வில்சன் சாகவில்லை; காலமானார்! | தினகரன் வாரமஞ்சரி

வில்சன் சாகவில்லை; காலமானார்!

இந்தப் பத்தியில் விசயங்கள் சுவாரஸ்யமாக வருவதற்கு உள்ளிருந்து பல ஆலோசனைகளைத் தந்திருக்கிறார் போல் வில்சன்! இன்று அவரே ஒரு விசயமாகிப்போய்விட்டார். சமூகப் பிறழ்வுகள், போதைப்பொருள் விற்பனை, நெறிகெட்ட செயற்பாடுகள் எனப் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதச் சொல்லுவார்.

பத்திரிகை அலுவலகம், கல்வி கற்ற பாடசாலை (றோயல் கல்லூரி), தேவாலயம் ஆகிய மூன்றையும் எப்பொழுதும் விட்டுக்ெகாடுக்க மாட்டார். அதேபோல்தான் தன் குடும்பத்தையும் அவர் நேசித்தார். சகபாடிகளிடமும் அன்பு செலுத்தினார். அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றுவோரை நண்பனாக நம்பாதே! என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், போல் வில்சனை ஒரு சகபாடி என்பதற்கும் அப்பால், ஒரு நம்பிக்ைகயான நண்பனாகவும் பலர் ஏற்றிருந்தார்கள் என்கிறார் நண்பர். அதற்குக் காரணம் அவர் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையைக் கொண்டிருந்ததுதான்.

தன்னுடைய மதத்தில் அவருக்கு எப்படி ஒரு பற்று இருந்ததோ, அதேபோன்று மற்றவர்களும் தங்களின் மதங்களைப் பற்றிக்ெகாள்வதற்கு உரிமையிருக்கிறது என்பதை திடமாக நம்பியவர். அதனால், எந்த மதத்தவருக்கும், இனத்தவருக்கும் தயங்காமல் உதவி செய்ய முன்வருவார் வில்சன்.

இந்தப் பத்தி எழுத்தைப் போட்டிக்கு அனுப்பி வையுங்கள் என்று பிரதம ஆசிரியர் குணராசா சொன்னபோது, தட்டிக்கழிக்க முடியவில்லை. இந்தப் பத்தியில் அவருக்கு ஒரு பிடிப்பு. என்றாலும், இதற்குப் பரிசு வழங்குவதற்கு யார் இருக்கிறார்கள்? பத்தி என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் நடுவராக இருக்கும் ஒரு போட்டிக்குப் பிரதிகளை அனுப்புவது வீண் வேலை என்று மனத்தில் ஓர் எண்ணமிருந்தாலும், அதைப் பிரதம ஆசிரியரிடம் சொல்ல ஒரு தயக்கம்! அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகத்தைக் களைந்து போட்டிக்குப் பிரதிகளை அனுப்புவதற்கு முழு மூச்சாக உதவி செய்தவர் வில்சன். பிரதிகளைத் தயார் செய்தது மட்டுமன்றி அவற்றைக் கொண்டுபோய் ஒப்படைத்தவரும் அவர்தான். தானும் போட்டிக்கு விண்ணப்பத்திருந்தாலும், மற்றைய சகபாடிகளும் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்று அவருக்கிருந்த பெருந்தன்மை வேறு எவருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

ஒரு தடவை, வெளிநாடொன்றுக்குப் பயிற்சிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருக்கும் செய்தியை, அலுவலக சகி ஒருவரிடம் நண்பர் சொல்லியிருக்கிறார். தனக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பத்தைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லியும், அந்தச் சகி, தனக்கு மட்டும் விண்ணப்பப்பத்திரத்தைக் கொண்டு நிரப்பி அனுப்பியிருக்கிறார். விண்ணப்பிப்பதற்கான முடிவு திகதியும் நெருங்கிவிட்டதால், நண்பர் ஒரு விண்ணப்பத்தைப் பெற்று அனுப்புவதற்கான கால அவகாசம் இருக்கவில்லை. கைவிட்டுவிட்டார். எந்த விண்ணப்பம் என்றாலும், கடைசி நேரத்தில் தடுமாறுவது ஒரு வழக்கமான குழப்பம் அல்லவா! சகி விண்ணப்பித்தார்; ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்டவர்களுடன் பணியாற்றும்போது வில்சன் போன்று ஒரு மனித நேயமிக்க மனிதருடன் ஒன்றாகப் பணியாற்றக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என்கிறார் நண்பர்.

அவரது வெற்றிடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது!

பொதுவாக ஒரு பணியைச் செய்யுமாறு ஒருவரிடம் சொன்னால், எடுத்த எடுப்பில் தயங்குவார்கள். நம்பிக்ைகவீனமாகப் பேசுவார்கள். உறுதியின்றிச் செல்வார்கள். ஆனால், வில்சனிடம் ஒப்படைக்கும் விடயம் எதுவாகவிருந்தாலும், எந்தத் தயக்கமுமின்றி ஏற்றுக்ெகாள்வார். அந்தப் பணியை நிறைவேற்றுவது பற்றிப் பின்னர் பார்த்துக்ெகாள்ளலாம். முதலில் கொடுத்த பொறுப்பை ஏற்றுக்ெகாள்ள வேண்டுமே! பிரதம ஆசிரியர் சொல்வதைப்போன்று தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவார்.

பக்க வடிவமைப்புப் பிரிவினருடன் ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். ஒப்புநோக்கும் பொறுப்பையும்கூடத் தானே ஏற்றுச் செய்து முடிப்பார். எவருக்காவது விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா, நிர்வாகத்திடம் கடன் பெற வேண்டுமா, மருத்துவச் செலவைத் திரும்பப் பெற வேண்டுமா, மேலதிக நேரக் கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா? அனைத்துக்கும்; அனைவருக்கும் வில்சன்தான்! எந்தப் பிரிவுக்குச் சென்று யாரைச் சந்திக்க வேண்டும்? எப்படி படிவங்களை நிரப்ப வேண்டும் என்தையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருந்தவர் வில்சன். இன்று அவர் இல்லாமல் கையுடைந்துபோய்விட்டது என்கிறார்கள் சகபாடிகள்.

என்னவோ தெரியவில்லை; எவரையும் பகைத்துக்ெகாள்ளாமல், சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக்ெகாள்ளுங்களன். அலுவலகத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் இன்னமும் வில்சன் செத்துப்போனார் என்பதை நம்ப மறுக்கிறார்கள். உண்மையில் வில்சன் செத்துப் போகவில்லைதான். அவர் காலமாகியிருக்கிறார்.

உலகில் பிறந்த ஒரு சிலருக்குத்தான் காலமாகும் பாக்கியம் கிடைக்கிறது. அந்த வகையில் வில்சனும் காலமாகிப்போயிருக்கிறார். அவர் என்றும் சகபாடிகள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊடகவியலாளர்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பது திண்ணம். இன்றைய இந்தப்பத்தியின் மூலமாகப் போல் வில்சனுக்கு மீண்டும் எமது அஞ்சலி!

Comments