கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கடந்த வாரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற திரும்பவும் தலிபான் ‘நண்பர்கள்’ கசப்பில்!

அடிக்கொரு தடவை மூச்சிலும் பேச்சிலும் ‘ஷரீயத்’ (இஸ்லாமிய விதிமுறைகள்) ‘இஹ்லாஸ்’ மனத் தூய்மை எனச் சொல்லிக் கொள்கிற இந்த ‘நண்பர்கள்’ 1996- லிருந்து 2001- வரை 05ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்டபோதும் கிடைத்த வருமானத்தில் முதன்மையாக இருந்தது, போதைப் பொருட்களின் வர்த்தகமே!

உலகளாவிய அபின் போதை தயாரிப்பில் முன்னணி இடம் வகிப்போர்! மார்க்கம் பேசும் இந்த ‘நண்பர்களே! உலக உற்பத்தியில் சுமார் 84 விழுக்காட்டை இவர்களே தன் வசம் கொண்டுள்ளனர். தங்கள் உற்பத்தியைத் தெருக்களில் போட்டு விற்பார்களாமே!

இரண்டாவது தடவையாக ஆட்சியைப் பிடித்துள்ள இந்த அன்பர்கள், போதைப் பயிர்கள் வளர்ப்பதையும், உலகளாவிய கடத்தல் மன்னர்களாக ‘மாறுவேடம்’ போடுவதையும் சீனா தடுக்க வேண்டும் என,

லான்சு பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணரான வாங் ஜிங்கு தெரிவித்துள்ளார்.

வேறு சில சீன விவசாய வல்லுநர்கள், அபின் பயிர்ச்செய்கைக்கு மாற்றுப் பயிர்களை சீனாவே வழங்க முடியும் என ஆட்சியாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

‘யா அல்லாஹ்வே” என்றே விசனிக்க வேண்டியுள்ளது.

இந்தப் பின்னணியில் நம் கண்மணிகளாம் பெண்மணிகளுக்குக் கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் அலசினால் அலங்கோலங்கள் பல பல பப்பளா!

கிழக்கு காபூலில் உள்ள உயர் பாடசாலைக்கு வெளியே கூடிய ஆறு பெண்கள் கொண்ட குழு ஒன்று, பெண்கள் பாடசாலைக்கு திரும்புவதற்கான உரிமையைக் கோரி கோசம் எழுப்பியுள்ளது. கடும்போக்கு தலிபான்கள் பெண்கள் பாடசாலை திரும்புவதற்கு இந்த மாத ஆரம்பத்தில் தடை கொண்டு வந்தமையே காரணம்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், எமது பேனைகளை உடைக்க வேண்டாம். எமது புத்தங்களை எரிக்க வேண்டாம், எமது பாடசாலைகளை மூட வேண்டாம் என்று கோசங்கள் எழுப்பிப் பதாகைகள் ஏந்தி இருந்தனர்.

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பது தற்காலிகமான நடவடிக்கைதான். அவர்கள் விரைவில் பள்ளிக்கு திரும்புவர்” எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபீஹூல்லா முஜாஹித் சமாதானம் சொல்லியும் சரிப்பட்டு வரவில்லை.

பெண்களது கல்வியின் எதிர்காலம் இப்படிக் கேள்விக்குறி என்றால், விளையாட்டுத் துறைக்கு என்ன கதி என்பதை விவரிப்பது வீண். இருந்தாலும் சிலவரிகள்.

விளையாட்டுகளில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்பது நம் ‘இஹ்லாஸ்’ காரர்களின் கடுமையான கட்டளை. அதனால் என்ன நடந்துள்ளது?

ஆப்கானிஸ்தானில் சிறப்பாக செயற்பட்டு வந்த பெண்கள் உதைப்பந்தாட்ட அணி தலிபான்களின் கெடுபிடிகளால் நாட்டை விட்டு வெளியேறி தற்போது போர்த்துக்கல் நாட்டில் தஞ்சமடைந்துள்ளது. பெண்கள் எந்த விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடாது என்பது தலிபான்களின் கண்டிப்பான உத்தரவாகும்.

இந்நிலையில் வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்த்துக்கல் அறிவித்துள்ளது. இது குறித்து பெண்கள் அணியினர் கூறும்போது, “நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம். சுதந்திர பறவையாக மாறி இருக்கிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்திருந்தால் தலிபான்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

நாங்கள் திறமையான கால்பந்து வீராங்கனைகளாக வரவேண்டும் என்பதே எங்கள் கனவு!” என்கிறார்கள்.

ஏற்கெனவே, புதிய அமைச்சரவையிலும் பின் ஏற்பட்ட விரிவாக்கத்திலும், கண்மணியாம் பெண்மணி ஒருவருக்குக் கூட இடம் கொடுக்கப்படவில்லை.

ஆட்சியாளர்களின் ஒரு முக்கியப் பிரமுகர் உயர் இடத்தில் வைக்கப்பட்டிருப்பவர், உதிர்த்திருக்கும் ஊத்தை வார்த்தைகள்’ இவை: எங்கள் பொம்பிளைகள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மட்டுமே இருக்கணும்’ வேற பேச்சு எதுவும் பேசப்படாது! நாங்க ஷரீயத் முஸல்மான்கள்!”

ஆண்டவனே! கண்ணீரே காணிக்கை .

‘அதானி’ இன்றையப் பொழுதில் இரு பிரபலத்தின் பெயர் அதுவும் இந்தியாவிலும் இலங்கையிலும் எக்கச் சக்கமாக.

நம்ம கொழும்பு காலிமுகக்கடலை (கால்பேஸ்) ஊடறுத்து வியாபித்துப் பரந்திருக்கும் ‘கடல் அம்மையின்’ மேற்கு முனையத்தை 700 மில்லியன் (ஒரு மில்லியன் – பத்து இலட்சம்)டொலர்களை அள்ளிக் கொட்டி குத்தகைக்கு எடுத்திருக்கிற ஆசாமி! இன்னும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நம் தாய் நாட்டுக்குத் திரும்ப ஒப்படைப்பார் இவ்வாறு ஒப்படைக்கும் இவரது ‘அதானி குழுமம்’ வட – இந்தியாவில் இருக்கிறது இவர் கோட்டை!

சிலர் வினவுவீர்கள் இப்படி:

“அப்போ, சீனா, சீனா என்று ‘சீனாக்குப் பண்டம்’ போல கொடுக்கப்பட்டிருக்கிற கடல் பகுதிக்கு என்னாச்சு?”

ஒன்னும் ஆகலே! ‘சீனாவுக்குப் பண்டத்தை சீனா லேசாத்தள்ளி விடுமா? அது காலிமுகக் கடற்கரைப் பிரதேச துறைமுகப்பகுதியில் தென்புறத்தில் கொள்கலன் முனையம் அமைக்க- –

‘இது (இவர், அதானி) மேற்குப் புறத்தில் அதே கொள்கலன் முனையம்!

வித்தியாசம்! தெற்கில் ஒரு தேசமே அமைக்கிறது. மேற்கில் ஒரு தேசமோ, நாடோ, காடோ சம்பந்தப்படாமல் அந்தத் தேசத்தின் (இந்தியா) முன்னணி நிறுவனமொன்று சம்பந்தப்படுகிறது.

‘ஒரு தனியார் துறை முதலீடு’ என்றே அரசியல் அகராதியில் அர்த்தப்படும்.

தற்போதையப் பாரத ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு நெருக்கமோ நெருக்கம். ஏன், சுற்றிவளைப்பு? பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளை இந்த அதானி!

இந்தளவில் இந்தத் தகவல்களை நிறுத்தி, இன்னொரு பூகம்பச் செய்தியை இப்பொழுது பதிவிடுகின்றேன்.

இந்த அதானி என்கிற தனி மனிதரின் ஒரு நாள் வருமானம் 1002- கோடி! அச்சப்பிழை அல்ல,

1002 – கோடியே!

இதைப் படித்து யார் யாரெல்லாம் மயங்கி விழுந்தீர்களோ, தகவல் தாருங்கள்

“ஐ.ஐ. ஃஎப்.எல்” என்றொரு நிறுவனம், 2020-– - 2021ஆம் ஆண்டுக்கான இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிலேயே இத்தகவல்.

அதானி, ஆசிய நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது நபராம்!

கடந்தாண்டில் இவர் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 1002கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சொத்து வளர்ச்சியின் மூலம் சீனாவைச் சேர்ந்த குடி தண்ணீர் விநியோகஸ்தர் சாங் ஷன் ஷன் என்னும் கோடீஸ்வரர் பின் தள்ளப்பட்டு அதானி அவர் இடத்தைப் பிடித்துள்ளாராம்.

எதிர்காலத்தில் இலங்கை கால்பேஸ் கடற்கரை மேற்குப்புறத் துறைமுக முனையம் மூலம் முதலிடமே பெற்று விடலாம்! எளிது! எளிது!

இந்தியாவில் கோடீஸ்வரப் பட்டியலில் முதலாம் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி பத்து ஆண்டுகளாய்.

‘கிளார்க்கர்’ என எல்லோர் வாயிலும் வருகிற, வார்த்தைக்கு நல்ல தமிழ் ‘இலிகிதர்’. அரசு சார்ந்தவருக்கு இன்றைக்கும் செல்வாக்கே! கண்களைப் பொத்திக் கொண்டே கன்னியரைத் ‘தானம்’ செய்வது இன்றைக்கும் வடக்கில் இருப்பதாகக் கணிக்கிறது பேனா.

இருக்கட்டும் ஒரு யாழ் தமிழ் இலிகிதர் இளைஞனை வைத்து, 70களில (1977?) அவன்படும் இன்னல்களை இனத்துவேசங்களை சித்தரித்து ஒரு மனிதர் – அவர் ஆளுமை மிகு சுனில் ஆரியரத்தின, இப்போது முதுமையில் – ஒரு சிங்களப்படம் எடுத்தார்.

என் ‘நிழல்’ அப்போது கொழும்புத் தலைநகருக்கு வந்த புதிது (சிங்களப் படத்திற்குக் கூட்டிப் போகிறீர்களே?” என்ற வியப்பில் என்னுடன் ஓட்டிக் கொண்டு எம்பயர் தியேட்டருக்குள் (இப்போது இல்லை) ‘ஓடூசி’ இருக்கையில் அமர்ந்தார்.

திரையிலே ‘சருங்கலே’ என்ற சிங்களப் பெயர் பளிச்சிட்டதும்’

“அட! இதென்ன பட்டம்?’ என்றவரை அமைதிப்படுத்தினேன்.

இலிகிதர் கதாநாயகன் தோன்றினார் சிங்களம் தெரியாமல் தமிழில் பேசத் தொடங்கினார்!

“என்ன இது? காமினி பொன்சேகாவுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

‘நாடராசா’ என்று பெயர் சொல்கிறாரே!” என்று குரலிட்டு என் ரசிப்புக்கு இடையூறு செய்தார் நிழல்!

இப்படத்திற்குப் போனதே ஒருவரது வேண்டுகோளுக்காகத்தான்.

அவர் திருமதி யோகா பாலசந்திரன் என நெருங்கிய நண்பர் ‘டைம்ஸ்’ பாலச்சந்திரனின் காதல் கிழத்தி. அச்சமயம் அவர் ‘வீரகேசரி’ ஆசிரியபீடத்தில்.

“நான் தான் பட வசனகர்த்தா. காமினி பொன்சேகாவுக்குத் தமிழ்ப் பயிற்று வித்து ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ குறள் சொல்லிக் கொடுத்து அசத்தியிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு ‘நிழலாய் வாய்த்தவருடன் பார்க்கணும்” என்ற அப்பெண் மணியின் பெரிய வேண்டுகோளே ‘பட்டம்’ திரையில் பறப்பதைப் பார்க்கச் செய்தது.

அதுவொரு அற்புதத்திலும் அற்புதமான அனுபவம்.

சுனில் ஆரியரத்ன நெறியாள்கை செய்ததும், சிங்கள ‘சுப்பர் ஸ்டார்’ காமினி பொன்சேகா ‘நடராசா’வாக நடித்ததும் யாழ். கரவெட்டியில் ஜாகை இட்டு தமிழ்ப் பகுதிக் காட்சிகளை எடுத்ததும் இன்றைக்கும் புதுமை புரட்சி.

வழக்கம் போல் தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோர் ‘சருங்கலே’ பறப்பதைப் பார்க்காமல் உதாசீனம்.

சிங்களத் திரைப்படத்துறையினருங் கூட இத்தகைய அசாதாரண முயற்சிகளைத் தொடர விரும்பவில்லை.

அதே சுனில் ஆரியரத்ன மட்டும் மற்றுமொரு முயற்சியில் இறங்கி ‘சகுந்தலையை சிங்கள ரசிகர்களுக்கென மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் வழங்கினார். புத்திசாலியாக தமிழ் டப்பிங் வழங்கவில்லை.

‘நடராசா’ வாக மாறிய காமினி பொன்சேகா, தன் சொந்தத் தயாரிப்பாக தமிழ் – சிங்கள பிணைப்பை வலியுறுத்த படங்கள் தரவிரும்பியதுண்டு. எனினும், 2004- செப்டம்பர் 30ல் பிரியாவிடைபெற்று இன்று 17 ஆண்டுகள்.

ஒரு நீண்ட இடைவெளியில் ‘சரோஜா’ என்ற தமிழ்ப் பெயரில் ஒரு சிங்களப்படம் சோமரத்ன திசாநாயக்கா -- ரேணுகா தம்பதி தயாரிப்பு. இது என்ன செய்தி சொல்லியதென்பது நான் அறியாதது (வெளிநாட்டில்).

ஆனால் இதே தம்பதி கடந்தாண்டு ஆரம்பத்தில், “சுனாமி” என, அனைவருக்கும் பழக்கப்பட்ட பெயரில் சிங்கள தமிழ்ப் படம் வழங்கி எம்போன்றோர் நெஞ்சங்களில் நிறைந்தார்கள்.

‘கசப்பும் இனிப்பும் 20/06/2020ல் நிறையவே என் இனிப்பான பதிவுகள் உள்ளன. அந்தத் தம்பதியர் மீண்டும் ‘சுனாமி’யைத் திரையிட காலத்திற்கும் நேரத்திற்குமாகக் காத்திருக்கிறார்கள்.

Comments