கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

நான் செய்த பாக்கியமோ அல்லது துர்ப்பாக்கியமோ புரியவில்லை, நூலொன்று பார்வையில் பட்டு, என் மிக மதிப்பிக்குரிய ‘ஒரு’ பேராசிரியப் பெருந்தகை கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

அது பெரிய அதிர்வலைகளை அளித்தது. நூலின் பெயர்” ‘புரட்சிக்கமால் கவிதைகள் – பன்முகப்பார்வை” தொகுப்பாசிரியர், கலாநிதி ஸாதியா பௌஸர். தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர்.

நியாயப்படி பேராசிரியரின் கட்டுரை இந்தத் தொகுப்பு நூலுக்குத் தேவையற்றது. தலைப்பைத் தந்தால் அபிமானிகளும் ஒத்துக் கொள்வீர்கள்.

‘மட்டக்களப்பு சிறுகதை வரலாற்றிலே புரட்சிக்கமாலின் சிறுகதைகள்” என்பது.
‘புரட்சிக் கமால் கவிதைகள் பன்முகப் பார்வை” என்றதொருதலைப்பில் தொகுப்பு நூலைப் பதிப்பிக்கும் பொழுது மேற்கண்ட தலைப்புக்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்ன தேவை ஏற்பட்டது?

கலாநிதி அம்மையாருக்கே அது வெளிச்சப்படும்.

ஒரு நான்கு பக்க திறனாய்வு அது. சில பகுதிகளைத் தேர்ந்து தருகிறேன்.

“புரட்சிக்கமால் கவிஞராக மட்டுமே நன்கறியப்பட்டவர்.

ஆயினும், அவர் கவிஞர் மட்டுமல்லர். சிறுகதை எழுத்தாளருமாவார்.
அவர் சிறுகதை உலகினுள் பிரவேசித்த காலம் (1945-- 50) நாற்பதுகளின் பிற்பகுதியாகும். மட்டக்களப்பில் சிறுகதை தோற்றம் பெற்ற காலமும் அதுவாகும்.

புரட்சிக்கமாலின் சிறுகதைகளில் முஸ்லிம் சமூகத்தின் குறைபாடுகள், பிரச்சினைகள் என்பன உள்ளடக்கமாகத் திகழ்ந்தன.

குறிப்பாக பொருந்தா மணம், சீதனம் என்பவற்றால் முஸ்லிம், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்,பெண்ணுரிமைகள் முதலியன பற்றி பேசுவனவாக அவை காணப்பட்டன.

-    இவ்வாறு வர்ணிக்கும் “புலமை மிகு பேராசிரியர், கவிஞரின் இரு சிறுகதைகளைக் கவனத்திலெடுத்துக் கொண்டுள்ளார்.

‘மனிதன்’ – ‘சதிகாரி’ என்பன அவை. ‘மனித’னை மறப்போம். (நாம் அனைவருமே சக மனிதனை மறக்கிறவர்கள் தானே!”) ‘சதிகாரி’யை மட்டும் அடையாளம் சாண்போம்.

அவளைப்பற்றிப்! பேசுவோம்

‘நஸீமா’ என்ற அவள் யார்? ஓரிரு வரிகளிலும் சொல்லி விடலாம் அவளுடைய முழுச் சோகக் கதையையும் கூடப் பிரசுரித்து விடலாம். ஒரு குறுங்கதை எழுதிய ‘ஸாலிஹ்’ என்ற புரட்சிக்கமால் என்ற கவிஞருக்கு, என்ட இளைமைக்கால இனிய நண்பனும், முதன் முதல் ‘முஸ்லிம் - சிறுகதைமலர்’ தொகுத்து வரலாறு படைத்து அகால மரணத்தை எதிர்கொண்ட யூ.எல். தாவூத் பிறந்த ஊரே. ‘ஏரூர்’ என அழைக்கப்படும் ஏறாவூர்.
அந்தப் புரட்சிக் கவிமணி – கதைக்குள்ளும் நுழைந்து தன் 21ஆம் அகவையில் ‘சதிகாரி’ நஸீமாவைப் புரட்சிகரமாக பெற்றெடுத்தார். இன்றையப் பலருக்கும் அதிசயமான தகவலாக இது அமையும்.

