![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/10/03/a18.jpg?itok=l2Fhcg_U)
நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை 19 வயதுக்குபட்ட அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 26 வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டால் பண வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டால் முன்னெடுக்கப்படுகின்ற விசேட வேலைத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அந்த வீரர்கள் வெளிப்படுத்திய திறமைக்கும், அர்ப்பணிப்புக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பண வெகுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை 19 வயதுக்குபட்ட அணியில் இடம்பெற்றுள்ள 26 வீரர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வத்துஹேவா, இலங்கை கிரிக்கெட் அபிவிருத்திப் பிரிவின் பிரதானி டிம் மெக்காஸ்கில் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சின்தன எதிரிமான்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வீரர்களுக்கான பண வெகுமதிகளை வழங்கிவைத்தனர்.
இதனிடையே, குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன கருத்து தெரிவிக்கையில்,
”நாங்கள் விளையாடிய காலத்தில் போதுமான கிரிக்கெட் வசதிகள் மற்றும் எங்கள் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. எவ்வாறாயினும், கிரிக்கெட் வீரர்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான சிறந்த வசதிகளை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அயராது உழைத்து வருவதால் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் திறமையான வீரர்களை அடையாளம் காணும் நிகழ்ச்சியின் மூலம் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேசிய அளவில் முன்னேற நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 26 வீரர்களுக்கும் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடத்தப்பட்ட 22 நாட்களைக் கொண்ட வதிவிட பயிற்சி முகாமானது நேற்று (29) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.