புதுமையான, தொழில்நுட்ப உந்துதல் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வியில் இலங்கையின் முன்னோடியான இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (SLTC) அண்மையில் அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் (JCU) சிங்கப்பூர் வளாகத்துடன் கூட்டிணைந்துள்ளது. இப்புதிய முயற்சியின் கீழ், சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் நிகழ்வுகள் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட JCU இன் இளங்கலை பட்டத்தை பெற விரும்பும் இலங்கை மாணவர்களுக்கான பாதைகளை SLTC உருவாக்கியுள்ளது.
சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் நிகழ்வுகள், பயணங்கள் மற்றும் சுற்றுலா முகாமைத்துவம் (Tourism, Hospitality and Events, Travel and Tourism Management) ஆகிய துறைகளில் இரட்டை பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை இக்கூட்டாண்மை வழங்குவதுடன், அவர்களின் பட்டப்படிப்பின் கடைசி இரண்டு வருடங்களை சிங்கப்பூரில் தொடர வழியேற்படுகின்றது.
SLTC யில் முதல் இரண்டு ஆண்டுகள் முடித்த பின்னர் அல்லது JCU பட்டத்திற்காக SLTC யில் ஒரு வருடம் படித்து ஏனைய 2 வருடங்களை இவ்வாறு சிங்கப்பூரில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், சர்வதேச அனுபவத்தைப் பெறுவதற்காக சிங்கப்பூரில் ஒரு சில பாடங்களைக் கற்க SLTC மாணவர்களுக்கு மற்றொரு தெரிவும் வழங்கப்படுகிறது.
இப்புதிய கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த, SLTC இன் ஸ்தாபத் தலைவர்/ பிரதான நிறைவேற்று அதிகாரி, ரஞ்சித் ரூபசிங்க, “James Cook பல்கலைக்கழகம் ஆனது, ஒரு பெறுமதிமிக்க உயர்மட்ட பல்கலைக்கழகமாகும், அவர்களது இலங்கைக்கான பங்காளர்களாக ஆகியுள்ளமை தொடர்பில் நாங்கள் பெருமிதமடைகிறோம். உயர் கல்வியின் அடிப்படையில், தங்கள் சொந்த நாட்டிலேயே நியாயமான மற்றும் மலிவான கட்டணத்தில் உலகத்தினால் வழங்கக் கூடியவற்றில் மிகச் சிறந்ததை, இலங்கையின் எதிர்காலத்திற்காக வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் - இதுவே SLTC இன் ஆரம்பத்தில் இருந்தான நோக்காக அமைந்துள்ளது.” என்றார்.