கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

இன்று ஞாயிறு (16.05.2021) முழு ஊரடங்கு என்றில்லாமல் ‘ஒரு விதமான ஊரடங்கு’ முடக்கத்தில், 

பேப்பர் பையன் அல்லது பேப்பர் கடைக்காரர் ஒழுங்காக உங்கள் வாசிப்புக்கு வசதி செய்திருப்பார்களோ எனப் புரியா நிலை என் பேனைக்கு!  

எவ்வாறாயினும், வீட்டிலிருந்த படியே, அங்கே தொலைதூரம் பலஸ்தீன ஜெருசலத்தில் ஒரு விந்தையான, வேதனையான காட்சிகள் நிகழ்வுகள், கடந்த ஒரு வாரமாக நடப்பதையாவது கண்டீர்களா? 

“அல் – ஜஸீரா’ ‘சிஎன்என்’ தொ.கா. ஒளி அலை வரிசையில் நான் பார்த்தேன். 
ஒரு சீன தேசத்தின் கிருமி உற்பத்தியால் உலகமே துவண்டு இறப்புகள் கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் ஓர் இஸ்ரேலியன் (யூதன்) ஒரு பலஸ்தீனியனை (முஸ்லிமை) கொல்வதிலும், அவன் வாழ்ந்த சிறு குடிலை அழித்து தரைமட்டமாக்குவதிலும் குறி!” 

அதுவும், முஸ்லிம் சமூகத்தின் மகத்துவமிக்க ரமழான் மாதத்தின் இறுதிப் பொழுதுகளில் அல்- குர் ஆன் அருளப்பெற்ற புனித ‘லைலத்துல் கத்ர்’ காலத்தில் இஸ்ரேலிய யூத அட்டூழியங்கள். உலகில் 50 முஸ்லிம் நாடுகள் இருந்தும் இந்த இஸ்ரேல் – பலஸ்தீன இடியப்பச் சிக்கல் ஒரு ‘சாண்டில்யன் தொடர், நாவல் போல் ஆண்டுக்கணக்கில்! 

“இஸ்ரேல் பலஸ்தீன் மோதலின் மையமாக கிழக்கு ஜெரூசலம் உள்ளது. இந்தப் பகுதி தங்களுக்குத் தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர். 
1967 மத்திய கிழக்கு போர் தொடங்கிய பிறகு கிழக்கு ஜெரூசலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்குள்ளானது. ஜெரூசலம் முழுவதையும் தமது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தபோதும் அதிகப் பெரும்பான்மையான சர்வதேச சமூகம் அதனை அங்கீகரிக்கவில்லை. 

* பலஸ்தீனியர்களோ எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெரூசலம்தான் தலைநகராக அமையும் என்று கூறுகிறார்கள். 

*இவ்வாண்டும் புனித இரவான லைலதுல் கதிர் இரவில் ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் டமஸ்கஸ் வாயிலில் ஒன்றுகூடிய சூழலிலேயே கடந்த 19.05.2021 சனிக்கிழமை இரவு மோதல் வெடித்தது. 

“அவர்கள் நாங்கள் தொழுவதை விரும்புவதில்லை. எந்நாளும் மோதல் வெடிக்கிறது என்று 27 வயதான மஹ்மூத், அல் மர்பு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். 
10.05.2021 கடந்த திங்கட்கிழமை கடும் மோதல் இடம்பெற்ற நிலையில், அல் அக்ஸா பள்ளிவாசலில் பலஸ்தீன வழிபாட்டாளர்கள் (சுபஹூ) அதிகாலை தொழுகையை அமைதியாக நிறைவேற்றினர். 

“ஜெரூசலம் மற்றும் அல் – அக்சா பள்ளிவாசலில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து வகையான ஆக்கிரமிப்பு, பயங்கரவாதச் செயல்களையும் நிறுத்தும் வரை ரொக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும்” என்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியோ தெரிவித்துள்ளார். 

