சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை? | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை?

கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. 

கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. 

முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது 

இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இதேபோன்ற தடை அமெரிக்காவில் 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 

ஐரோப்பாவில் இந்தத் தடை நடைமுறையில் இல்லாத நிலையில் ஸ்கொட்லாந்து அரசாங்கம் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கவுள்ளது. 

முன்னாள் கால்பந்து வீரர்களில் மூன்றரை மடங்குக்கும் அதிகமானவர்கள் டிமென்ஷியா நோயினால் இறக்கின்றனர் என்பதை ஸ்கொட்லாந்து கால்பந்துச் சங்கத்தின் மருத்துவர் ஜோன் மக்லீன் வெளிப்படுத்தியுள்ளார். 

டிமென்ஷியா நோயுடன் கால்பந்தினைத் தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும் இந்த விளையாட்டில் தலையினைப் பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படும் என்பது பொது அறிவு என்று மருத்துவர் ஜோன் மக்லீன் கருதுகிறார்.   

Comments