உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் | தினகரன் வாரமஞ்சரி

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

உலகம் தற்போது கொரோனா வைரஸ் (Coronavirus) எனப்படும் புதுவகை வைரஸ்தொற்று அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த வைரஸ் சூரிய கதிர்களின் உருவத்தில் இருப்பதனால் அதற்கு கொரோனா வைரஸ் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். 

கடந்த வாரம் சீனாவின் வுஹான் (Wuhan) மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட இவ்வைரஸ் தொற்றின் காரணமாக 41 பேர் வரை இறந்திருப்பதாக  இதுவரை தெரிய வந்திருக்கிறது. ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம், நேபாளம், அமெரிக்கா மற்றும் இலங்கிலாந்திலும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.  

இந்த நோய்த்தாக்கம் எதிர்பார்க்கப்பட்டதை விட துரிதமாக பரவுவதாக சுகாதார அதிகாரிகளும் களத்தில் உள்ளவர்களும் கூறுகின்றனர். எனவே உலகின் பல்வேறு நாடுகளும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் விழிப்புடன் செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. 

இப்போது புதிதாக வந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று ஒன்றும் வியப்பூட்டும் வகையில் வந்து சேர்ந்ததல்ல. புதிய மில்லேனியத்தின் துவக்கத்தில் இருந்து நோக்குவோமாயின் 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கொரோனா வைரஸ் (SARS Corona virus) எனப்படும் வைரஸ்தாக்கம் ஆசிய நாடுகளில் துரிதமாகப் பரவி சுமார் 800 பேர் வரையில் இறந்தனர். 

அதேபோல் 2014- _  2016 காலப்பகுதியில் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் துரிதமாக பரவிய இபோலா (Ebola) வைரஸ் தொற்று காரணமாக 11,000 பேர் வரையில் மாண்டனர். இதே காலப்பகுதியில் பிரேஸில் நாட்டில் கண்டறியப்பட்ட சிக்கா (Zika) வைரஸ் காரணமாக பலநூறு பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு காலத்திற்கு காலம் புதிது புதிதாகவும் அல்லது மீண்டும் மீண்டும் நோய்க்கிருமிகள் உருவாகி மனிதர்களை அச்சுறுத்தி வருவதனை அவதானிக்க முடிகிறது இவற்றுக்கு அப்பால் நுளம்பினால் பரவும் டெங்கு நோயும் விட்டுப்போகாத விருந்தாளியாக இலங்கை போன்ற ஆசிய ஆபிரிக்க நாடுகளை ஆட்டிப்படைப்பதையும் காணமுடிகிறது. நுளம்புகளால் பரவும் மலேரியா யானைகள் நோய் போன்றனவும் சின்னம்மை பெரியம்மை நோய்களும் தொற்று நோய்களாக உலகை அச்சுறுத்தி வருகின்றன.  

உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது, சுமார் 75 தொடக்கம் 200 மில்லியன் பேர் வரையில் பலியாகக் காரணமான கருங்கொள்ளை அல்லது பெருங்கொள்ளை நோய் (Great Plague) ஆசிய ஐரோப்பிய நாடுகளில் 1347 தொடக்கம் 1351 வரையிலான காலப்பகுதியில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது. இதுவே உலகில் ஏற்பட்ட மிக மோசமான நோய்த்தாக்கமாகவும் இற்றை வரையிலும் பேசப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையில் நோய்த்தடுப்பு மற்றும் குணமாக்கல் துறைகளில் முன்னேற்றங்கள் குறைவான காலப்பகுதியில் இவ்வாறு பல இலட்சக் கணக்கானோர் இறந்து போயினர். 

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன கண்டு பிடிப்புகளும் மருந்துகளும் உபகரணங்களும் சிகிச்சை முறைகளும் இடர் அபாய நிலை ஏற்படும் போது உடனடியாகவே துரிதமாக செயற்பட்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பக்க பலமாக, திகழ்கின்றன.

ஆயினும் நோய்க் கிருமிகளும் புதிய நுட்பங்களுக்கு சவால் விடுக்கும் வண்ணம் புதிது புதிதாகவோ அல்லது தம்மை கூர்ப்பு செய்து மாற்றிக் கொண்டோ அச்சுறுத்தல் விடுக்கின்றன. தற்போதைய சூழலில் சுகாதாரத்துறையில் மிகவும் மேம்பட்டுள்ள நாடுகளில் கூட ஒரு குறிப்பிட்ட நோய் பரவும் போது அதனை முற்றாகத் தடுத்துவிட முடியாத நிலை உள்ளது. உலகமயமாக்களுக்கு அதிகம் ஆளாகியுள்ள இன்றைய சூழலில் மக்களின் சர்வதேச பயணங்கள் தவிர்க்க முடியாதவையாக மாறியுள்ளன. சுற்றுலாத்துறை ஒரு முக்கிய பொருளாதார நடவடிக்கையாக மாறியுள்ளது. சாதாரண தொழிலாளர் தொடக்கம் விசேட நிபுணத்துவம் கொண்டவர்கள் வரை உலக நாடுகளிடையே பயணம் செய்து சேவை வழங்குவதை அவதானிக்கலாம். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டவர்கள் பயணிகளாகவே இருந்தனர் எனவே ஒரு தொற்று நோய் கண்டறியப்படும்போது அது ஏனைய நாடுகளுக்கு பரவும் அபாயம் இப்போது அதிகமாக உள்ளது. 