அவரது கதை என்ன சொல்கிறது? அதை விவரித்ததும் அதிர்ச்சியும் ஆத்திரமும் ஒரே சமயத்தில் ஏற்படும்!

சூரியோதயத்திற்கு, இன்னும் இரண்டொரு மணித்தியாலங்களேயிருந்தன. ஆனால் நஸீமாவை மட்டும் தூக்கம் அணைத்துக் கொள்ளவில்லை. படுக்கையிற் கிடந்த அவளுடைய இதயம். குமுறிக்கொண்டிருந்தது. மெல்லத் தனது தலையையுயர்த்திக் பக்கத்தில் படுத்திருப்பவனை பார்த்தவள் கணவன் என்பவன் சமாதி நிலையிலே தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய குறட்டைத் தொனியைத் தவிர எங்கும் நிசப்தம் நிலவியது.

மங்கிய வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருந்த விளக்கொளியைத் தூண்டி கணவனின் முகத்தைக் கவனித்தாள். வயோதிபத்தைக் காட்டும் நெற்றிக் கீறல்களையும், கன்னங்களின் சொடிவையும் அவளாற் சகிக்கமுடியவில்லை. இதய ஆழியிலிருந்து பீறிட்ட பெருமூச்சு “மரக்கட்டையில் செய்த பொம்மை” என்றது.

கட்டிலுக்குப் பக்கத்தில் மேசையிலிருந்த பால் கோப்பையைப் பார்த்தாள். அது அவளைப் பார்த்து எக்காளமிட்டு பேசுவதைப் போல் இருந்தது.

“நஸீமா பேதைப் பெண்ணே!

இழந்தால் மீளமுடியாத இன்ப இரவை. அனுபவிக்கும் தகுதியற்றவளாகி விட்டாயடி. பன்றியின் முன் முத்துக்களைத் தூவும் சமூகத்தில் உங்கள் நிலையே இப்படித்தான்”.
ஆம். இரு உள்ளங்களின் நீடிய அபிலாசைகள் சங்கமமாகும். ஒரு மகத்தான இரவு, குதூகல இரவு, முதல் இரவு அவளுக்குக் கிடைக்கவில்லை. ஏக்கம் தோய்ந்து உள்ளம். கெட்ட நினைவுகளைக் கொண்டு வந்து கொடிய செயலொன்றைச் செய்யத்தூண்டியது.
பழம் வெட்ட வைக்கப்பட்டிருந்த கூரிய கத்தியைக் கையிலெடுத்தவள், அந்த ‘மரக்கட்டை’யில பாய்ச்சினாள். இரத்தம் பீறிட்டடித்தது. இரத்தத்தின் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வோர் காட்சிகள் நடனமாடின.

அடுத்த சில நிமிடங்களில் அவள் செய்த காரியம், சிறிதும் தாமதிக்காமல்,கத்தி முனையைத் தன் மார்புக்குத் திருப்பிக் கொண்டாள். அவளுடைய இன்ப மார்பிலே, இரத்தக்கேணி முளைத்தது. சாட்சிக் கூண்டிலேறாமல், எந்த நீதிபதிக்கும் தொந்தரவு கொடுக்காமல் தன் வாழ்க்கையைத் தானே முடிவு செய்துவிட்டாள். தனது இன்ப இரவை மகத்தான மாதியில் புதைத்துவிட்டாள்! அதில் அவளுக்கு எவ்வளவோ ஆனந்தம்.
-  -  இவ்வளவே கதை! உங்களுக்கும் ஆனந்தம் ஏற்படுகிறதா? அல்லது வேறேதேனும் உணர்வுகள் உண்டாகிறதா?

