கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

 “ரஜீவன் ராமலிங்கம்” என்றொரு வவுனியா மைந்தர். ஓர் ஆசிரியராக சேவை செய்திருக்கிறார். இலக்கியத் துறையில், ஈடுபாடுள்ளவரா, ஊடகக்காரரா என்று சரியாகக் கணிக்க இயலாது தவிக்கிறேன். 

புலம்பெயர்ந்து ஃபிரான்ஸ் சென்றவர், இப்பொழுது இலண்டனில் என் முகநூலில் அவ்வப்பொழுது பளிச்சிடுவார்.

“உங்கள் எழுத்துக்களின் அபிமானி” என ஒரு சமயம் பதித்து சிலிர்ப்பை ஏற்படுத்தினார். 

இவர் முகநூலின் பக்கங்களைப் பார்த்த ஒரு சமயம் இப்படியொரு தலைப்பு: 

பேஸ் புக் வாழ்த்துக்கள்!

அதென்ன சமாசாரம்?

பொறுமையாக முழுதையும் வாசித்து சிரி என்று சிரித்தேன். அபிமானிகளும் சிரிக்கட்டுமே என்று இங்கே மறுபதிப்புச் செய்கிறேன். 

இன்று வாழ்த்துகள் அதிகம் குவிந்துள்ள இடம் நம்ம பேஸ்புக் தான்! இங்கே எல்லாத்துக்குமே வாழ்த்துத்தான்! 

* “ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று மாமி வீட்டுக்குப் போயிருந்தேன். மாமி பனங்காய் பணியாரம் சுட்டு தந்தா" என்றொரு பதிவின் கீழே, “வாழ்த்துகள் சகோ. இனிய வாழ்த்துகள் சகோ. மகிழ்ச்சியான வாழ்த்துகள் சகோ!”  -இப்படி ஏகப்பட்ட வாழ்த்துகள் பனங்காய் பணியாரம் உண்டதற்கு! 

“அந்த ரூபாய் நோட்டு தொலைந்து விட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் வொஷிங் மெசினில் இருந்து உடுப்பை எடுத்துக்காயப்போட்ட சமயத்தில் தான் கவனித்தேன். அது ஜீன்ஸ் பக்கெட்டுக்குள் இருந்ததை...!” எனப் பதிவிட்டதற்கு, “வாழ்த்துகள் அண்ணா, வாழ்த்துகள் சகோதரம்” எனப் பல பல பதிவுகள்.  

“ஒரு வழியாக பல் மருத்துவரிடம் அப்பொயிண்ட்மெண்ட் வாங்கி, இன்று மூன்று பற்களையும் கட்டி விட்டேன். இனி யாரும் ‘ஓட்டை வாயன்’ என்று என்னைக் கூப்பிட முடியாது” எனப் பதிவிட்டதற்கு - 

“வாழ்த்துகள் சகோ.... வாழ்த்துகள் நண்பா, வாழ்த்துகள் அவனே, இவனே...!”  

“எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் காய்த்துள்ளது!” 

“வாழ்த்துகள், வாழ்த்துகள் சகோதரா...!” 

“என் செல்ல நாயான டைகர் இன்று நாலு குட்டி போட்டுள்ளது!” “வாழ்த்துகள் சகோதரா...!’ 

“வேலை முடிந்து வீடு வந்து பார்த்தால் மனைவி மாற்றாள். ஒருவனுடன் ...!” 

“ இனிய வாழ்த்துகள் சகோ...!” பார்த்திபனின் ‘பழைய செருப்பு’ படம் பார்த்தேன்... பிரமாதம்!”  

“உங்களுக்கும் செருப்புக்கும் வாழ்த்துகள்” 

“பிச்சை எடுத்தாக வேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்...!” 

“சிறப்பான வாழ்த்துகள் நண்பரே...!” 

இவ்வாறே ஒரு பெரிய பட்டியல் இட்டுள்ளார் இலண்டன் ரஜீவன் ராமலிங்கம்.

