![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/11/29/a29.jpg?itok=pdNv7gcE)
தினந்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி, தேசிய அளவில் மரணங்களின் எண்ணிக்கையையும் உயர்த்தி, மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கும் கொவிட் 19 வைரஸுக்கு இன்னும் மருந்தோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், அறிவுறுத்தப்படும் சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதுடன், இதிலிருந்து விடுபட நம் வசமுள்ள சிறந்த ஆயுதம் நமது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதே ஆகும்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆயுர்வேத மருத்துவத்தின் பங்களிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஒளடதங்கள் மற்றும் மூலிகைகள் தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இலங்கையில் மட்டுமன்றி, வெளி நாடுகளிலும் இது போன்ற மருத்துவப் பயன்கொண்ட பல்வேறு பொருட்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான சூழலில், உலகில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பெருவாரியாகப் பேசப்படும் மருந்தாகக் கருஞ்சீரக எண்ணெய்யைக் குறிப்பிடலாம். தற்போது இருக்கும் விஞ்ஞான ஆய்வுகள் பலவற்றின் மூலம், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சக்தி கருஞ்சீரகத்தில் அதிகளவில் உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
3000 வருடங்கள் பழைமை வாய்ந்த கருஞ்சீரகம், தற்போது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது உட்பட, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆயுர்வேத மற்றும் யுனானி வைத்திய முறைகளில், கருஞ்சீரகத்தின் பயன்பாடு சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கருஞ்சீரகத்தில் அடங்கியிருக்கும் தைமோகுயினோன் (Thymoquinone) எனும் பிரதான கூறானது, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது என்பதை உலகின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் பலவும் நடத்திய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.