நிச்சயத்திலும் நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்குப் பயங்கரமான உணர்வு அலைகளைக் கொடுக்கும்.

காரணம் அவர்களது மார்க்கம் விலக்கி வைத்திருக்கும், தடை செய்திருக்கும் ‘இரு பாதக காரியங்களை’ ஒரு முஸ்லிம் பெண் செய்திருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒன்று, சட்டப்படியான கணவனைக் கொன்றது. இரண்டு, தன்னைத் தானே மாய்த்துக் தற்கொலை செய்தது!

இரண்டுக்கும் இஸ்லாமியமார்க்கத்தில் இடமில்லை. அனுமதியில்லை!

முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டும் புனித நூலாம் அல்-குர் ஆனில், 02ஆம் (அல்- பகரா) 04ஆம் (அன்னிஷா), 05ஆம் (அல் – மாயிதா) ஆகிய அத்தியாயங்களில் இது சம்பந்தமான இறையோன் அருளுரைகள் காணப்படுகின்றன.

அவற்றின் சில வரிகள் மட்டும் இங்கே பார்வைக்கு.

 “-- உங்களை  நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு  செல்லாதீர்கள்.அல் – பகறா 02-195ஆம்  வசனம்.

 “- உங்களையே நீங்கள்  கொலை செய்து கொள்ளாதீர்கள்...”- அன்னிஸா 04-  29ஆம் வசனம்

 “- எவர் ஒருவர்  விசுவாசியை வேண்டும் என்றே கொலை செய்தால் அவருக்குரிய கூலி நரகமாகும்....”
-  அன்னிஸா -04- 93 – ஆம் வசனம்

 “ - எவர் (நியாயமாக மற்றொருவரை) கொலை செய்கின்றாரோ, அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவர்...”
-   அல்- மாயிதா 05- 32ஆம் வசனம்.

இப்படி அல்- குர் ஆனில் கொலைக்கும் தற்கொலைக்கும் தடை இருப்பதை எப்படி ஓர் ஆசிரியமணி, கவிமணி, தெரியாமல் புரியாமல் கதை எழுதப் புறப்பட்டார் என்ற பெரும் புதிரும் வினாக்களும் எழும்புகின்றன.

கதை எழுதியவர் இப்பொழுது எம்மை விட்டு மறைந்துவிட்டார். எழுதப்பட்ட காலமும் 72 ஆண்டுகளுக்கு முன் மட்டக்களப்பு மண்டூரிலிருந்து வெளியான இலக்கிய சிற்றிதழான ‘பாரதி’ 09ஆம் இதழில் பிரசுரம். காலஞ்சென்ற பண்டிதர் ம. நாகலிங்கம்,  கு.தட்சிணாமூர்த்தி ஆகியோரும் நம்மிடையே வாழும் ந. செபரத்தினம் மூத்த எழுத்தாளரும் பதிப்பாசிரியர்கள். பின், “பாரதி”யின் முழுத் தொகுப்பும் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் முயற்சியில் 2016ல் வெளியிடப்பட்டு விழா கண்டுள்ளது.

இந்தக் கதையையே, ஏற்கெனவே குறிப்பிட்ட பேராசிரியர் அய்யா (முஸ்லிம் இலக்கியங்களில் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்) மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவையினரின் வருடாந்த சஞ்சிகை ‘தேனகம்” என்பதில், 2000ல் (21 ஆண்டுகளுக்கு முன்) “மட்டக்களப்பு சிறுகதை வரலாற்றில் புரட்சிக்கமாலின் சிறுகதைகள்” சிறப்புக் கட்டுரை வழங்கி, இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான கதையைச் சிலாகித்து 4 பக்கத் திறனாய்வைச் செய்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட இலக்கியம்சார் அனைவரும் இஸ்லாமிய நெறிமுறைகளை அறியாத, புரியாத நிலையிலேயே முஸ்லிம் வாசகர்கள் ஜீரணிக்க இயலாத ஒரு காரியத்தைச் செய்துள்ளனர்.