“அவசியமான விடயங்களுக்கு வாழ்த்துவதில் தவறில்லை. ஆனால் தொட்டதற்கெல்லாம் வாழ்த்தினால், அந்த வாழ்த்துக்கே அர்த்தமும் மரியாதையும் இல்லாமல் போய் விடுகிறது” எனப் பதிவுக்கு முத்தாய்ப்பும் இட்டுள்ளார். 

என்ன சொல்கிறீர்கள் அபிமானிகளே?

 “வாழ்த்துகள்” என்று தப்பித்தவறியும் சொல்லி விடாதீர்கள்! 

இனிப்பு-1

வருகிற டிச. 04ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு வாழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வரலாற்று நிகழ்வு காத்திருக்கிறது. அதனை நேரில் பார்த்துப் பரவசப்படக்கூடிய பாக்கியம் குறைந்தளவு தொகையினருக்கே. 

இந்தச் சாமான்யனின் இளமைக்கால இருப்பிடமான கொழும்பு -10, மொஹிதின் மஸ்ஜித் வீதி, (பழைய பிச்சர்ஸ் லேன்)க்கு நேர் எதிர்ப்புறம் பஞ்சிகாவத்தைப் பாதையில் அல்- ஹிதாயாதேசியக் கல்லூரி பஹார்தீன் நினைவரங்கத்தில் அது நடக்க உள்ளது. 

ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்கு முன் (11.11.2018) இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் 140பேரை, 460பக்கங்களில் ‘மின்னும் தாரகை’ களாகப் பளிச்சிடச் செய்து அதி முக்கிய வரலாற்று ஏடொன்றைப் பதித்து வழங்கிய சகோதரி நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் மீண்டும் அதே நிகழ்விடத்தில் மற்றுமொரு வரலாற்று ஏட்டைத் திறந்து வைக்கிறார். 

இப்பொழுதும் அதே “மின்னும் தாரகைகள்” தான்! ஆனால் அப்படியே பெரும்பான்மையினர் மொழியில் மாற்றம்! பெயரிலும் வித்தியாசம் இல்லை. 

“திதுலன தாரகா”

உச்சரிக்கும் பொழுதே ஒரு ‘தில்’!  

அந்த டிச. 04ஆம் திகதிக்குப் பிறகு, ஆளுமை மிகு தமிழ் மொழி பெண் முஸ்லிம் எழுத்தாளர்களைப் பெரும்பான்மைச் சமூக இலக்கிய வட்டத்தினர் நன்றாக அடையாளங்கண்டு கொள்வார்கள். ஒரு நல்லுறவுப் பாலம் உருவாகிவிடும். 

இந்த வெளியீட்டு வைபவத்தில் மற்றுமொரு புதுமைப் புரட்சி நிகழவும் போகிறது. 

இன்றையத் திகதி வரையில் ஒரு நூலின் முதல் பிரதியைப் ‘பொற்கிழி’ வழங்கிப் பெற்றுக் கொள்வதை ஆடவர்களே நிறைவேற்றி புரவலர்கள் பட்டத்தைத் தாங்களே சூட்டிக் கொண்டு வந்த நிலைக்கு ஓர் ஆப்பு! 

தேனகமாம் கிழக்கின் அக்கரைப்பற்று, இயற்கையின் வெள்ள ஓட்டத்துடன், இலக்கிய வெள்ளோட்டமும் மிகுந்திருப்பது. அங்கிருந்து ஒரு ‘மதீனா உம்மா’ மிகவும் பாதுகாப்பாக கொழும்பு 10க்கு வந்து சேரப் போகிறார் சனிக்கிழமை காலை 10மணிக்கு! சம்பிரதாய நிகழ்வுகளின் பின் “திதுலன தாரகா”வின் முதல் (நட்சத்திர) பிரதியை அன்னவர் கரங்களில் ஏந்துகிறார். 

இந்த வகையில் வரலாற்றில் முதல் தடவையாக ‘ஒரு பெண் புரவலர்’ அறிமுகம்! அது அவன் ஒருவன் எண்ணப்படியும் திட்டப்படியும்.

