முதலாவது எல்.பி.எல் கிண்ணம் யாருக்கு? | தினகரன் வாரமஞ்சரி

முதலாவது எல்.பி.எல் கிண்ணம் யாருக்கு?

இலங்கை கிரிக்கெட், ஐ.பி.ஜி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

இதுவரை நடைபெற்ற 20 லீக் போட்டிகளில், ஒரு சுப்பர் ஓவர், ஐந்து தடவைகள் 200 ஓட்டங்கள், ஒரு சதம், 33 அரைச்சதங்கள், 240 சிக்ஸர்கள், 437 பௌண்டரிகள், 210 விக்கெட்டுக்கள் என பல சாதனைகளும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் கடந்த 10 நாட்களில் அரங்கேறின. குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர்கள் பலர் சிறப்பாக கலக்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை அஞ்சலோ மெத்திவ்ஸின் கொழும்பு கிங்ஸ் அணியா? அல்லது தசுன் ஷானகவின் தம்புள்ள வைகிங் அணியா? அல்லது திசர பெரேராவின் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியா? அல்லது பானுக ராஜபக்ஷவின் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியா? வெல்லும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன்படி, லங்கா ப்ரீமியர் லீக் டி20 தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு கிங்ஸ் மற்றும் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட தம்புள்ள வைகிங் அணிக்கும், மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கும் இடையில் நாளை திங்கட்கிழமையும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கொழும்பு கிங்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள பலமிக்க அணிகளில் ஒன்றாக கொழும்பு கிங்ஸ் அணி பார்க்கப்படுகிறது.

அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இந்த அணியில் தினேஷ் சந்திமால், இசுரு உதான மற்றும் அன்ரே ரசல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், தேவையான நேரங்களில் அந்த அணிக்கு வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் 14 பந்துகளில் அதிவேக அரைச்சதத்தை அடித்த அன்ரே ரசல், பந்துவீச்சிலும் அந்த அணிக்கு வலுச்சேர்த்து வருகின்றார்.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் சதமடித்தவரும், தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்தவரும், அதிக ஓட்டங்களைக் குவித்தவருமான லோரி இவேன்ஸ் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். அத்துடன், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய தினேஷ் சந்திமால் அரையிறுதிப் போட்டியிலும் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் ஐ.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதிப் போட்டி வரை 15 பேர் கொண்ட அணியொன்றுடன் மாத்திரம்தான் களமிறங்கியது.

அதேபோல, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் கடைசி லீக் ஆட்டத்தைத் தவிர கொழும்பு கிங்ஸ் அணி, 15 பேர் கொண்ட அணியுடன் மாத்திரம் தான் விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். தம்புள்ள வைகிங் அணிக்கெதிரான லீக் போட்டியில் மாத்திரம் லஹிரு உதார மற்றும் ஹிமேஷ் ராமநாயக்க ஆகிய இருவரும் முதல்தடவையாக களமிறங்கியிருந்தனர்.

அதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளராகவும், இம்முறை தொடரில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் கைஸ் அஹ்மட், தம்புள்ள வைகிங் அணிக்கெதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து 22 பந்துகளில் அரைச்சதம் அடித்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் கொழும்பு கிங்ஸ் அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆகவே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அனுபவமிக்க சகலதுறை வீரர்களைக் கொண்ட பலமிக்க அணிகளில் ஒன்றாக வலம்வந்த கொழும்பு கிங்ஸ் அணி, அரையிறுதியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை சமாளிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

தம்புள்ள வைகிங்

ஜேர்மனிய வரலாற்றுக் கதைகளில் வரும் கடவுள்களில் ஒருவராக 'தோர்' உள்ளார். இந்த தோரின் புதல்வன் என செல்லப் பெயருடன் தங்களை அழைக்கும் தம்புள்ள வைகிங், அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி, 2இல் தோல்வி என 11 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது.

இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான தசுன ஷானக்க தலைமையில் களமிறங்கியுள்ள தம்புள்ள வைகிங் அணி, இம்முறை தொடரில் பலமிக்க அணிகளில் ஒன்றாக வலம்வந்து கொண்டிருக்கின்றது.