* இந்நிலையில், கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜெர்ரா மாவட்டத்தைச் சேர்ந்த பலஸ்தீன குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் முயற்சிக்கிறது.  
இந்த முயற்சியை இஸ்ரேல் கைவிட வேணடும் என்று ஐ.நா வலியுறுத்துவதோடு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளும் போடுகிறது. 

ஆக மொத்தத்தில் நீங்கள் படிக்கும் 16ம் திகதி ஞாயிறன்று “முழு வீச்சில் போர்” என்ற செய்தி கிடைக்கலாம். 

கிடைக்கக் கூடாது என்ற பிரார்த்திப்போடு இந்தப் பத்தி எழுத்தை வியாழன் மாலை அச்சுக்கு அனுப்பத் தயாராகின்றேன்.  

அதேசமயம் எம்மவர் ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தப் பரிதாபம் பலஸ்தீனியப் பாவப்பட்ட முஸ்லிம் சமூகத்தினர் நிலை நினைத்து நெஞ்சு பதறி வரலாற்று நூலொன்றை 150 பக்கங்களில் வழங்கியுள்ள செய்தியை, கவிமாமணி கா. மு. ஷெரீப் பாணியில், “சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?” என வினவ மிக விருப்பம். 
யார் அவர்? எவர்? இங்கு பிரசுரமாகியுள்ள நூலின் முகப்புப் படத்தில் நூலின் தலைப்பும் பெயரும் உள்ளது. 

அந்தத் தகைசார், எளிமை, இனிமையானவர் பற்றி என் நெஞ்சுக்கூட்டில் நிலைத்திருக்கும் ‘ஆசுகவி’ அன்புடன் நூலின் பின்னட்டையில் பதித்துள்ளவற்றிலிருந்து! 

* பலஸ்தீன மக்களது விடுதலை வேண்டுதலை, வேட்கையை இஸ்ரேல்காரரது இரும்பிதய இருள் முகத்தை, இழி குணத்தை, கொடுமைகளை கட்டுரையாய் எழுதி நூலாக்கம் செய்துள்ளார். 

* பஸ்தீன மக்களது பச்சை இரத்தக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் ஒரு ஔடத முயற்சி இந்நூல். 

* ஆசிரியர் எஸ்.எல். மன்சூர் நல்லதொரு படிப்பாளி, படைப்பாளி, பன்முகத்துப் பக்குவத்தான். 

கட்டுரை, ஆய்வு, கவிதை, கதைகளென கனதியான எழுத்துக்களின் கருப்பை பிரசவத்தான். 

இனிப்பு

ஆசுகவி அன்புடீனின் அச் சொட்டான பதிவின் படி என் நெடுநாள் வாசக அபிமானி. மன்சூர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, இப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் பலஸ்தீன் நிலையை 25 அத்தியாயங்களில் விலாவாரியாக வழங்கி விட்டார். 

‘கவிதை கவிதை’ என நாளும் பொழுதும் ‘வரிக்குதிரை’ சவாரி செய்யும் தம்பி தங்கச்சிமார்கள். இப்படியான நூல்களை ‘முகர்ந்து’ பார்த்து, தான் வாழும் கேவல கோலங்களை அறியுங்கள். நூலாசிரியுடன் தொடர்பு கொள்ளக் கூடிய தொ.பே. 077-9059684. 

பதினேழு ஆண்டுகளுக்கு முன், காரைக்கால் தமிழக் காவலர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காரர் கோலாகலமாக நடத்திய இஸ்லாமியத்தமிழ் இலக்கியப் பெரு மாநாட்டின் போது அந்த இருபத்தியிரண்டு அகவை வாலிபன் ஒரு கவர்ச்சிப் புன்னகையுடன் என்னருகில் வந்து வியப்பாகப் பார்த்து எதுவும் பேசாமல் நின்றிருந்தான். 

