கசப்பும்… இனிப்பும்… | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும்… இனிப்பும்…

கசப்பை விழுங்கும் முன் இங்கே பிரசுரமாகியுள்ள ஒரு தமிழ் நூல் வெளியீட்டு விழா அழைப்பேட்டை பார்வையிடுங்கள். 

உச்சியில் பெரும்பான்மையினர் மொழி,  நடுவில் சிறுபான்மையினரதும், வலது புறத்தில் உலகப் பொது உபயோக மொழியும்! 

கரம் கிடைத்ததும் கண்ணில் பட்டது “தறுவோ ஸஹ அப்பி” – “குழந்தைகளும் நாமும்” என்கின்ற பெரிய எழுத்துத் தலைப்புகள். 

அட! ஏக காலத்தில் இருமொழிகளிலும் நூலா! அதுவும் உளவியல் துறையில்....!’ என்ற ஆச்சரியமும், அதைவிட அதிசயம், அதிகம் தமிழ் பேசும் மக்கள் மட்டுமே நிறைந்த கிழக்கிலங்கை, வாழைச்சேனை, ஓட்டமாவடியில் நிகழவுள்ளது. (05/07) என்பதும்! 

‘அல்- தமிஷ்’ என்கிற அபூர்வப் பெயரையும், அவரது அலைபேசி இலக்கத்தையும் அழைப்பேட்டில் கண்டு, மேலும் விவரங்கள் அறிந்து கொண்டு ஒரு பிரதிக்குச் சன்மானம் அளித்துப் பெறுவோம் என்று (ஆம்! அன்பளிப்பாக அல்ல!) தொடர்பிட்டேன்! 

அப்பொழுதே புரிந்தது, முழுக்கவும் தமிழில் மட்டுமே வந்துள்ள வித்தியாசமான நூல் என்று! மகிழ்ச்சியுடன் மனவேதனையும் ஏற்பட்டது. 

“ஏன், தறுவோ  சக அபி’ என்று சிங்களத் தலைப்பிட்டு அதனை முதன்மைப்படுத்தித் தமிழை தமிழ் நூலின் தலைப்பை, இரண்டாம் இடத்தில் வைத்து அழைப்பேடு தயாரிக்க வேண்டும்? வலது புறத்தில் ஆங்கிலத்தில் “Cordially invite  you to the book ‘ release function  of  Children & We’ என்று வேறு பதிவு போடவேண்டும்? என்றெல்லாம் வினாக்கள்.  

பரவாயில்லை ஆங்கிலப் பொது மொழியிலும் அழைக்கட்டும் என்று ஜீரணித்துக் கொண்டாலும், ஊஹூம்! ‘தறுவோ   சக அபி” போடப்பட்டிருப்பதும், அதுவே ஒரு தமிழ் நூலின் “முதன்மை”த் தலைப்பாக இருப்பதும் அது கூட “ஆராதனய மீ” (அழைக்கிறோம்) என இட்டு முழுமைப்படுத்தப்படாதிருப்பதும் பயங்கர அஜீரணம்!  

இந்த அழைப்பேட்டையே ஒரு முன்னுதாரணமாக அல்லது முதன்மைப்படுத்தி அடுத்தடுத்த தமிழ்நூல் அழைப்பேடுகளும் எமக்குக் கிடைத்து விடக் கூடாதென்பதில் என் தமிழ்மணிப் பேனா இறைஞ்சி நிற்கிறது. விசேடமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற தமிழ்ப் பிரதேச மக்களுக்குச் சென்றடையக் கூடாதென்பதில் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறது. 

ஓர் அடிக்குறிப்பு: “தமிழ் மொழிப் பாண்டித்தியம் அற்ற என் அபிமானிகள் சிலரை அழைப்பேடு சென்றடைய வேண்டியிருந்தது. அதனாலேயே இப்படி” என ஒரு தயார் விளக்கம் எழுத்தாளர், ஏற்பாட்டாளரிடம் இருக்கலாம். இருக்கட்டும் அதற்காக தமிழ் நூலின் தலைப்பை இரண்டாம் இடத்தில் வைத்து அழகு பார்க்காமல் தனியாக, -முழுக்கவும் அவர்கள் மொழியில் அழைப்பேடு தயாரித்து வழங்கி அழையுங்கள். காசில்லையே என்றெல்லாம் காரணங்கள் ஏற்புடையதல்ல! இங்கே தமிழ் அன்னை அவமானப்படாமலிருப்பதே முக்கியம்! மேலும், இந்நூல், குறித்த 05.07 லில் அங்கு வெளியானதா என்பதையும் இதை எழுதும் வரையில் ஊர்ஜிதப்படுத்த இயலவில்லை.  

“தீ நுண்மிக் காலம்- என்றதொரு அழகான தமிழ்ப் பெயரை கொரோனா காலத்திற்குச் சூட்டி ரசிக்கிறார் தமிழக ‘அமுத சுரபி’ சஞ்சிகை ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். 

நானும் அவரைப் பின்பற்றி இரண்டாம் கசப்பை வழங்குகின்றேன்.  

“தீ நுண்மிக் கால''மாகிய இப்போது தமிழ்நாட்டு ஆண்களிடம் அதிகம் புழக்கத்தில் இருப்பதும் அமோக விற்பனையாவதும் குடி! குடி! ('மது' என்ற அழகான வார்த்தைத் தவிர்ப்பு) 

இந்தியாவிலேயே தமிழ்நாடே குடி விற்பனையில் முன்னணி! குடி கெடுத்துச் சீரழிப்பதில் முதலிடம்! 