சீனாவின் வுஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மாநிலத்தை தனிமைப்படுத்தி நோயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இவ்வாறான அனர்த்தங்கள் காரணமாக நோய்தொற்று ஏற்பட்ட நாடுகளில் மட்டுமன்றி ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் மிகப்பெரியனவாகும். பெரும்பாலும் இது குறித்து மேற்கொள்ளப்படும் கணிப்பீடுகள் மிகச் சரியானதாக இருக்குமெனக் கூற இயலாது. குறைமதிப்பிடப்பட்ட பெறுமதிகளாக அவை இருக்கலாம். உதாரணமாக  2003ல் ஏற்பட்ட ‘சார்ஸ்’ தொற்று காரணமாக சுமார் 100 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையொன்று கூறுகிறது. இப்பெறுமதி இதைவிட அதிகமாக இருக்கக் கூடுமென ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

தற்போது ஏற்பட்டுள்ள   கொரோனா வைரஸ் தொற்று இலங்கை போன்ற சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் நாடுகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உலகம் முழுவதும் விமானப் பயண கைத்தொழிலில் ஒரு மந்தநிலை இவ் வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் கணிசமான எண்ணிக்கையினர்  சீனாவிலிருந்தும் கொரிய தீபகற்பத்தில் இருந்தும் வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் தற்போது வீழ்ச்சி ஏற்படக் கூடும்.அத்துடன் உலகளாவிய ரீதியில் உல்லாசப் பயணக் கைத்தொழிலில் ஒரு வீழ்ச்சி ஏற்படலாம்.

நோய்த் தொற்று குறித்த பீதி காரணமாக உல்லாசப் பயணிகள் தமது பயண அட்டவணைகளை பின்போடலாம். எனவே இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலில் ஒரு தற்காலிகப் பின்னடைவை இது ஏற்படுத்தக் கூடும். 

இலங்கையில் தற்போது கணிசமான எண்ணிக்கையிலான சீனர்களும் கொரிய தீபகற்பத்தை சேர்ந்தவர்களும் கட்டட நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர் இவர்களின் பயண நடவடிக்கைகளும் கூட நோய்தொற்றை ஏற்படுத்தலாம். இலங்கையர்கள் பலரும் தற்போது சீனாவில் பல்வேறு கல்வி உள்ளிட்ட நோக்கங்களுக்காக தங்கியுள்ளனர். இவர்களின் நடமாட்டங்களும் நிச்சயமற்ற நோய்த்தொற்று நிலைமையை மேலும் அதிகரிக்கலாம். 

ஏற்கெனவே உள்வரும் பயணிகளை கண்காணித்து அடையாளங்காண ஸ்கானர் இயந்திரங்கள் இலங்கை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்று ஏற்பட்ட பயணி எவரேனும் அடைளாயங் காணப்பட்டால் நிலைமைகளைக் கையாள சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்குவதன் மூலமே இந்நோய் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்கலாம்.

இத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமான கருவிகள், ஆளணியினர் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் நிதியை ஒதுக்க வேண்டியுள்ளதால் பொருளாதார ரீதியில் அதனை ஒரு மேலதிக சுமையாகவே பார்க்க வேண்டும்.  

ஒரு தொற்றுநோய் பரவும் இடரபாயம் உள்ளபோது மக்களின் நாளாந்த நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதோடு பயப்பீதி காரணமாக உளவியல் தாக்கங்களும் தொற்றா நோய்களை மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உபாதைகளை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இவற்றை முகாமை செய்ய தனிப்பட்ட ரீதியிலும் சமூகம் என்ற வகையிலும் செலவுகளை மேற்கொள்ள நேரிடும். 

இலங்கை ஒரு நிலத்தொடர்பற்ற தீவாக உள்ளபடியினால் எத்தகைய வெளிநாட்டு நோய்த்தாக்கங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வினைத்திறனுடன் செயற்பட முடியும். கப்பற் பிரயாண நடவடிக்கைகள் பெரியளவில் இடம்பெறா நிலையில் விமான நிலையங்கள் ஊடாகவே மக்களின் உள்வருகைகளும் வெளிச் செல்கையும் இடம்பெறுகின்றன.

எனவே முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வினைத்திறனுடன் மேற்கொண்டால் தொற்றுநோய்கள் உள்வருவதை தடுக்கலாம். எவ்வாறாயிலும் எந்த ஒரு நோய் உள் வருகையையும் முற்றாகத் தடைசெய்யமுடியாது என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். 

இலங்கையில் சுகாதாரத்துறையின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையின் சுகாதார சேவைகளின் பரவல், தரம் என்பன காரணமாக நோய்த்தடுப்பு மற்றும் குணமாக்கல் துறையில் தென்னாசிய வலயத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றங்களை கண்டுள்ளது. எனவே புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா ஆட்கொல்லி வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்கும் ஆற்றல் அதற்கு உள்ளதாக கருத முடியும்.    

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம் 

Comments