“என்ன தம்பீ! நீங்க யாரு? எந்த ஊரு? பேசலாமே...!” என்ற பொழுது மீண்டும் மோகன புன்னகை! பிறகு முத்து உதிர்த்தார்.  

“நான் ஆளூர் ஷா நவாஸ். வாசிப்பும் எழுத்தார்வமும் கொண்டவன். 

‘இலங்கை கண்ட குமரி’ ஆய்வு நூல் மூலமாகவே எங்கள் பகுதியைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்தேன். இந்த வயதில் நாடுவிட்டு நாடு வந்து கள ஆய்வு செய்து பல முஸ்லிம் ஊர்களைத் தெரியச் செய்வது வியப்பாக இருக்கிறது!” எனப் புகழ்ந்த பொழுது அது ஒரு சிறிய சொற்பொழிவு போலவும் இருந்தது! 

இன்று அந்த இளைஞன், 39 வயதுப் பராயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளனாக வரலாற்றுப் புகழ் நாகப்பட்டினத்தில் களமிறங்கி, தேர்வாகி, கடந்த 11ம் திகதி புதிய தமிழக சட்டசபையில் ஓர் உறுப்பினராக (எம்.எல்.ஏ.) சத்தியப்பிரமாணம். 
அன்று 17 ஆண்டுகளுக்கு முன் ஒரு கலை இலக்கியப்பிரியனாக என்னைக் கண்டு வியந்த வாலிபரை, இன்று நான் வியந்து போய் இனிப்பு இனிப்பாக இந்தப் பத்தியில் கொண்டு வந்து நிறுத்துகிறேன். 

அவரைத் துணிந்து, மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன் கட்சி வேட்பாளராக்கி வெற்றி பெறச் செய்த ‘சிறுத்தை’ திருமாவளவனைப் பெரிதும் பாராட்டி நன்றி தெரிவிக்கிறேன்.  

“எம்.எல்.ஏ” தம்பி முகம்மது ஷா நவாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணையுமுன் இதயசுத்தியோடு சில முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து உழைத்தவரே, முக்கியமாக ஊழியம் புரிந்த கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லாவுடையது. அங்கேயே நிறைய அரசியல் பாடங்களைக் கற்றார் என்று சந்தேகம் எதுவும் இல்லாமல் பதிக்கலாம். 

ஆனால் பாருங்கள் அபிமானிகளே, அந்தக் கட்சியிலிருந்தபடியே அவரால் உயர வராமல் போய், இப்போது “ஆசானும் சிஷ்யனும்” ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு தொகுதிகள், கட்சிகளிலிருந்து சட்டசபைக்குத் தேர்வாகியிருப்பது. 

இப்பொழுது ஆசான் ஜவாஹிருல்லா ஓர் இருக்கை! சிஷ்யன் பக்கத்து ஆசனம்! 

“என்னா வினோதம் பாரு! நல்ல சினிமா ஜோரு” என்று பழையது நகைச்சுவை நடிகர் சாரங்கபாணி பாடிய பாட்டு ரீங்கார மிடுகிறது. 

எவ்வாறாயினும் சரியே, ஒரு காலத்தில் குமரி மாவட்டம் கேரளத்துடன் இணைந்திருந்தது, நாகர்கோவில்,- கோட்டார், - ஆளூர் பிரதேசங்கள். இப்போது தமிழகத்துடன். அந்த இயற்கை எழில் கொஞ்சும் ஆளூர் கிராமப் புறத்திலிருந்து தான், ஒரு கால கலை – இலக்கியவாதி கவிஞன் ஷா – நவாஸ் தலையெடுத்திருக்கிறார்.
இப்போது இங்கே தலையெடுத்திருக்கும் கிழக்கிலங்கை சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினருடன் அவரையும் ஒப்பிடத் தோன்றுகிறது. 

என்னை அனுமதியுங்கள்.

Comments