![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/04/19/8535dbc9-09bc-4ab5-bee8-9a7bf4506361.jpg?itok=sMypaPLm)
எல்லாக் காலங்களையும் தமக்கு சாதகமாக்கி தம்மை முன்னிலைப்படுத்த சிலர் தவறுவதில்லை. அது சுனாமி வந்த பொழுதோ சூறாவளி வீசிய பொழுதோ யுத்தம் நடந்த பொழுதோ இருந்தது போல இன்றும் இருக்கிறது.
எமது கிராமத்தில் அன்றாடம் உணவுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த குடும்பமொன்று எழுபத்தேழாம் ஆண்டு இனக்கலவர ஊரடங்கின் பின் சிலமாதங்கள் கழித்து பாரஊர்திகளில் ஏற்றுமளவுக்கு உழுந்து பயறு குரக்கன் செத்தல் மிளகாய் என்பவற்றை விற்றனர். இவர்கள் இதில் எந்த பயிரையும் செய்யவில்லை. அதேவீட்டில் ஒரு கலியாண வீட்டுக்குத் தேவையான அளவுக்கு எவர்சில்வர் பாத்திரங்களும் நிறைந்து கிடந்தன. இதெல்லாம் அந்தநேரம் “அயலூருச்சனம் அள்ளிக்கொண்டு போட்டுதுகள்’ என இடம்பெயர்ந்து ஓடிப்போன எமதுமக்கள் சொன்ன அதே பொருட்கள்தான்.
இதேபோல சுனாமி அடித்தபொழுதிலும் கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாமல் பொருள் சேர்த்தவர்களும் செல்லடித்து விழுந்து கிடந்தவர்களின் நகைகளை உருவியோர்களையும் நாம் மறக்கமுடியவில்லை இப்போது வாழ்வாதாரத்தை இழந்து வந்த மக்களின் கால்நடைகளுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்;
எப்போதும் ஊரடங்கு இதற்கு சாதகமாகவே இருந்தும் வருகிறது. அண்மையில் வுவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் அதிகரித்துவரும் திருட்டுக்களும் அதனை ஒட்டியதாக அரங்கேறும் கட்டைப் பஞ்சாயத்துகளும் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஊரடங்குச்சட்டம் மனிதர்களுக்குத்தானே அனைவரும் விட்டில்தானே இருக்கிறார்கள் இதில் எப்படி திருட்டு?.... அட ஆமாம் வீட்டில் இருப்பவர்கள் மனிதர்கள் மட்டுந்தான். கால்நடைகளுக்கு ஊரடங்கு போடமுடியாதே அவை அன்றாடம் மேய்ச்சல் தரவைகளை தேடிப் போகத்தானே வேண்டும். குறிப்பாக வவுனியாவில் கணிசமான தொகையில் கால்நடைகள் இறந்து வருகின்றன. என்ற விடயம் யாருக்காவது தெரியுமா? கால்நடை வைத்தியர்களின் மெத்தனப ;போக்கு இங்குள்ள எவருக்கும் அந்த கால்நடைகளை காப்பாற்றுவது எப்படி என்பதை தெரியாமல் செய்துள்ளது. மீதமுள்ள கால்நடைகள் கால்நடைகள் என்ன பசுமாடுகள் பற்றைகளுக்குள் சாய்த்து செல்லப்பட்டு இறைச்சியாக வெளியே வருகிறது. அதேபற்றைகளிலிருந்து கசிப்பு உற்பத்தியும் கிராமங்களை கலகலக் கவைத்துக ;கொண்டிருக்கிறது பெரும் வயல் வெளிகளை வைத்துக் கொண்டு நடுவே அமைகின்ற பற்றைகள் இவற்றுக்கு சாதகமாக உள்ளது. ‘சட்டபூர்வமான சாராயம் இல்லை குடிச்சவன் குடிக்காம இருக்க ஏலுமே?’ இதிலென்ன விசேடமென்றால் கிளிநொச்சி முல்லைத்தீவுப் ;பகுதிகளில் அன்றாடம் சமைத்து சாப்பிடுவதுபோல தமக்கான கசிப்பை தாமே காய்ச்சும் வலிமை பெற்றோர் இருக்கிறார்கள்.
