![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/09/21/a23.jpg?itok=9WDJ6AJV)
அநகாரிக தர்மபால, டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண, மல்லிகா தர்மகுணவர்த்தன ஆகியோருக்கு மகனாக 1864ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் டொன் டேவிட் ஹேவாவிதாரண.
இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்த காலமது. பெரும்பாலான பாடசாலைகள் கிறிஸ்தவப் பாடசாலைகளாகவே இருந்தன. டொன் டேவிட்டும் ஒரு கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி பயின்றார். முதலில் கோட்டேயிலிருந்த கிறிஸ்தவக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு அக்கடமியிலும் பயின்றார். 1875ஆம் ஆண்டு நியூயோர்க்கில் கேர்னல் ஒல்கொட் மற்றும் பிலவத்ஸ்கி அம்மையாரும், பிரம்மஞான சபையை நிறுவினர். புத்த மதத்தின்பால் ஈர்ப்புக் கொண்டிருந்த இவர்கள் 1880ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த அவர்கள் தங்களைப் பௌத்தர்களாக அறிவித்துக் கொண்டனர். ஒல்கொட் அடிக்கடி இலங்கைக்கு வந்து பௌத்த கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்றினார். இவர் 300பௌத்த பாடசாலைகள் வரை நிறுவினார். இவற்றுட் சில இன்றும் உள்ளன. இளைஞனாக இருந்த தர்மபால, ஒல்கொட்டின் பணிகளில் உதவி வந்தார். ஒல்கொட்டுக்கு உதவி வந்த தர்மபால, பெரும்பாலும் அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். பிளவத்ஸ்கி அம்மையாரோடும் நெருங்கியவராக இருந்த தர்மபாலவுக்கு, பாளி மொழியைக் கற்கும்படி அம்மையார் ஆலோசனை வழங்கினார். இக் காலத்திலேயே இவர் தனது பெயரை, தர்மத்தின் காவலன் எனப் பொருள்படும், தர்மபால என்று மாற்றிக்கொண்டார்.
1893ஆம் ஆண்டில் சிக்காகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்துக்கு, தேரவாத புத்த சமயத்தில் சார்பாளராக அழைக்கப்பட்டார். இவர் தனது முப்பதுகளின் தொடக்கத்திலேயே உலகம் அளவில் இயங்கும் ஒருவரானார். உலகம் முழுதும் பயணம் செய்து விரிவுரைகள் ஆற்றியதுடன், விகாரைகளையும் நிறுவினார். இத் தொண்டு அடுத்த 40ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அதே வேளை, இலங்கையில் பாடசாலைகளையும், மருத்துவ நிலையங்களையும் நிறுவியதுடன் இந்தியாவிலும் பௌத்த கோயில்களையும், விகாரைகளையும் நிறுவினார். இவற்றுள் முக்கியமானது, புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்ததாகக் கருதப்படும் சாரநாத் என்னும் இடத்தில் அவர் அமைத்த கோயில் ஆகும். சாரநாத்தில் 1933ஆம் ஆண்டில் பிக்குவாக மாறிய தர்மபால அங்கேயே, அதே ஆண்டில், தனது 69வயதில் காலமானார்.
லுனுகலை,
வதனி