நிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும் | தினகரன் வாரமஞ்சரி

நிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்

ஆட்கொல்லி நோயான கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு உள்ளிட்ட அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக அமுல் படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவு ஒருமாதத்தை நெருங்கிவிட்டது. ஏனைய பகுதிகளில் அவ்வப்போது ஊரடங்கு தற்காலிகமாக சிலமணிநேரம் தளர்த்தப்பட்ட போதிலும் நாடு முழுவதிலுமே பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு விலக்களிப்புகள் வழங்கப்பட்ட போதிலும் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் காரணமாக விற்கமுடியாத நிலையில் விவசாய உற்பத்திகள் அழிவடையும் நிலைதோன்றியுள்ளது. மறுபுறம் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. குறிப்பாக ஊரடங்கு தொடர்ச்சியாக அமுல் படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் வீடுகளுக்கு பொருள்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் செயற்திறனற்றுப் போயுள்ளன. கிராமங்களிலும் நகரங்களிலும் தற்காலிக வருமானம் ஈட்டித்தரும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளோரும் வருமானம் ஈட்ட வழி அற்றநிலையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையும் ஆடை தயாரிப்புத் துறையும் நொக்அவுட் முறையில் வீழ்த்தப்பட்டுள்ளன. தேயிலைத் துறைமாத்திரம் சந்தடியின்றி சற்றே இயங்குவதைக் காணமுடிகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் தொய்வு நிலைதோன்றியுள்ளது. விமானப் பயணங்கள் மீள ஆரம்பிக்கப்படும் போது வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் பெருமளவில் நாடுதிரும்பும் நிலைஏற்படலாம். பெற்றோலிய விலை வீழ்ச்சிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கு மிடையில் தொடர்புண்டு. தற்போது பெற்றோலிய விலை வீழ்ச்சியினால் தொழில் வாய்ப்புகள் பெருமளவில் இழக்கப்படும் அபாயநிலை உள்ளது.

இலங்கையின் பிரதான சந்தைகளாகிய ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கொரோனாவால் மிகமோசமாக அடிவாங்கியுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவு (economic recession) காரணமாக வர்த்தகப் பாதுகாப்புவாதக் கொள்கைகளை (protectionst policies) அவை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாயின் இலங்கை வெளிநாட்டுச் சந்தைகளை நெருங்குவதில் (market access) நெருக்கடிநிலை உருவாகலாம். 1929 இன் உலகப் பெருமந்த (great depression)  காலப்பகுதியில் கைத்தொழில் மயநாடுகள் அனைத்தும் பாதுகாப்புவாதக் கொள்கைகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடித்ததன் காரணமாக உலக வர்த்தகம் சடுதியாகச் சரிந்துபோனதுடன் உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சுருங்கிவிட்டிருந்தது. கொரோனா வலம் ஏற்பட முன்னரே உலகின் முக்கிய நாடுகளாகிய அமெரிக்காவும் சீனாவும் தீவிரமான வர்த்தகப் போரில் ஈடுபட்டிருந்தமை நினைவிருக்கலாம். தற்போதைய நிலையில் அமெரிக்க அதிபர் சீனாவை நேரடியாக குற்றஞ் சாட்டும் போக்கும். சீன சார்புடையதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உலக சுகாதாரதாபனத்திற்கான நிதியை வெட்டிவிட்டுள்ளமையும் மற்றுமொரு சுற்று மோதலுக்கு அமெரிக்கா தயாராவதையும் காட்டுகிறது. தேர்தல் வெற்றிக்காக டொனால்ட் ட்ரம்ப் ஆடுகிறார் என்று கருதப்பட்டாலும் அது ஒரு நாட்டின் கொள்கையாகவே பார்க்கப்படும். எனவே வர்த்தகத்தின் மீதான தடைகளை அமெரிக்கா மேலும் இறுக்கும் நிலை நிச்சயமாக ஏற்படும்.

தற்போது உலகில் ஏற்பட்டுவரும் சூழ்நிலைகளின் படி கொரோனா நெருக்கடி நிலை காரணமாக இலங்கை உட்பட எல்லா நாடுகளும் தமது உள்நாட்டுச் சந்தைகளை பாதுகாக்கவும் வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் பொருளாதாரத்தை உரிய தடத்தில் மீளநிறுத்தவும் பாதுகாப்பவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என்பது பெரும்பாலும் நிச்சயமானதாகும். ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதே ஒவ்வொரு நாட்டினதும் முன்னுரிமைத் தெரிவாக அமையும். இதனால் உலகமயமாக்கல் என்ற சொல் இப்போதைக்கு பலராலும் தீண்டத்தகாத ஒருசொல்லாகப் பார்க்கப்படும்.

