![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/20/a25.jpg?itok=_aLIN3PI)
வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது.
வைரஸ் பரவுவது எப்படி?
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக். எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதேபோல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அக்குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும். பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இபோலா வைரஸ்
மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.
திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்ச்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும்.
சார்ஸ் (SARS)
21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ். Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சினைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது. காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகளாகும்.
ஜிகா வைரஸ்
Aedes எனப்படும் கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது. Aedes கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது. காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள்.
நிபா வைரஸ்
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் `Fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது. காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை இதன் அறிகுறிகள். மேலும் மயக்கம், நரம்பு பிரச்சினைகளும் ஏற்படலாம்.
நளீம் லதீப்,
சாய்ந்தமருது - 11.