நாளொன்றின் விற்பனையை இதை எழுதும் 05 ஆம் திகதி குறிப்பிட்டால், 1711 கோடி. அபிமானிகள் படிக்கும் 12ல் எத்தனை கோடியாகியிருக்கும்? நீங்களே கணியுங்கள், நான் இன்னொரு தகவலை வழங்கி அதிர்ச்சி அடைய வைக்கிறேன்.  

பதினாறு, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே (2003 – 2004) ஆண்டொன்றுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி வருமானம். 2007 – -08ல் எட்டாயிரத்து எண்ணூறு கோடி! 2010-–11ல் பதினான்கு! 2012 –13ல் இருபத்தொரு கோடி! 

இன்னுமொரு பேரதிர்ச்சியையும் அடையுங்கள்: குடி விற்பனையின் ஏகபோக விநியோகத்தர்கள், விற்பனையாளர்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே! அவர்கள் அமைத்துள்ள ‘டாஸ்மார்க்’ நிறுவனங்களே! 

இலங்கைத் திருநாட்டினுடனான ஈரினத் தமிழ் பேசும் மக்களின் தொன்மைத் தொடர்புகளை மறைப்பதும் மறுதலிப்பதும் படுபடு வேகமாக நடந்து கொண்டிருக்கிற காலமிது! 

என் எழுத்தில் எட்டிப்பார்க்கிறான் ஒரு பாண்டிய நாட்டுத் தமிழ் வீரன்! அப்பொழுது ஆறாம் பராக்கிரமபாகு காலம். இவனுக்கு ‘வீர அழகக் கோனார்’ என்ற பெயரும் உண்டு. தன் படையணிக்குத் தென் பாண்டிய (அப்போதைய தமிழகம்) படை வீரர்களையும் சேர்த்தான். “நல்லூர்த் துணையார்” என்ற நமது தமிழ் வீரனும் அங்கிருந்து வந்தான். வந்தவன், தன் தமிழபிமானத்துடன் சிங்களத்தையும் ஆர்வமாகக் கற்றுத் தேர்ந்தான். தமிழில் புழங்கிய ‘நிகண்டு’ (சொற்பொருள் கூறும் செய்யுள் வடிவம் கொண்ட அகராதி) பெரும்பான்மையினர் மொழியில் இல்லையே என்ற ஆதங்கம் கொண்டான். 

பிறந்தது “சிங்கள நாமாவலிய”! அம்மொழியில் முதல் நிகண்டு பிரசவித்தவன் தமிழன்! பரவசப்பட்டு போன பராக்கிரமபாகு பரிசாகத் தன்னருமை மகள் லோகநாக  தேவியையே வழங்கி வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டான்! அந்தச் சிங்கள நாமா வலிய நிகண்டு உரித்தாளனோ, அவள் நாமத்தை ‘உலகுடைய தேவி’ என அழகுத்தமிழில் மாற்றி புளகாங்கிதம் அடைந்தான். 

இந்தத் தமிழ் வீரனின் பெயர், சிங்கள நூற்களில் “நன்னூர்த் துணையார்” – ‘நன்னுறு துணையார்” என்றவாறெல்லாம் இடுகை! இருந்துவிட்டுப் போகட்டும்! 

நம்மகத்தில் – மருத்துவர் ஒருவரை அணுகி வைத்திய ஆலோசனை பெற சுமார் இரண்டாயிரம் மூவாயிரம் வரை கட்டணம் செலுத்தி நாள் நேரம் குறித்துக் கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் அரிசி விளைச்சலுக்குப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பகுதியில் பட்டுக்கோட்டையில் (பாடலாசிரியர் கல்யாண சுந்தரத்தின் பிறந்தகம்) மருத்துவர் ஒருவரின் வயது 91!. இப்பொழுதும் வைத்தியம் பார்க்கிறார். தனக்குச் சொந்தமான ஒரு விசாலமான காணியில் சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டும், ஒரு பகுதியில் தன் கிளினிக்கையும் வைத்துள்ளார். ஒவ்வொரு மாதமும் வாடகை மட்டும் ஒன்றரை லட்சத்திற்கு மேல்! 

ஆனால்... ஆனால்... தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம், பெறுவது பத்தே பத்து ரூபாய்! 

அவருக்குப் “பத்து ரூபாய் டாக்டர்” என்றே பெயர் ஆகிவிட்டது! அந்த மாணிக்க மனிதர் கனகரத்தினம் என்ற பெயருடையவர். இதுவரை 65 ஆயிரம் பிரசவங்களுக்கும் வைத்தியர்! மகன் சுவாமிநாதனும், மருமகளும் கூட மருத்துவர்களே!  

இவர் குறித்து கடைசியாகக் கிடைத்த இன்ப அதிர்ச்சியான ஒரு செய்தி: தன் வளாகத்து ஆறுகண்டகளில் வணிகம் செய்பவர்களிடம் கொரோனா ஊரடங்கால் மூன்று மாத வாடகையே வேண்டாம் என்று விட்டார்! அந்த வகையில் நான்கே முக்கால் லட்சத்தை கைகழுவி விட்டார்! 

இவரைப் போலவே ஒரு மனிதநேய மருத்துவர் தென்னிலங்கை, வெலிகமயில் வாழ்ந்து காட்டியதாக வானொலிப்புகழ் ‘சஞ்சாரம்’ திக்குவல்லை ஸப்வான் தகவல். அந்த இனிப்புக்கு அடுத்த கிழமை வரை பொறுத்தருள்க அபிமானிகளே!

Comments