நாம் தினசரி ‘சாப்பிடும்’ நீரின் அளவு எவ்வளவு தெரியுமா? | தினகரன் வாரமஞ்சரி

நாம் தினசரி ‘சாப்பிடும்’ நீரின் அளவு எவ்வளவு தெரியுமா?

நீரின்றி அமையாது உலகு என்பர் கற்றோர். உயிர் காற்றுக்கு அடுத்த படியாக நீரில்லாவிட்டால் மனித உயிர் வாழ்தல் சில நாட்கள் மட்டுமே. மனித உடலின் மிகப் பெரும்பங்கு நீரினால் அமைந்துள்ளது. உலகின் பெரும்பகுதி நீரினால் சூழப்பட்டுள்ள போதிலும் உயிர்ப் பயன்பாட்டிற்கான நன் நீரின் அளவு உலக நீர்க் கொள்ளளவின் அற்பமேயாகும். மூன்றாம் உலக யுத்தம் ஒன்று வருமாயின் அது நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாகவே ஏற்படும் என்று ஆய்வாளர்கள் பலர் எதிர்வு கூறியுள்ளனர்.

உலகின் கணிசமான எண்ணிக்கையினருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. நாளாந்த தேவைக்கான நீருக்காக பலமைல் தூரம் நடந்து செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உலக மக்கட் தொகையில் கணிசமான எண்ணிக்கையானோர் உள்ளனர். எனவே சுத்தமான நீர் என்பது மிகமிக அருமையானதோர் பொருளாதார வளமாகும். அதனைப் பயன்படுத்துவது பொருளாதாரம் சார்ந்த ஒரு பிரச்சினையாகும்.

நாளாந்தம் நாம் சாப்பிடும் நீரின் அளவு எவ்வளவு தெரியுமா? சாப்பிடும் நீரின் அளவா? குடிக்கும் நீரின் அளவு பற்றித்தானே கேட்க வேண்டும்? குழப்பம் வேண்டாம். நாம் நாளாந்தம் 3496 லீற்றர் தண்ணீரை சாப்பிடுகிறோம் என்பது உண்மை. ஆனால் கண்ணுக்குத் தெரிந்து நாம் நாளாந்தம் பயன்படுத்தும் நீர் பற்றி மட்டுமே நாம் அறிந்து வைத்துள்ளோம். குடிப்பதற்காக, சமைப்பதற்காக, கழுவுவதற்காக, குளிப்பதற்காக நாம் நீரைப் பயன்படுத்துகிறோம். இந்த நீரின் அளவு வீட்டு நுகர்வு என அழைகக்ப்படுகிறது. (Domestic Consumption) இந்தத் தேவைக்காக மனிதர் ஒவ்வொருவரும் சராசரியாக 137 லீற்றர் நீரைப் பயன்படுத்துகின்றனர். இந்த நீர் நுகர்வில் குளிப்பதற்காக 35 சதவீதம், கழிவறைப் பயன்பாட்டிற்காக 15 சதவீதம் துணி துவைக்க 9 சதவீதம் சமைப்பதற்காகவும் குடிப்பதற்காக 10 சதவீதம், சுத்தம் செய்வதற்காக 5 சதவீதம் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இந்த 137 லீற்றர் நீரும் கண்ணுக்குத் தெரிந்து நாம் பயன்படுத்தும் நீராகும். ஆனால் இந்த அளவு நாம் உண்மையில் பயன்படுத்தும் நீரின் ஒரு சிறு பகுதி மாத்திரமே. கண்ணுக்குத் தெரியாத ஒரு நீர் நுகர்வும் உண்டு.  (Invisible Part) அது பிரதான கூறுகளைக் கொண்டுள்ளது.

முதலாவது பகுதி நாம் நாளாந்தம் பயன்படுத்தும் கைத்தொழிற் பொருட்களை உற்பத்தி செய்யப்பயன்படுத்தப்படும் நீரின் அளவாகும்.  உதாரணமாக காகிதம், பருத்தி ஆடைகள் போன்றவற்றைக் கூறலாம். இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீர்ப் பயன்பாடு நாளொன்றிற்கு ஒருவருக்கு 167 லீற்றர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பகுதிதான் நமது நீர் நுகர்வின் மிகப்பெரிய பகுதியாகும். அதாவது நாம் நாளாந்தம் உட்கொள்ளும் உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நீரின் அளவாகும். இவ்வாறு உணவுப்பொருள் நுகர்வுக்காக மனிதன் நாளாந்தம் பயன்படுத்தும் நீரின் அளவு 3496 லீற்றர்களாகும். அதாவது நமது கண்ணுக்குத் தெரியாத நீர் நுகர்வின் 96 சதவீதம் உணவின் மூலமே ஏற்படுகிறது. இது நாம் உண்ணும் உணவில் மறைந்துள்ளது. இதனை டோனி அலன் என்னும் விஞ்ஞானி மெய்நிகர் நீர் (Virtual Water) என அழைக்கின்றார்.

