மின்னல் பளிச்சிடுவது ஏன்..? | தினகரன் வாரமஞ்சரி

மின்னல் பளிச்சிடுவது ஏன்..?

மின்னாற்றலின் வெளிப்பாடே மின்னலாகும். இடியும் மழையும் இருக்கும்போது இதுவும் தோன்றும். மின்னூட்டம் பெற்ற இரு பொருள்களுக்கிடையே மின்னோட்டம் ஏற்படுவதாலேயே இது உண்டாகிறது. இடி மழையின்போது பெரும் மேகங்கள் மின்னூட்டம் பெறுகின்றன.

எதிர் மின்னூட்டம் பெற்ற பூமிப்பரப்பு போன்ற இன்னொரு பொருளுக்கு அவை வரும்போது மின்னல் தோன்றுகிறது. வெவ்வேறு மேகங்களுக்கிடையேயும் இது ஏற்பட முடியும். அவை மாறான மின்னூட்டம் பெற்றவையாக இருக்க வேண்டும்.

மின்னலின் ஆற்றல் ஒன்றரை கோடி வோல்ட் கூட இருக்க முடியும். இது வளி மண்டலத்தினூடே பிரயாணம் செய்யும்போது காற்றை வெப்பமடையச் செய்கிறது. வெப்பப்படுத்தப்பட்ட காற்று விரியவும், குளிர்ந்த காற்று சுருங்கவும் செய்வதால்தான் இடி ஏற்படுகிறது.

மேகத்திலிருந்து பூமியை நோக்கி வளைந்து நெளிந்து செல்வது சங்கிலி மின்னல் எனப்படும். பூமியை அடையும் முன்பு இது பல கிளைகளாகப் பிரியும். இது மிகவும் ஆபத்தானது. வானத்தில் ஒளித்தகடு போல வெளிப்படுவது மற்றொரு விதம். உண்மையில் இது அடிவானத்துக்கப்பால் ஏற்படும் சங்கிலி மின்னலின் பிரதிபலித்த ஒளிதான். மின்னலடிக்கும்போது மரத்தடியிலோ, நீரிலோ இருப்பது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது.

மின்னூட்டம் கடத்தாப் பொருள் வழியாகப் பாய வேண்டியிருப்பதால் எதிர்ப்பு குறைவாக உள்ள பாதையையே அது தேர்ந்தெடுக்கிறது. அதனால்தான் நேர்க்கோட்டில் இல்லாமல் தாறுமாறாகப் புலப்படுகிறது. வறண்ட காற்றைவிட ஈரக்காற்று மின்னாற்றலை எளிதில் கடத்தும். அதனாலேயே பெருமழை பெய்யத் தொடங்கியதும் மின்னல் மறைந்து விடுகிறது. இடி சிலசமயம் உருண்டு வருவதுபோல் ஒலிப்பதுண்டு. சத்தம் ஒரு மேகத்திலிருந்து இன்னொன்றின் மீது மோதி எதிரொலிப்பதாலேயே இவ்வாறு அடுக்கடுக்காக அந்த ஒலி கேட்கிறது. இடியும் மின்னலும் ஒரே சமயத்தில்தான் தோன்றும். ஆனால் மின்னல்தான் முதலில் தெரியும். இடிச்சத்தம் சற்று சிறிதுநேரம் கழித்தே கேட்கும். ஒளியும், ஒலியும் பிரயாணம் செய்யும் நேர வேறுபாடே இதற்குக் காரணம்.

Comments