தம்புள்ள அணிக்கு சகலதுறையிலும் பங்களிப்பு செய்து வருகின்ற தசுன் ஷானக்க, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே அவருடைய துல்லியமான தலைமைத்துவம் நிச்சயம் தம்புள்ள அணிக்கு அரையிறுதிப் போட்டியில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல, இம்முறை போட்டித் தொடரில் தலா இரண்டு அரைச்சதங்களைக் குவித்த நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகிய இருவரும் அந்த அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் தமது அணியில் உள்ள சகல வீரர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடுவதற்கான வாய்ப்பு கொடுத்த அணியாகவும் தம்புள்ள வைகிங் அணி விளங்குகின்றது.

எனவே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் தம்புள்ள வைகிங் அணி எவ்வாறான வியூகங்களுடன் களமிறங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ்

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் நான்கு போட்டிகளில் ஜோராக வெற்றியீட்டி முதல் அணியாக அரையிறுதிக்குச் சென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, கடைசி நான்கு போட்டிகளில் 3இல் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கான தரப்படுத்தலில் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

முதல் நான்கு போட்டிகளிலும் உறுதியான பதினொருவர் அணியுடன் களமிறங்கிய அந்த அணி, பிறகு விளையாடிய நான்கு போட்டிகளிலும் விஜயகாந்த் வியாஸ்காந்த், சரித் அசலங்க மற்றும் மஹேஷ் தீக்ஷன ஆகிய மூன்று இளம் வீரர்களுக்கு மாத்திரமே மாறி மாறி சந்தர்ப்பம் கொடுத்தது.

மறுபுறத்தில் அந்த அணி பந்துவீச்சில் பலமிக்கதொரு வரிசையை கொண்டாலும், ஆரம்ப துடுப்பாட்டம், மத்திய வரிசை என சறுக்கத் தொடங்கியது. எனவே முதல் நான்கு போட்டிகளிலும் களமிறங்கியவாறு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி விளையாடினால் நிச்சயம் இந்தத் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. இதில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இம்முறை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரராகவும் வலம்வருகின்ற சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க மாத்திரம் தான் அந்த அணிக்காக தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்றார்.

ஆகவே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அரையிறுதியில் வெற்றி கொள்ள வேண்டுமாயின் அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகிய வீரர்கள் இறுதி பதினொருவரில் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதேபோல, இளம் வீரர்களான வியாஸ்காந்த், மஹேஷ் தீக்ஹன மற்றும் சரித் அசலங்க ஆகிய மூவரில் யாருக்காவது வாய்ப்பு கொடுத்தால் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதுஎவ்வாறாயினும், திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன் அணி அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறான யூகங்களை கையாளப் போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோல் க்ளேடியேட்டர்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக்கில் ஆரம்பத்தில் இருந்து தோல்விகளை சந்தித்து வந்த கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, இரண்டு வெற்றிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் நான்காவது அணியாக அரையிறுதிக்குத் தெரிவாகியது.

கடந்த வியாழக்கிழமை கண்டி டஸ்கர்ஸ் அணியுடன் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, எதிர்பாராத திருப்புமுனையுடன் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் அணியாக உரிமைத்துவத்தை பெற்றுக்கொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியானது பாகிஸ்தான் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக விளங்கியது. எனினும், முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒருசில வீரர்கள் தொடரிலிருந்து விலகியதால் அந்த அணி பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

அதிலும் குறிப்பாக அந்த அணியின் பொறுப்பு தலைவரான சஹீட் அப்ரிடி, தனிப்பட்ட காரணங்களுக்காக இடைநடுவில் நாடு திரும்பினாலும், இளம் வீரர்களுடன் களமிறங்கி சாதிக்கலாம் என்பதை கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி நிரூபித்துக் காட்டியுள்ளது.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகளவு இளம் வீரர்களைக் கொண்ட அணியாகவும், பெரும்பாலான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த அணியாகவும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி விளங்கியது. மறுபுறத்தில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த வீரராக தனுஷ்க குணதிலக்க விளங்குகின்றார்.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற தனுஷ்க குணதிலக்க. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி நான்கு அரைச்சதங்களுடன் 462 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 64 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், தனுஷ்க குணதிலக்க இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 30 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளதுடன், பவர் ப்ளேயில் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களைக் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பீ.எப். மொஹமட்

Comments