மதினா உம்மா மேலும் பலரது நுால்களுக்கு புரவலராகத் திகழ வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

அதே நேரம், தமிழில் தான் எழுதிய நூலைத் தானே சிங்களத்தில் மொழியாக்கம் செய்து அதை ஒரு தமிழ்ப்பிரதேசப் பெண்மணியைக் கொண்டு முதல் பிரதி பெற வைக்கும் கண்டி உடுதெனியக் கிராமத்துப் பெண்ணரசி நூறுல் அய்ன் காலமெல்லாம் இலக்கிய வட்டத்தில் பேசப்படுகிறவராக ஆகிவிட்டார்.புகழ் இறைவனுக்கே!

அவரையும் பாராட்டி, வாழ்த்தி மகிழும் இந்த ‘மூத்த பேனை, அவரே தமிழ்ப் பெண் எழுத்தாளர்களையும் சிங்கள இலக்கிய நெஞ்சங்கள் மத்தியில் தாரகைகளாக ஜொலிக்கச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை மனு சமர்ப்பிக்கிறது.  

இனிப்பு-2

இந்த இனிப்பும் நூல் தேட்டம் ஒன்றைப் பற்றியது தான். 

விவரம் தெரிவிக்க முன், கிழக்குத் தேனகத்தில் தேனாக இனிக்கும் மனிதர் ‘செங்கதிர்’ ஆசிரியர்செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனின் கருத்தொன்றை வழங்கி விடுகிறேன்! 

“புதுக்கவிதை” எனும் போக்கு வந்தபின் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று பெருகிய 'புதுக்கவிதைப் புலவர்'களினால் புற்றீசல்கள் போல நாளொன்றும் பொழுதொன்றுமாய் புறப்படும் புதுக்கவிதைத் தொகுதிகளின் குப்பை மேட்டிலே “மறக்க மறந்த மனிதம்” எனும் கவிதை நூல் குண்டுமணியாகும்!” 

இப்படி அவர் குறிப்பிடுகிற ஏறாவூர் தாஹிர் என்பாரின் ‘மறக்க மறந்த மனிதம்’ என் கையிலும் உள்ளது. என்றாலும் அதில் உள்ள அற்புதமான இனிப்பை அடுத்த கிழமை அளிப்பதாக இருக்கிறேன். 

இங்கே வேறொன்று, சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் சலம்பல். 

800பக்கங்களைக் கொண்ட ‘பென்னாம் பெரிய’ சிறுகதைத் தொகுப்பு நுால் அதே தேனகத்திலிருந்து மிகமிகச் சமீபத்தில்!  

“கிழக்கின் 100சிறுகதைகள்” எனச் சிங்காரமான தலைப்பில் கிழக்கு மாகாணப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கல்முனை மூத்த எழுத்தாளர் உமாவரதராஜன் உறுதுணையுடன் திணைக்களப் பணிப்பாளர் ச. நவநீதன் இலக்கிய சஞ்சாரிகளுக்குச் சமர்ப்பித்துள்ளார். 

விழாவொன்றும், கடந்த வாரத்தில் திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது ஓசையின்றி! 

ஏன் இப்படிப்பதிகிறேன் என்றால்திணைக்களம் அலட்டிக் கொள்ளாமல் ஆரவாரமில்லாமல் ஊடகச் செய்திகளும் அவ்வளவாக இல்லாமல், எழுத்தாளர்கள், அவர்களது குடும்பத்தார், குறிப்பிட்ட சில இலக்கிய ஆர்வலர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒன்றை அற்புதமாக நடத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு மதிப்பளித்து. 

எனக்கு அளவிடமுடியாத ஆனந்தம் ஏற்பட்டது - ஒன்றில்! 

அந்த நிகழ்வில் கவிதைத் தொகுப்பு எதனையும் திணைக்களம் வெளியிட்டு வைக்காதது. 

இனியவர் ‘செங்கதிரோன்’,  தினைக்களத்திலும் தன் கருத்தைத் தெளித்திருப்பாரோ என்னவோ, ‘மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று பெருகியுள்ள புதுக்கவிதைப் புலவர்களின்’ நூல் எதனையும் ஏறெடுத்துப் பார்க்காமல் போனது! 

நமது சிறுகதைகள் இனி துளிர்த்தெழும்.

எதிர்காலத்தில் படைப்பாளிகள் பெருகுவர்  விசேடமாக கிழக்கில்! 

Comments