![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/05/02/Kasappum-Inippum-Column.jpg?itok=ChuM-8ur)
கசப்பு-1
நமது ‘தினகரன்’ 89 அகவை மூத்த பெரியவர் என்றால், ‘தினக்குரல்’ என்றதொரு 25 வயது வாலிபன் அவரைப் பின்பற்றி கலை- இலக்கிய விடயங்கள் வழங்குவதில் நல்ல ஆர்வம், நல்ல பங்களிப்பு.
கடந்த கிழமை (25/04/2021) 25ம் பக்க ஓர் இலக்கிய நேர்காணலில், படுபடு அதிர்ச்சிக் கருத்துக்களை ஒருவர் இந்தப் பத்தி எழுத்து கசப்பு போலவே அள்ளி இறைத்திருப்பதைப் பார்த்தேன்.
நேர்காணலின் தலைப்பே,“ஆக்கங்கள் வெளியிடுபவர்களெல்லாம் ஆளுமையுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது’ எனப் பெரிய எழுத்துக்களில்.
முழு நேர்காணலிலும் ஒருசில கசப்புகளைப் பொறுக்கித்தரப் போகிறேன்.
* “பெண் ஆளுமையின் வடிவமே வேறு. புத்தகங்கள் வெளியிடுவதென்பது அது அவரவரின் பிறப்புச் சான்றிதழ் போன்றது. ஆனால் ஒரு படைப்பாளி ஓரிரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட பின்னர் அந்தப் பிரதேச சார்பானவர்கள் அல்லது அந்தப் படைப்பாளியின் குறிப்பிட்ட வட்டத்தை சார்ந்தவர்கள் அவரை, ஆளுமைப்படைப்பாளி என்று குறிப்பிடுவது ஒரு நகைப்புக்குரிய விடயம். எழுத்துப் பிழைகள்- சொற்தொடர் தடுமாற்றம்... ஆழமான உள்ளடக்கம்- உருவகங்கள் உவமைகள்- படிமங்கள் என்று தாண்டி கவிதை எதைப் பற்றிப்பேச வருகிறது என்பதையே மறந்து விடுகிறார்கள்.
* சொற்களை இழுத்துப் போட்டு வறட்டுத்தனமாக எழுதி வாசகரை மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். ஏதோ ஓர் அமானுஷ்ய உணர்வு போன்று கவிதையின் பிம்பத்தை காட்டுகிறார்கள். இவர்களெல்லாம் எப்படி ஆளுமையின் விருத்திகளாவர்...?
* அவரவர் படைப்புகளுக்கு அவரவரே விருதுகளை நாடித் தேடி சிபார்சில் பெற்று தன் பெயர்களை ஊடகங்களில் பதித்து, ‘ஆளுமைப் பெண்’ என்று மேடைகளில் முழங்கிவிட்டால் எல்லாம் சரியா...? பொன்னாடை உடம்புக்கு கிடைக்கும். ஆனால் உண்மையான திறமைகளுக்கு அல்ல. தமிழ் மொழி ஒரு வரம்....
---இப்படி அள்ளிக் கொட்டிவிட்டார் அந்தப் பெண்மணி. ஆம். ஒரு சகோதரியேதான்! அதுவும் கொழும்புப் பகுதியில் உள்ளவர். குடும்பத்தலைவியுங்கூட.
அவரை நேர்காணல் கண்ட கிழக்கிலங்கை “ஷல்மானுல் ஹரீஸ்” அவர் குறித்த பூரண விவரங்களைத் தராமல் ஆணித்தரமான, துணிவான கருத்துக்களுக்கே இடமளித்துள்ளார்.
பெண்மணியின் பெயரை வைத்து- அட! பெயர் குறிக்க மறந்தேனே! திருமதி ஃபாத்திமா நளிரா- உடன் பிறவாச் சோதரி திருமதி நூருல் அயின் நஜிமுல் ஹுசைனது புகழ்மிகு ‘தேடல் ஆய்வு நூலான ‘மின்னும் தாரகைகள்” வெளிச்சத்தில் 353 ஆம் பக்கத்தில் பளிச்!
திருமதி ஃபாத்திமா நளீரா, நமது மூத்தவர் ‘தினகரன்’ வாயிலாக கல்வி அரங்கம் பகுதிக்குள் நுழைந்தவர், மெதுவாகப் படைப்பிலக்கியத்திற்குள் நுழைந்து, திக்வல்லை எம். எச்.எம். சம்ஸ் வெளியிட்ட “அஷ்- ஷூரா”வில் தொடர்கதை எழுதி, கவிதைக்குள்ளும் புகுந்து, பின், உளவியல் கட்டுரை, திறனாய்வு, கவிஞர்கள் நேர்காணல் எனப் பரிணமித்தவர்.
ஆகவே, அந்தத் திருமதிக்கு காய்தல் உவத்தல் இன்றி கவிதைத்துறை சார்ந்தோரின் இன்றைய இழிவுகளை இடித்துக் காட்ட பூரண உரிமை உண்டு.
வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அவர் வழங்கியுள்ள கசப்புகளின் ஒரு சிலவற்றை என் கசப்பு வில்லைகளாகவே இங்கே வழங்கிவிட்டேன்.
பேனையும், அப்பியாசப் புத்தகமும் கையில் வைத்துக்கொண்டு அறைக்குள் முடங்கியுள்ள ஆளுமைப் பெண்களும் ஆண்களும் தங்களைத் தாங்கள் புரிந்தால் நலமே!
கசப்பு-2
அபிமானிகள் வாசித்துக்கொண்டிருக்கும் உங்கள் தினகரனின் அகவை 89. அதேபோல் அதன் வாசகர் ஒருவருக்கு வயது 73. இந்த அவிசாவளை மனிதரின் அருமையான பெயர் “பக்த சீலன்” ஆனால் “சி. ப. சீலன்” என்றே தினகரனுக்கு வாசகர் கடிதம் எழுதுவார் பலதும் பத்துமாக.
குற்றங்குறைகளைக கண்டுபிடிப்பது மட்டுமன்றி, மனம் பூரித்துப் பாராட்டும் பழக்கமும் உடையவர்.
மேலும், அவர் தெரிவிப்பது இதழில் ஏற்படும் தவறுகளை மட்டும் என்று அர்த்தமாகாது. பொதுவாகவே தான் காண்பதிலும், கேட்பதிலும், உணரப்படுவதினை வெளிச்சமிடுவார். அவை ‘வாசகர் கடிதம்’ பக்கத்தில் தவறாமல் இடம்பெறும்.
(இந்த “வா. க” இப்பொழுதெல்லாம் இடம் பெறுவதில்லை என்பது ஒரு குறை பொறுப்பாசிரியர் கவனத்திற்கு)
இந்த ‘சீலன்’ இப்போது செய்திருக்கும் காரியம், ‘வாசகர் கடிதம் பகுதி இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது ‘கசப்பும் இனிப்பும்’! என்று எனக்கே ஒரு கடிதத்தை அனுப்பி விட்டது.
அதில் அவர் ‘கண்ட’ ஒன்றும், ‘கேட்ட’ ஒன்றும் உள்ளது. கசப்புகளே!
அப்படியே அவர் கடிதத்தில் காணப்படும் கருத்துக்களை அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
*வசந்தம்' தொலைக்காட்சி பிரதி ஞாயிறு கிழமைதோறும் இரவு எட்டரை தொடக்கம் 9 மணிவரை ‘பயணம்’ என்னும் பெயரில் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் அனுசரணையில் ஒரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. கடந்த 2021/04/18ல் இடம்பெற்ற நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி கேட்கப்படவில்லை. குறிப்பிட்ட நிகழ்ச்சி பல வாரங்களாக இடம்பெற்று வருகின்ற போதிலும் வெற்றியாளர்களின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பொதுமக்களின் பேரபிமானத்தைப் பெறும் விதத்தில் செயல்பட வேண்டிய இலங்கைக் காப்புறுதி கூட்டுத்தாபனம் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதத்தில் செயல்படுவதை தவிர்க்கும் விதத்தில் ஒவ்வொரு வாரமும் வினவப்படும் வினாவிற்கு சரியாக விடை எழுதியவர்களில் பரிசுக்குரியவரின் பெயரை அடுத்த வாரம் அறிவிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும்.
***
* அன்னை வானொலியில் (தென்றல்) பழம்பெரும் அறிவிப்பாளர் ஒருவர் பணி. இவர் பல துறைகளிலும் திறமையானவர். ஆனால், ஒரு குறை செய்வார். “நிமிடம்” என உச்சரிக்க வேண்டிய பதத்தை எல்லாச் சமயங்களிலும் “நிமிஷம்” என்றே சொல்லி வடமொழிப் பிரயோகத்தைப் பிரபலப்படுத்துவார். இப்படி செய்யலாமா? அனுபவசாலி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
-இப்படி 73 அகவை சீலன் இரு சிறு குறைகளைத் தான் சுட்டிக்காட்டுகிறார்.
அவர் ஆதங்கத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தீர்க்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில், மூத்தவர் (பக்த) சீலன் பொல் ஏனையவர்களும் கடிதங்களில் கசப்புகளை அனுப்பிவைத்துவிட்டால் இடவசதிக்கு என்ன செய்வேன் என்ற கவலை!
இனிப்பு-1
அகில பாரதம் நம் அண்டை தேசம். அயல் வீடு. சில கிலோ மீற்றர் தூரங்களில் கடல் பிரித்து வைத்திருக்கிறது.
கடந்த வாரம் முழுதும்- இப்போதும்- நாளும் பொழுதும் மனம் கசந்தும் கனத்தும் போகிற சம்பவங்கள். மூலக்காரணி பகிரங்கம்: நானும் மேலும் சில தந்து கவலைகளைப் பெருக்குவது சிறப்பாகாது.
கடந்த வார இனிப்பைப் போல (நஸ்னீன் என்ற முஸ்லிம் நங்கை, இன நல்லுறவு மேம்பட அனுமான் பற்றிய புகழ் கீதங்களைத் தோழியருடன் கூட்டாகப் பாடி, பின்னர் தன் தாய்மொழி உருதுவில் மொழியாக்கம் செய்து நூல் வெளியிட்ட இனிப்புச் செய்தி).
இந்தவாரத்திலும் இனிப்பொன்று வழங்க இன்னொரு பெண்!
ஆனால் வட இந்தியா அன்று, தெற்கே மலையாளக் கரையோரம். (கேரளா) கோழிக்கோடு என்கிற நகரம் அருகே உள்ள கொயிலாண்டி ஊரின் ஜெஸ்னா சலீம்.
இவர் ஒரு குடும்பத்தலைவி இரண்டாவது குழந்தை பிறக்க இருந்த சமயம், பல பெண்களுக்கும் கவனக்குறைவால் ஏற்படுகிற அசம்பாவிதம் இவருக்கும்! குளியலறையில் வழுக்கல்! நல்லவேளை, காலில் மட்டும் காயம். வீட்டார் ஒரு வேலையும் செய்யவிடாமல் ஓர் அறைக்குள் முடக்கி விட்டார்கள்.
பொழுது போக வேண்டுமே! மேலே பரணில் குவிந்திருக்கும் பொருட்களில், பழசாகிப் போன ஒரு வண்ணப்படம் கண்ணில்படம் விரித்துப் பார்த்தால் சின்னக் கண்ணன் சிரிக்கிறான்.
புரிகிறதா? மாயக் கிருஷ்ணன், மங்கையர் கவர் மன்னன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற கண்ணபிரான் ஓவியமாக சிரிப்பு!
ஜெஸ்னா, பிற கேரளப் பெண்ணைப் போல படிப்பிலும் கெட்டி! 10ஆம் வகுப்பு சித்தி. அதில் ஓவியமும் ஒரு பாடம். பொழுதே போகாமல் தவித்தவர் கிருஷ்ணரின் படத்தைக் கண்ணாடியில் ஓவியமாகத் தீட்டத் தொடங்கினார். நேரம் நன்றாகவே கழிந்தது.
ஆனால் வீட்டில் கடும் எதிர்ப்பு!
“இவளுக்குப் பைத்தியமா?” என்றும் ஏச்சும் பேச்சும்! சமாளித்துவிட்டார்.
எப்படியோ இந்தச் செய்தி வெளியில் கசிந்து,
ஜெஸ்னா அடக்கமாக, மிகத்திடத்துடன் சொல்வது:
“இந்தியாவின் வட பகுதி இன நல்லுறவு இன்றி தவிக்கிறது. எங்கள் கேரளா ஓகே தான். ஆனால் அகில பாரதமும் மனிதருக்கு மனிதர் புரிந்துணர்வுடன் வாழவேண்டும். எனக்கு என் மார்க்கம் முக்கியம். அதிலேயே வாழ்வேன்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை விஷு தினத்தன்று காணிக்கையாக வழங்குவேன். ஆனால் இறப்புவரை முஸ்லிமாகவே வாழ்வேன்!”
இந்த ஆண்டும் சித்திரை மாதத்தில் ஜெஸ்னா வழங்கிய கிருஷ்ணர் ஓவியம், குருவாயூர் கோவிலை அலங்கரிக்கிறதாம்! (படம்: தினத்தந்தி நாளிதழ் பிரசுரித்தது. நன்றி)