சுயதேவைப் பூர்த்தி

அரசாங்கத்தின் தலையீட்டுடன் பொருளாதார நடவடிக்கைகள் இயக்கப்படும் நிலை உருவாகும். வர்த்தகமும் முதலீடுகளும் முடக்கப்படுவதால் பொருளாதார வளர்ச்சி மிகமந்தமானதாக அமையும். ஆசியாவின் வளர்ச்சி பூச்சியமாக இருக்கலாம் என உலகவங்கி ஏற்கெனவே எதிர்வு கூறியுள்ளது.

கொரோனா காலப்பகுதியில் இலங்கையிலிருந்து மூலதன வெளியேற்றம் உடலிலிருந்து குருதி வெளியேறுவதுபோல வெளியேறியுள்ளது. ஏற்றுமதி வருவாய்களும் நிதி உட்பாய்ச்சல்களும் வரண்டுவிட்ட நிலையில் இலங்கை ருபா தேய்வடைந்து டொலருக்கு எதிராக 200 ருபாவுக்குமேல் சென்றது. அமெரிக்க சீன மற்றும் பன்னாட்டு நிதியுதவியுடனும் தீவிர இறக்குமதிக் கட்டுபபாட்டுடனும் அது 194 ருபா மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளோடு வட்டிவீதக் குறைப்பும் இடம் பெற்றுள்ளது. 

பொருளாதாரத்தை மீளவும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயநிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களை மீள இயங்கச் செய்யத் தேவையான அடிப்படைத் தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தோன்றினாலும் அபாயநிலை இன்னும் கடந்துவிடவில்லை. சிலநாடுகளில் குணமடைந்து வீடு திரும்பியோருக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இலங்கையின்  சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை முன்னரங்கப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வலுவான அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பு என்பன நோய்த்தொற்றை அடையாளம் கண்டு சிகிச்சையளித்துக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளதாகக் கூறலாம். வரும்போது காக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு சட்டத்தை தொடர்ச்சியாக அரசாங்கம் அமுல் படுத்தியமையும் மாவ ட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்தியமையும் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன.

பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முடக்கி வைத்திருப்பது பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே உடனடியாக பொருளாதார நடவடிக்கைகளை பகுதியளவிலேனும் மீள ஆரம்பிப்பது அவசியமாகும். அவ்வாறு பொருளாதார செயற்பாடுகளை மீளஆரம்பிக்கும் போது சமூக இடைவெளியைப் பேணும் அதே வேளை விதந்துரைக்கப்படும் சுகா தார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வது அவசியமாகும். அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களையுடைய முகக் கவசங்களை அணிவதும் தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தவதும் அவசியமாகும். எனவே அடுத்தவரும் ஆறு மாதங்கள் இலங்கைக்கு மட்டு மின்றி உலகநாடுகள் பலவற்றிற்கும் வலியுடன் கூடிய சோதனைமிக்க காலகட்டமாகவே இருக்கப் போகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் நோய்பரவலை அதிகரிக்கும் விதமாக அமைந்தது. குறிப்பாக தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டமைக்கு அதுவும் ஒரு காரணமாகும். எனவே பொருளாதார நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும்போது மக்கள் உரியவிதத்தல் செயற்படாவிட்டால் கொரோனா மறுபடியும் ஒரு சுற்று வலம் வரலாம். அப்படி நிகழுமாயின் அது மிகப்பெரிய நாச த்தை ஏற்படுத்துவதோடு இதுவரை பெற்ற வெற்றிகள் காற்றில் போய்விடும்.

ஒருபுறம் மக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்குத் திரும்ப வேண்டும். குறி ப்பாக அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் நிலை வழமைக்குத் திரும்ப வேண்டுமாயின் வருமானங்கள் உழைக்கப்படவேண்டும். அதற்கு ஊரடங்கு நீக்கப்பட்டு நாட்டின் பொருளாதார சக்கரம் சுழல வேண்டும். மறுபுறம் கொரோனா நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு நோய் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இவை இரண்டையும் மிகவும் கவனமாகவே கையாள வேண்டியிருக்கும். விளிம்பு நிலையிலிருக்கும் மக்களுக்காக 5000 ருபா உதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தெரிகிறது. எதிர்வரும் வாரத்தில் பொருளாதாரத்தை மீள இயக்குவது தொடர்பில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படக் கூடும். தேர்தல் ஒன்றை நடாத்தும் அவா அதற்கிருப்பதும் இன்னொரு காரணமாகும். நிச்சயமற்ற ஒரு புறச்சூழலில் யாது நிகழக் கூடும் என்பதை அன்றாடம் அவிழும் அத்தியாயங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்

Comments