எமது நண்பர் ஒருவர் வீட்டுக்கு அவருடைய நண்பர் வந்து ‘இறைச்சி வாங்குகிறீர்களா’என்று கேட்டிருக்கிறார். அது ஊரடங்கு நேரம். இவரிடம் எப்படி இறைச்சி வந்திருக்கும் என வியந்த என் நண்பர் தனது பசுமாட்டை இருதினங்களுக்கு முன்புதான் இழந்திருந்தார். அது எப்படி இறந்தது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அது கன்றுபோட்டு எட்டுநாட்களான நிலையில் காலையில் பால் கறந்துவிட்டு மேய்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டது. மாலையில் அது செத்துக் கிடந்தது. இதேபோல அயலவர் ஒருவருடைய மாடும் கன்றுபோட்ட சிலதினங்களில் இறந்துபோனதாக தெரிந்தது.
அப்படியாயின் இப்படி இறந்தமாடுகள் உரிக்கப்படுகிறதா? ஏன்ற சந்தேகம் வரவே அவர் தனக்கு இறைச்சி வேண்டாம் எனக் கூறிவிட்டார். மறுநாள் மாடொன்று உரிக்கப்பட்டு, அதன் தோலும் கழிவுகளும் ஒருவருடைய மாட்டுப்பட்டியின் முன் போடப்பட்டுக் கிடந்தது. என்ன நடக்கிறது இங்கே. ஒவ்வொரு ஊரிலும் நற்பணி செய்கிறோம் பேர்வழி என்று ஊரடங்கு நேரத்திலும் வீதியுலா செல்வதற்கான கடவுச்சீட்டை சிலபல இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் செய்யும் நற்பணிகள் என்வென்பதை ஊரார் அறியமாட்டார்கள். ஆனால் இவர்கள் அந்த கடவுச்சீட்டை கடவுள் சீட்டாககொண்டு பொலிஸாருடைய கடமைகளையும் அதாவது கட்டைப் ;பஞ்சாயத்துகளையும் நடத்தி வருகிறார்கள்.
அண்மையில் தென்னந்தோப்பில் தேங்காய் திருடினார் என்ற பெயரில் ஒருவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இணையத்தில் பரவியிருந்தது பலரும் அறிந்ததுதான். அதேபோல இந்த உரிக்கப்பட்ட மாடு யாருடையது என்பதை தெரியாவிட்டாலும் தெரிந்து கொள்ள யாரும் முயலாவிட்டாலும் மாடுகளைத் தொலைத்தசிலர் அது தம்முடையதாக இருக்கலாம் என உத்தேச விடையை அளித்திருந்தனர். ஆனால் யாரும் போய்ப் பார்க்க விரும்பவில்லை (அது உளவியல் சிக்கல். பிள்ளைபோல வளர்த்த பிராணி உரிக்கப்பட்டுக் கிடப்பதை பார்க்க இதயம் உள்ள யாரும் விரும்புவதில்லை)
ஆனால் இந்தக் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு மக்கள் நலனுக்காக பணியாற்றுபவர்கள் தாமே சனங்களைக் ;கூட்டி இவன்தான் திருடன் என இரண்டு மூன்று பேரைப் பிடித்து தனியாக பொட்டல் வெளிக்குள் கொண்டுசென்று அவர்களை நையப் புடைத்துள்ளனர். மிகமோசமாக தாக்கப்பட்ட ஒருவருக்கு மறுநாள் ஒப்பிரேசன் நடக்க விருந்ததாகவும் அறிகிறோம். இதற்குள் அந்த மாட்டுத் ;திருடர்களே இந்த நீதி வழங்கியவர்கள் என்ற சந்தேகம் குவிந்திருந்த மக்களுக்கு இருந்தது என்றாலும் யாரும் வாய் திறக்கவில்லை.
யாரோ ஒருவருடைய தயவில் அங்கே பொலிஸார் வந்துவிட்டனர். இப்போது பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கியிருந்தது.
“இவங்களுக்கு பாஸ் குடுத்தது ஆரப்பா?”என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கிராமசேவையாளர் உட்பட பொலிஸாரும் “நாங்கள் கொடுக்கவில்லை” என கைவிரித்துவிட்டார்கள். அரசியல் செல்வாக்கு கொரனாவையும் விட்டுவைக்கவில்லை வேறென்ன சொல்வது. பெரியமனது பண்ணி பொலிசார் அனைவரையும் மன்னித்து விட்டார்களாம். காணாமல் போன கொல்லப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டைநாமம். அவற்றில் சில வாழ்வாதாரமாக வழங்கப்பட்டவை அவை காப்புறுதிசெய்யப்பட்டவை ஆனால் அந்த காப்புறுதிகளையும் இப்போது கொரனா மூடி வைத்திருக்கிறதே. இனி இவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு யார் பொறுப்பு?
தமிழ்க்கவி