அத்தோடு, அன்றைய முஸ்லிம் வாசகர்களும் ‘பாரதி’ இதழைத் தொடாதவர்களாக இருந்திருக்க வேண்டும. இருந்திருந்தால் எதிர்ப்பு ஏற்படாதிருந்திருக்குமா? போகட்டும் அவர்கள் அத்தனை பேரையும் மன்னிப்போம்.

ஆனால்... கதை எழுதிய ‘பென்னாம் பெரிய ஆளுமை’ புரட்சிக்கமால் எம்.எம். ஸாலிஹ் என்பரை அவ்வாறு விடமுடியுமா? ஏன் இப்படி மார்க்கத்திற்கு விரோதமான படைப்பை வழங்கினார்.

சரி அவரும் நம்மத்தியில் இல்லாத படியால் எந்த விரலையும் அவரை நோக்கிச் சுட்ட நமக்கு அனுமதியில்லை.

கடைசியாக நம் முன்னே காட்சி அளிப்பது, ஆரம்பத்திலேயே அறிமுகமான தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழி.......... தலைவர் திருமதி ஸாதியா பௌஸரே!
கலாநிதியாக ஒரு பொறுப்பான பதவியில் உள்ள அவர், “புரட்சிக் கமால் கவிதைகள் பன்முகப்பார்வை” பார்த்துத் தொகுத்தது நல்ல முயற்சி. என்றாலும், சம்பந்தமே இல்லாமல் ‘படைப்பிலக்கியப் பார்வையும் பார்க்கச் செய்து, அதற்காக 21 ஆண்டுகளுக்குமுன் ஒரு பேராசிரியரால் திறனாய்வு கண்ட கட்டுரையை மறுபிரசுரத்திற்கு, உள்ளாக்கியது ஏன் என்பது ஒரு கேள்வி.

இன்னொன்று அந்தக் கட்டுரையில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான ஒரு கதை திறனாய்வுக்குள்ளாகி கண்டனத்திற்கு ஆளாகாமல் பாராட்டப்பட்டிருப்பது பார்வையில் படாது 2020ல் மறுபதிப்புக்குள்ளான மர்மம் என்ன?

நல்லது! நல்லது! சென்றவை சென்றவைகளாகட்டும். அவர் அதை நூலிலிருந்து நீக்கிவிட நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது.

நூல் இன்னும் விழா காணாவில்லை. வாசகர் கரங்களைச் சென்றடையவில்லை. சுற்று வட்டத்தினர் மத்தியிலேயே சுற்றுலா! நான் பெற்றதோ அவன் எண்ணப்படியும் திட்டப்படியும்!

கடமையைச் செய்வாரா கலாநிதி.

இந்தக் கசப்பை நிறுத்த முன் ஒரு மர்மத்தை உடைத்து விடுகிறேன். கதையை மிகவும் சிலாகித்து 21ஆண்டுகளுக்கு முன் திறனாய்வு புரிந்த பேராசிரியர் அய்யா நம் பெருமதிப்பிற்குரிய செ. யோகராசா! அவர் அறியாத புரியா தவறு!

ஓர் ஏமாற்றம்

அபிமானிகளுக்கு...

ஒரு கசப்பே முழு  பத்தி எழுத்துப் பக்கத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதால் ‘இனிப்பு’க்கு இடமில்லாது  போனதற்கு வருந்தி மன்னிப்பு விரும்புகிறேன்.
* நன்றி  சொல்வேன்! ஏரூர் கவிஞர் நௌஷாத்துக்கு ‘பாரதி’ இதழ்முகப்புகள் கிடைக்கச்  செய்தமைக்கு!    

Comments