உதாரணமாக, ஒரு கிலோ எலும்பில்லா மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 15400 லீற்றர் நீர் தேவைப்படுவதாக கணித்துள்ளனர். ஒரு மாட்டை வளர்த்து இறைச்சிக்காக அதனை கொல்லும் வரையிலும் அதன் பின்னரும் செலவாகும் நீர் அளவு இதில் உள்ளடங்கப்படும். ஒரு மாட்டில் இருந்து 200 கிலோ இறைச்சி பெறப்படுவதாகக் கொண்டால் மூன்று வருட காலப்பகுதியை வாழ்நாள் பகுதியாகக் கருதினால், மாடு சுமார் 1300 கிலோ தானியங்களையும் 7200கிலோ புல்லும் மற்றும் வைக்கோலையும் உண்ணும். இவ்விரண்டிற்காக 3060000 லீற்றர் நீர் தேவைப்படும். வாழ்நாளில் மாடு 24,000 லீற்றர் நீரை குடிக்கும். அத்தோடு பண்ணைப் பராமரிப்பிற்காகவும் கொலைக்கள சுத்திகரிப்பு தேவைகளுக்காகவும் 7000 லீற்றர் நீர் தேவைப்படும். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் 200 கிலோ மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 3091000 லீற்றர் நீர் செலவாகும். எனவே 1 கிலோ இறைச்சிக்கு 154000 லீற்றர் நீர் தேவைப்படும். இப்போது புரிகிறதா “நாம் சாப்பிடும் நீர்” (The Water we eat) என்னும் எண்ணக்கரு?

இந்த 15400 லீற்றர் எவ்வளவு என்பதை கண்ணால் காணவேண்டுமானால் 1 லீற்றர் தண்ணீர் போத்தல்களில் இதனை நிரப்பினால் 15400 போத்தல்கள் வரும். இதனைக் கொண்டு எட்டு அடி உயரமான 40 மீற்றர் நீளமான ஒரு நீர்ச்சுவரை (Water - wall) கட்டியெழுப்பலாம். இதேபோல் நாம் உண்ணும் உணவு வகைகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நீரின் அளவை அட்டவணை காட்டுகிறது.

ஒரு கிலோ உற்பத்திக்கு தேவைப்படும் நீரின் அளவு

கோப்பி    –             18900 லீற்றர்
மாட்டிறைச்சி-   –             15400 லீற்றர்
ஆட்டிறைச்சி    –             10400 லீற்றர்
பன்றிஇறைச்சி   –               6000 லீற்றர்
கோழி இறைச்சி–                   4300 லீற்றர்
சீஸ்       –               3180 லீற்றர்
அரிசி      –               2500 லீற்றர்
சோயா அவரை  –               2145 லீற்றர்
கோதுமை  –               1830 லீற்றர்
சீனி       –               1780 லீற்றர்
பார்லி           –               1425 லீற்றர்
அப்பிள்    –                 822 லீற்றர்

இதன் அடிப்படையில் கட்புலனாகாத நீர்ப்பயன்பாட்டை விவசாயிகள் மேற்கொள்வது புலனாகிறது.  புதிய விஞ்ஞானத் தொழில் நுட்பங்கள் மூலம் நீர்ப் பயன்பாட்டின் அளவைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அதில் இன்னும் மிக நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளது.

இந்த நிலையில் நீர்ப் பயன்பாட்டை உத்தமப்படுத்தி எதிர்கால சந்ததிக்கு சுத்தமான நீர் கிடைக்கச் செய்வதை எவ்வாறு உறுதிப்படுத்தலாம்? உலகப் பிரஜை என்னும் அடிப்படையில் ஒவ்வொருவரும் இதற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம்? நாம் கொள்வனவு செய்யும் உணவுக் கூடையில் இது பெருமளவுக்கு தங்கியுள்ளது. மாமிசம் உண்ணும் ஒருவரின் நீர்நுகர்வு 5000 லீற்றராகும். தாவர உண்ணி மனிதன் 2500 லீற்றர் மட்டுமே நுகர்கிறார்.

எனவே மாமிச உணவில் பெரிதும் தங்கியுள்ளோர். வாரத்தில் ஒரு நாள் இறைச்சி நுகர்வை கைவிட்டு மாற்றீடுகளை பயன்படுத்துவதன் மூலம் நீரைச் சேமிக்கலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது. அத்தோடு புல்லை மட்டும் சாப்பிட்டு வளரும் மிருக உணவை மாற்றீடு செய்வதும் தண்ணீரைச் சேமிக்கும். உதாரணமாக மாட்டிறைச்சிக்கு பதிலாக ஆட்டிறைச்சியை பயன்படுத்தல். அத்துடன் தானியங்களை மிருக உணவாக வழங்காமல் புல்வகைகளை உணவாக கால்நடைகளுக்கு வழங்குவதும் ஒரு மாற்றீடாக அமையலாம்.

மறுபுறம் உணவுப் பொருளை வீணாக்குவதும் நீரை விரயமாக்கும் செயலாகும். உணவை வீணாக்காமல் பொருத்தமாக கையாளுவதும் சமூகப் பொறுப்புள்ள மனிதர்களின் கடமையாகும்.

காடழிப்பின் மூலம் நீர்ச்சக்கரம் பாதிக்கப்பட்டு நீர் சேமிப்பு குறைகிறது. மழைப்பொழிவு குறைவதும் மழைநீர் மண்ணுக்குள் நிலத்தடி நீராக சேமிக்கப்படாமல் ஓடி கடலில் கலப்பதும் நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது. மனித நடத்தைகள் காரணமாக இரசாயனங்கள் நீரில் கலப்பதனால் நீரின் தரம் கெட்டு மனிதப் பயன்பாட்டிற்கு ஒவ்வாததாக மாறிவிடுகிறது.

ஒட்சிசன் இல்லாவிட்டால்  என்ன? வீடுகள் வந்தால் போதுமே என்று அடிப்படை அறிவு கூட இல்லாமல் சிந்திக்கும் (மாக்கள்) மக்கள் கூட்டத்துடன் வாழும் போது சிந்திக்கத் தக்க ஆறாம் அறிவு கொண்ட ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் செயற்பாட்டின் மூலம் ஒரு சிறிய பங்களிப்பை உலக சமூகத்திற்கு வழங்க முடியும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments