பொருளாதார ரீதியாக சீனாவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் G7 லண்டன் செயலாளர் மாநாடு | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார ரீதியாக சீனாவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் G7 லண்டன் செயலாளர் மாநாடு

உலகலாவிய ரீதியில் அரசியல், பொருளாதார, ஜீ7 நாடுகள் முக்கியமான பங்கினை வகித்து வருகின்றன. எதிர்வரும் ஜீன் 11 தொடக்கம் 13 வரை இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள ஊயசடிளை டீயல எனுமிடத்தில் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதே சமயம் இந் நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் சந்திப்பொன்று கடந்த வாரத்தில் (03-.05.2021) நடைபெற்றது. ஜீ7 நாடுகளின் செயலாளர்கள் உரையாடிய விடயங்களில் கொவிட் தொற்றை முதன்மைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கொவிட் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதோடு உலகளாவிய ரீதியில் அத்தகைய வைரஸில் இருந்து மீட்சி பெறுவதற்கான நகர்வுகளை மேற்கொள்வது எனவும், சுதந்திரமானதும், நியாயமானதுமான வர்த்தகத்தை வென்றெடுப்பதன் மூலம் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது எனவும், காலநிலை மாற்றங்களை எதிர்க்கொள்வதற்கான உத்திகளை வகுத்தல் என்றும் அம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளன. சீனா தொடர்பாக ஜீ7 நாடுகளின் செயலாளர்கள் முன்வைத்த விடயங்கள் ஊடகப் பரப்பில் அதிகம் பேசப்பட்டுள்ளது.

முதலாவது, ஜீ7 நாடுகளின் சீனா தொடர்பான எச்சரிக்கைக்கு முன்னதாகவே அமெரிக்காவின் சீ.ஐ.ஏ, சீனாவின் போக்கு தொடர்பான தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடு முழுவதும் அமெரிக்காவிற்கு எதிராக சீனாவின் நகர்வினை அடையாளப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் மேற்குக்கும் அதிக சவால் விடும் நாடாக சீனா மாறியுள்ளதாக அமெரிக்க காங்கரஸிற்கு சீ.ஐ.ஏ சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கொவிட் 19க்கு பின்னர் சீனப் பொருளாதாரம், இராணுவ தொழிநுட்ப ஆயுத தளபாட வளர்ச்சி, அரசியல் ரீதியான ஆதிக்கம், புதிய பட்டுப்பாதை விரிவாக்கம் என அனைத்துமே சீனாவை 2049ம் ஆண்டில் முதன் நிலை வல்லரசுக்கான சாத்தியப்பாட்டை உறுதிப்படுத்தும் என்ற தகவலை வெளிப்படுத்துகின்றது. இதனை அடிப்படையாக கொண்டே ஜீ7 நாடுகளின் செயலாளர்கள் சீனாவிற்கெதிரான அதீதமான நகர்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதில் சீனாவிற்கு எதிராக உரையாடப்பட்ட விடயங்கள் அதீதமான அரசியல் முக்கியத்துவம் பெற்ற விடயமாக இருப்பதோடு சீனா உலகளாவிய ரீதியில் பின்பற்றி வரும் கொள்கைகளை நிராகரிக்கும் விதத்திலும் அதை முறியடிக்கும் உத்திகளோடும் ஜீ7 நாடுகள் நகர ஆரம்பித்திருக்கிறது.

ஒன்று, ஜீ7 நாடுகள் ஆபிரிக்காவுடனான கூட்டாண்மையை வளர்க்கும் நோக்கில் சில உபாயங்கள் ஜீ 7 செயலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சீனாவில் புதிய பட்டுப்பாதை ஆபிரிக்காவில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களை முறியடிக்கும் விதத்தில் ஆபிரிக்காவுடனான கூட்டாண்மையை விருத்தி செய்ய வேண்டும் என ஜி7 நாடுகளின் செயலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி ஆபிரிக்க கூட்டாண்மை ஜி 7 நாடுகளோடு இணைத்து செயற்படவும் பொருளாதார கட்டுமானங்களை அதிகரிக்கவும், சீனா முன்வைத்திருக்கின்ற பொருளாதார உட்கட்டமைப்புகளை தோற்கடிக்கும் விதத்தில் இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜி7 நாடுகளின் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டு, இந்தோ - பசுபிக் பகுதியில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்துவதுடன் ஜீ7 நாடுகளுக்கும், ஆசியான் அமைப்புக்குமிடையே அரசியல், பொருளாதார. வர்த்தக மற்றும் இராணுவ உரையாடல்கள் ஏற்படுத்தும்போது நெருக்கமான அபிவிருத்தி திட்டங்களை வகுப்பது என செயலாளர்களின் உரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தோ- பசுபிக் தந்திரோபாயத்தில் சீனாவின் ஒரே பாதை ஒரே சுற்று என்ற உபாயத்திற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய உபாயங்களை முன்வைத்துள்ளது. இந்தோ- பசுபிக் மையத்துக்கான ஆதரவை அதிகரிப்பதோடு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ- பசுபிக் உபாயத்தை ஊக்குவிப்பது என்றும் ஜனநாயக விழுமியங்களையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும், வெளிப்படைத் தன்மையையும், மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் என்பனவற்றை பாதுகாப்பதோடு, நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று, சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் மனித உரிமை அடிப்படை உரிமையை மதிப்பதற்காக சீனாவை நோக்கி அழைப்பு விடுக்கின்றது. ஜீ7 வெளிவிவகார செயலாளர்களின் சந்திப்பானது சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சின்சியாங் பிரதேசத்தில் காணப்படும் மனித உரிமை மீறல்களை நிராகரிப்பதோடு திபெத்தியர்களின் அரசியல் உரிமைகளை மீறும் சீனாவின் நடவடிக்கைகளை கண்டிப்பது என்றும் உய்குர் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தவும் அவர்களின் மீதான அடக்குமுறையை இல்லாது ஒழிக்கவும், பிற இன மற்றும் மத சிறுபான்மைக் குழுக்களின் மீது சீனாவின் மனித உரிமை மீறல்களினை தடுக்கும் விடயங்களை உருவாக்குவதென்றும் ஜீ 7 அமைப்பு செயலாளர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

நான்கு, தையைக்வான் மீது சீனாவின் நடவடிகை கண்டிக்கும் ஜீ 7 செயலாளர்கள் சந்திப்பில் தைய்வானியர்களின் அரசுரிமையையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதென்றும் அதற்காக ஜீ 7 நாடுகள் செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஐந்து, சைபர் தாக்குதல்களையும், அறிவுசார் சொத்து திருட்டையும் நடத்துவதையோ அல்லது ஆதரிப்பதையோ நிராகரிப்பதோடு சீனா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை முற்றாக தடுப்பதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் செயலாளர்கள் யோசனை வெளியிட்டுள்ளனர்.

ஆறாவது, வடகொரியாவின் மனித உரிமை மீறல்களையும், இராணுவ அச்சுறுத்தல்களையும் தடுப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவதோடு சீனா ரஷ்யா போன்றவை வடகொரியாவிற்கு வழங்கும் ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளவேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை சீனா ரஷ்யாவோடு இணைத்து ஜீ7 நாடுகள் செயற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏழாவது , ஜீ 7 நாடுகளோடு ஒத்துழைத்து செயற்படக்கூடிய இந்தியா, யப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா போன்றவற்றை இவ்வமைப்பில் இணைத்துக் கொள்ளவேண்டும் எனவும் பிராந்திய ரீதியாக அந்த நாடுகள் எதிர்க்கொள்ளும் சவால்களுக்கு ஜீ 7 நாடுகள் முகம்கொடுக்கவும், ஒத்துழைக்கவும் தயாராக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

எட்டாவது, மியன்மாரில் நிகழ்ந்துவரும் இராணுவ சதித்திட்டத்தை தோற்கடிப்பதற்கு ஜீ 7 நாடுகள் செயற்பட வேண்டுமென்றும், ஜனாநாயக ரீதியான அரசாங்கத்தை மீள நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும் ஜீ 7 நாடுகள் முயலுதல் வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஷ்யாவோடு உரையாடி பிராந்தியத்தை அமைதி வலயமாக உருவாக்க வேண்டும் என்றும் வலியுதியுள்றுத்தியுள்ளது.

ஒன்பது, தென்கிழக்கு மற்றும் தென் சீனக்கடலில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான நிலையை முடிவுக்கு கொண்டுவர ஜீ 7 நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஐக்கிய நாடு சபையின் கடற்சட்டத்தினை மதித்து சீனா செயற்ட வேண்டும் என்றும் அதனை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் ஜீ 7 நாடுகள் கூட்டாக முடிவினை எடுத்து செயற்பட வெண்டும் எனவும் அம் மாநாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து, அவ்வாறே சிரியா, ஆப்கானிஸ்தான் ஈரான் போன்ற நாடுகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதோடு உலகளாவிய ரீதியில் கடற்சார் பாதுகாப்பையும் ஆயுத மோதல்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் மதவாத தாக்குதல்களையும் முடிவுக்கு கொண்டுவருவதோடு பிராந்தியங்களையும் நாடுகளையும் ஒன்றிணைத்து நகர்வுகளை ஜீ7 நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என செயலாளர்களின் லண்டன் சந்திப்பு முடிவெடுத்துள்ளது.

எனவே, கொவிட் தொற்றில் இருந்து உலகளாவிய அரசியல் , பொருளாதார, இராணுவ விடயங்களில் சீனாவிற்கெதிரான உத்திகளை அதிகம் பிரதிபலிப்பதாக ஜீ7 மாநாட்டுகான பூர்வாங்க ஏற்பாட்டு குழு வெளிப்படுத்திய அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. எனவே அமெரிக்கா தனித்தும், ஜீ 7 நாடுகளும் , ஐரோப்பிய நாடுகளும் சீனாவிற்கு எதிராக முக்கியமான நகர்வுகளை மேற்கொள்ளும் தம்மைத் தயார்ப்படுத்தி வருகின்றன. இராணுவ ரீதியில் நேட்டோவை முதன்மைப்படுத்தும் விதத்தில், பொருளாதார ரீதியில் ஜீ 7 சீனாவிற்கு எதிராக முன்னிருத்தும் உபாயத்தை ஜீ 7 லண்டன் மகாநாடு உறுதிப்படுத்துகின்றது. ஆனால் ஜீ7 அணியின் உறுப்பு நாடுகளான யப்பான், இத்தாலி என்பன சீனாவுக்கு எதிரான நடவடிக்கையை முதன்மைப்படுத்தத் தயங்குவதாகவும் சீனாவுடனான வர்த்தக மற்றும் சந்தை விடயங்களிலும் சுகாதார விடயங்களிலும் நெருக்கமான உறவை பின்பற்றிவரும் நாடுகளாக அவை உள்ளதாகவும் தெரியவருகிறது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments