![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/11/21/Kasappum%20inippum.jpg?itok=PthBkmQw)
கசப்பு-1
ஒருவரது நிரந்தரமான பிரிவில் அவருக்காக ஒரு நினைவேந்தல் மலர் வெளியிடுவது வட திசை மக்களின் வழக்கம். அதனைக் ‘கல்வெட்டு ஏடு’ என்றும் வர்ணிப்பர்.
அந்த வகையில் கிடைத்த பலவற்றில் சில என் பொக்கிசங்கள். மிகச் சமீபத்தில் கிடைத்தது வித்தியாசமாக இருந்தது.
அனுப்பியப் பெருந்தகையோ பேராசிரியர் துரை மனோகரன். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகத் துலங்கி இன்று ஒரு நல்ல பத்தி எழுத்தாளராக ஞானம் பளிச்சிடுகிறார் என் பார்வையில். அதனால் பழக்கம் மிக நெருக்கம்.
யாழ் மாவட்ட உரும்பிராய் மண்ணில் பிறந்து உயர்ந்து இப்பொழுது தன்னந்தனியராய் கண்டி – பலகொல்லை குடிலொன்றில் என் பேனைப் பதிக்கிற இச்சமயத்தில்.
பேராசிரியரின் வாழ்க்கையில் கடந்த செப்டம்பர் – 2021மூன்றாம் நாள் பிற்பகலில் எதிர்பார்த்திராப் பெரிய பேரிடி!
கண்டி வட்டம் முழுக்கவும் ‘கனகா’ என்றும், ‘மிஸிஸ் மனோகரன்’ என்றும் அழைக்கப்பட்டு நேசிக்கப்பட்ட கண்டி, நல்லாயன் மகளிர் கல்லூரி முன்னாள் துணை அதிபர் அவர். கனகாம்பிகை என்கிற, ஊரெழு, சதானந்தன் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியின் இரண்டாவது புத்திரி, 69ஆம் அகவையில், அந்த செப். 03பிற்பகலில், கடுமையான இருதய செயற்பாட்டு நிறுத்தத்தில் பத்தோ பதினைந்தோ நிமிடத்தில் இறைவனடியில்!
கைப்பிடித்த காதல் கணவராகிய பேராசிரியர் துரைமனோகரன் மனநிலை எத்தகையதாக இருந்திருக்கும்?
வார்த்தைகளைத் தேடுகிறேன்.
தொடர்ந்தும் என் பதிவுகளை இடாமல், நான் விரும்பும் பத்தி எழுத்தாளர் அவரிடமே இந்த இடத்திலிருந்து தொடரக் கேட்டுக் கொள்கிறேன்.
பேராதனைப் பல்கலையில்
நான் பயின்ற நற்காலம்
காலை ஒருநாள்
பல்கலை நூலகத்தில்
நூல்களைப் புரட்டிப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
நான் புதியதோர் மாணவி
நீலச் சேலையில் வெள்ளை ‘போட’ரில்
என் முன்னால் தோன்றி நின்றாள்.
“பாரதியார் கவிதைகள் எங்கே இருக்குது?” விநயமுடன் அவள் கேட்டாள்
காதலினால் நாங்கள்
கட்டுண்ட போதிலுமே
கம்பஸ் பறவைகளாய்க்
கண்டபடி திரியவில்லை.
பல்கலை விடுதியிலே
பலபேரின் முன்னாலே
சந்திப்பை வைத்திருப்போம்.
காதலும் நிறைவேறிக்
கல்யாணம் நிகழ்ந்தது
அன்புடன் “மனோ!” என்றும்
ஆசையாய் “அப்பா!” என்றும்
பண்புடன் அழைக்கும் குரலை
என்றுதான் இனிமேல் கேட்பேன்?
எத்தனை வயதானாலும்
‘சாறி’க்கு ஊசி குத்தும்
பொறுப்பினை எனக்கே தருவாள்
இப்போ ‘சாறி’யும் உண்டு
இங்கு ஊசியும் உண்டு
ஆனால் ஆவலாய்ப் பேச மட்டும்
அவள் இங்கு இல்லை இல்லை
இவ்வாறு நம் பேராதனைப் பேராசிரியப் பெருந்தகை, தன் ‘துணை’யை நினைத்துருகி, “வாழிய அவள் தன் நினைவுகள் என்றும்” என எழுதி எழுதி மேற்செல்கிறார்.
என் போன்ற மூத்த அகவை கொண்டோர் பெரிதும் பாதிப்படைகிறோம். மனக்கவலை கொள்கிறோம்.
“கனக அமுதம்” என்ற அந்த நினைவு மலரில் அமரர் கனகாம்பிகை அம்மையார் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறிமுகைகளும் பக்கமொன்றில் பளிச்சிடுகிறது. அது அவரைத் தனித்துவப் பெண்மணியாகக் காட்டுகிறது.
கணவர் பேராசிரியர் துரை மனோகரனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் கனகாம்பிகை உற்ற துணையாக நின்று உதவினார். அவர் ஈடுபடும் எச்செயல்களிலும் பக்கத்தில் கனகாம்பிகையைப் பார்க்கலாம். ஒவ்வொரு முயற்சியிலும் கனகா அவரது வலது கரமாகவே விளங்கினார். அன்னாரது காரியம் யாவற்றுக்கும் கைகொடுத்து, அவரின் உயர்ச்சிக்குப் பின்னால் கனகா எப்போதும் இருந்து வந்தார். எந்த நிலையிலும் இருவரும் மனமொத்த தம்பதியினராகவே வாழ்ந்து வந்தனர். எந்த விடயமானாலும், இருவரும் கலந்துரையாடியே ஒரு முடிவுக்கு வருவர். இருவரில் எவரும் ஒருபோதும் தன்னிச்சையான முடிவுகள் எடுத்ததில்லை. பேராசிரியருக்கு ஒரு சிறந்த ஆலோசகராகவும், உற்ற தோழியாகவும் கனகா விளங்கினார்.
அத்தகைய யாழ் நங்கை, கண்டிப்பிரதேச மாதரசியின் ஆத்மா சாந்தி பெறப்பிரார்த்திக்கும் அதேவேளை, ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பரிணமித்தும், பேராசிரியர் - விரிவுரையாளர் -கலாநிதி அல்லாத என் போன்ற வெகுவெகு சாமான்யர்களிடமும் ஒட்டி உறவாடி, தமிழ் நேசராகத்துலங்கும் துரையாரின் தனிமை வாழ்க்கைக்குத் தமிழன்னையே உறுதுணையாக விளங்க படைப்பாளன் கிருபை செய்வானாக.
கசப்பு-2
‘சாதியம்’ ஒரு சா-தீ!
இலங்கையின் வடக்குக்கும் கிழக்குக்கும் சாபக்கேடு. ஒரு சமூகப் புற்று நோய்,
எங்கள் ‘தினகரன்’ வாரமஞ்சரி, தன் மூத்த வயதில் ஒரு ‘நக்கீரப்பார்வை’ பார்த்துள்ளது கடந்தவார 31ஆம் பக்கத்தில். வேறெந்த இதழ்களும் இந்தளவுக்கு கண்டு கொண்டதாக நான் அறிந்தேனில்லை.
வட்டுக்கோட்டை அரசடியில் 2021செப்டம்பர் 19ஆம் நாள் நடந்தேறிய சாதிய ரீதியிலான கொலைவெறித் தாக்குதலும், பாதிப்புக்குள்ளான பாவப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்களும் வரலாற்றின் களங்கப்பட்ட கரைபடிந்த பக்கங்களை அதிகரிக்கவே போகின்றன.
இந்த நிலையில், தமிழை உயிர்மூச்சாகக் கொண்டதன் காரணமாக தமிழ்மணியாக இந்து சமயக் கலாசார திணைக்களத்தினால், மேனாள் அமைச்சர் திருமிகு பி.பீ. தேவராஜ் அய்யா கரங்களினால் கௌரவமடைந்த இஸ்லாமிய மார்க்கத்தவனாகிய நான், ஒரு ‘முண்டாசுக்கவிஞ’னையே முன்னிருத்தப்போகிறேன்.
வருடம் தப்பினாலும் ஒவ்வொரு செப்டம்பரிலும், டிசம்பரிலும் இறந்ததினம் பிறந்த தினம் என்று “எங்கள் பாரதி எங்கள் பாரதி” என்று வடக்கிலும் – கிழக்கிலும் மூச்சிறைக்க முழக்கம் செய்கிறீர்களே, அதெல்லாம் என்ன ‘பம்மாத்தா’? அதாவது, வெற்று நடிப்பா? பொய்க் கூத்தா?
அந்தப் பிராமணன் சுப்ரமணியன் ‘முண்டாசுக்கவிஞன்’ முழங்கிய “உயிர் பெற்ற தமிழர் பாட்டு பாடிப்பார்த்திருக்கிறீர்களா? கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
முழுபாட்டையும் வழங்க என்பக்கம் அனுமதிக்காது. நாளே நாலு பந்தி நான்கு வரிக்கவிதைகளை மட்டும் வழங்கிவிட்டு என் பேனையை மூடி கிளம்பிப் போய் விடுகிறேன்.
“பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற் கினியதைத் தின்பார் – அதில்
நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்
ஒன்றுண்டு மானிட சாதி – பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்:
இன்று படுத்தது. நாளை – உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்
நந்தனைப் போல்ஒரு பார்ப்பான் –இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்
சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”
இனிப்பு
சிறுவர் பாலியல் கொடுமைகள் மிகவும் மலிந்து போன ஒரு கால கட்டமிது!
கிருமி ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் இந்த மிருகக் குணத்தை மனிதனாகப்பிறந்தவன் விட்டொழித்ததாகத் தெரியவில்லை.
அவனைத் திருத்துவதைவிட சின்னஞ்சிறு பாலியருக்குப் பாதுகாப்பு வழிகளைச் சொல்லிக் கொடுக்கலாமே என்ற மன நிலையை சில பண்பாளர்கள் கொண்டுள்ளார்கள்.
இவ்விடயத்தில், என்பேனையும் 2002ல் 19ஆண்டுகளுக்கு முன் கலம் உழுது ஒரு நூலை வெளியிட்டது.
“சிறுவர் பாலியல் கொடுமைகள்” என்ற ஆதங்க நூலை பங்களாதேசில் மருத்துவப் பட்டப்படிப்பில் முனைந்திருந்த மகளாரும், ரோயல் கல்லூரித் தமிழ்ப்பிரிவு உயர் வகுப்பில் கற்ற மகனாரும் விழாவைத்து வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து பிற பேனாக்காரர்களும் ஏதாவது செய்தார்களோ என்றால் மொடாத் தூக்கம்.
தமிழ் நாட்டைப் பொறுத்தளவிலும் இப்படியே! அபூர்வமாக எழுத்தாளர் இதழாளர் பாலபாரதி ஒரு பணியைப் புரிந்திருக்கிறார்.
‘தினமலர்’ என்ற பிரபல நாளேட்டின் இணைப்பு இதழான ‘பட்டம்’ மாணவர் ஏட்டின் ஆசிரியர் குழுவில் கடமையாற்றும் அவர், 2013லிருந்து இளையோர் நூல்களை எழுதிவருகிறார். பல கதை நூல்களுடன், ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ ‘சந்துருவுக்கு என்னாச்சு’ ‘துலக்கம்’, ‘அன்பான பெற்றோரே’ போன்ற சிறப்பான சிறுவர் வளர்ப்பு நூல்களையும் எழுதியவர்.
தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல் சம்பவங்களை அறிந்து நொந்து, அவர்களுக்கு, அவர்கள் உடல் சார்ந்த உண்மைகளைச் சொல்லி, விழிப்புணர்வையும், பாதுகாப்பையும் உணர்த்த நூலொன்று வெளியிடுவதை லட்சியமாகக் கொள்ள-
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓர் இளையோர் நாவல்! “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” உருவானது.
இதில் பிரதானமாகச் சுட்டிக் காட்டியிருப்பது “பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல்” எவையெவை என்பதை!
2018ல் ‘ஆனந்த விகடன்’ நம்பிக்கை விருது கிடைத்தது நாவலுக்கு! “வாசக சாலையினர்” அமைப்பின் சார்பிலும் ஒரு விருது பெற்றார்.
இப்போது, இந்திய அரசின் அதி உட், ‘பால சாகித்திய அகடமி’ விருதாளர்.
2014 – 2018வரையிலான 05ஆண்டுகாலத்தில் வெளியான தமி்ழ் சிறுவர் நூல்களிலிருந்து இந்த நூல் தேர்வு!
சாகித்தய விருந்தாளர் பாலபாரதியின் பெரிய வேண்டுகோள் ஒன்று. “நமது தமிழ் பேசும் சமூகம் “பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் என்பதை நம் இளசுகளுக்குச் சொல்லிக் கொடுப்பதோடு, அவர்களுக்கு நல்ல வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதில் பெற்றோர் ஆசிரியர் பங்கு மிகவும் முக்கியம் தயவு செய்து செய்யுங்கள்.
உண்மையிலும் உண்மை! ஆனாலும் எம் இலங்கைப் பிள்ளைகளுக்கு இந்த விருது நூல் கிடைக்க என்ன வழி?
அப்புறமாக வாசிப்பைப் பற்றி யோசிக்கலாம்.
(எனது பேனைக்கு தகவல் சேகரித்து உதவிய அன்புக்குரிய அபிமானி, தமி்ழ்நாடு, ராமநாதபுரம் “அன்புடன் அப்துல்லா”வுக்கு நன்றி).