட்டுவிடுமென்று திருக்குறள் 'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா'  என்கிறது. 'மா' பொதுவாக விலங்கினைக் குறித்தாலும், கவரிமா என்னும்போது,  மானைத்தான் கூறுகிறது. திருவள்ளுவரும் 'மானம்' என்றோர் அதிகாரமே  ஒதுக்கியுள்ளதையும் அறிவோம். மானம் மனிதரோடு தொடர்புடையது என்பதற்கு  ஏராளமான சான்றுகள் சொல்லலாம்.

சிறைப்படுத்தப்பட்ட அரசன் ஒருவன், நீர் வேட்கை தணிக்க காவலாளியிடம்  வேண்டியபோது, வாயிற்காவலன் தன் இடக்கையால் கொடுத்த நீரை வாங்கவில்லை.  கதவருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். மறுநாள் காலை வாயில் காவலன் தான்  வைத்த இடத்திலேயே குவளைநீர் இருக்கக்கண்டதும், சிறையறைக்குள் உற்று  நோக்கும்போது மானமுள்ள அரசன் இறந்து கிடந்தான். மனிதரோடு தொடர்புடைய 'மான'த்தை 'மரியாதை'  என்றும் பேச்சுவழக்கில் காண்கிறோம். ஒருவனைத் திட்டும்போது   'மானங்கெட்டவனே' என்றும், ஆற்ற முடியாச் சினத்தில் 'மரியாதையைக்  கெடுத்திடுவேன்' என்றும் கூறக்கேட்டுள்ளோம்.

மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டால், 'அவமானம்' பண்ணிவிட்டான்  என்கின்றனர்; அல்லது அவமதித்துவிட்டான் என்கின்றனர். ஆக 'மானம்' என்பது  'மதிப்பு' என்ற சொல்லோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. 'எனக்கு என்ன மரியாதை  இருக்கு?' என்று வீட்டிலிருப்பவர் மற்றவர்களைக் கேட்கும்போது, கேட்டவருக்கு  'மதிப்பு' கொடுக்கவில்லை என்று பொருளாகிறது. அவமானம் என்பது அவமரியாதை  அல்லது மதிப்பின்மை என்று கொள்ளலாம்.

'மானி' என்பது மானமுள்ளவனுக்கு  நாம் இடும்பெயர். வெப்பத்தை அளக்கும் கருவியை வெப்பமானி என்று  படித்திருக்கின்றோம். 'மானி' இங்கு 'அளவி'தான். எல்லார்க்கும் மானம் உண்டு;  எல்லாரும் மானிகளே என்கிறார் வெ.சுப்பிரமணியன்.

பின், தன்மானம் என்று ஏன் சொல்லுகிறோம். இங்கே  'சுயகௌரவம்' என்ற பிறமொழிச் சொல்லை இணையாகக் கொள்ளலாம். பாரதக் கதையிலுள்ள  'கௌரவர்கள்' என்ற பெயரிலிருந்து 'கௌரவம்' என்ற வழக்கு உண்டானது என்பதில் ஐயமில்லை. 'சுயமரியாதை'யின் நேரடித் தமிழாக்கமே தன்மானம் என்பது.

பறவை இனத்தில் கூடுகட்டத் தெரியாத பறவை குயில் ஒன்றுதான். தன் முட்டையைக்  காகத்தின் கூட்டில் இட்டுச் செல்லும். காகமும் தன் முட்டைகளை  அடைகாப்பதுபோல் குயிலின் முட்டையையும் காத்து, குஞ்சானதும் விலக்கிவிடும். 

இந்த இடத்தில், குயில் 'தன்மானம்' பார்ப்பதில்லை. ஆனால், அது தன்மானம்  பார்க்கிற இடம். தான் உணவு எடுக்கும்போதுதான். எந்தச் சூழலிலும் குயில்  மரத்தை, மரக்கிளையை விட்டு இரைக்காக கீழிறங்காது என்பதுதான் உண்மை. அப்படி  குயில்போல ஏதாவது ஒரு பறவையைத் தரையில் பார்க்க நேர்ந்தால், அது குயில்  அல்ல.

இந்தக் கருத்தைச் சில ஊடகவியலாளர்களோடும் பொருத்திப் பார்க்க முடியும். சிலரை எளிதில் வளைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்ைகயை ஊட்டியிருப்பவர்கள் நம் சகபாடிகள்தான்.

'நான்கு பேர்கள் போற்றவும்

நாடு உன்னை வாழ்த்தவும்

மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை

நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை' என்று வேட்டைக்காரனில் கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடுவார்  எம்ஜிஆர். கடந்த 24ஆம் திகதி அவரின் நினைவு தினம் என்பதால் இந்த இடத்தில் அவர் வந்து போகிறார். யார் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்! அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!

Comments