![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/12/19/a26.jpg?itok=klAvLL_r)
கசப்பு-1
கடந்த 11, 12திகதிகளில் மாலையில் கொழும்பு 10, மருதானைப் பகுதியில் சென்றிருந்தவர்களுக்கு ஒரு காட்சி தென்பட்டிருக்கும்.
அங்கே 110 (1911) ஆண்டுகளுக்கு முன்பு நாடக – திரைப்பட அரங்கமாக கலாபிமானிகளைக் கவர்ந்த “டவர் மண்டப”மும், 96 (1925) ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இன்று நவீனக் கோலம் கொண்டு, வெள்ளை வெளேர் எனப் பளிச்சிடும் எல்பின்ஸ்டன் அரங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெக ஜோதியாக ஜொலிப்பதையும் கண்டு ரசித்திருப்பர்....
இரண்டு மண்டபங்களும் நான் ‘குப்பை கொட்டும்’ வதிவிடத்திலிருந்து ஏழெட்டு நிமிட தூரத்திலிருப்பதால் நுழைந்து பார்ப்பதில் சிரமம் இருக்கவில்லை.
அதுவும் ஒரு சிறந்த வானொலிக் கலைஞர், கவிஞர் எம்.எஸ். அப்துல் லதீஃப் தோன்றாத் துணை!
நுழைவாயிலில் 11லிருந்து 21வரையில் 20நாடகங்கள் அரங்கேறும் ஒரு விவரப்பட்டியலைப் பெற்ற பொழுது பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியவை. ரசித்தவை.
நாங்கள் சென்றிருந்த நாளிலும் முன்பு பார்த்த ‘மனமே’யும், ‘திக்கலகால கோல’யுமே!
கலைஞர் அப்துல் லத்தீஃப் ஒரு யோசனை சொன்னார்.
“நாம் இதை விட்டுவிட்டு லயனல் வெண்ட் தியேட்டருக்குப் போய், “மெய் துவக்குவக் நொவே’ (இது துப்பாக்கி அல்ல) பார்ப்போம். தலைப்புப் புதுமை” என்றார்.
ஆம். முக்காலும் உண்மை. ஒரு சனிக்கிழமைப் பொழுதில் மூன்று அரங்குகளில் சிங்கள நாடகங்கள்!
அதே சமயம் தமிழ் நாடகம்...?
விசனம்! விசனம்!
சிங்களக் கலாபிமானிகள் கொடுத்து வைத்தவர்கள்.
இந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலக் கலைஞர் என்பதால் அவர்தம் எண்ணக் கருவில் உருவானதே “ப்ரேக் ஷா” நாடக மேம்பாட்டுத் திட்டமும் நாடக விழாக்களும். அவரே “டவர் நாடக அரங்கு நிதியத் தலைவராகவும் உள்ளார். கலைஞர்களுக்கு லட்சக்கணக்கில் காப்புறுதிகளும் வழங்கி வருகிறார். தமிழ்க் கலைஞர்களும் பெற்றுள்ளனர்.
அவரது ‘கலைக் கனவுகளுக்கு’ உறுதுணையாக தேசிய மரபுரிமைகள் அரங்கக் கலைகள் மற்றும் கிராமியக் கலை மேம்பாடுகள் இராஜாங்க அமைச்சரான விதுர விக்கிரமநாயக்க செயல்படுகிறார்.
மற்றும், கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக்கழகம், தேசிய நாடக ஆலோசனைச் சபை முதலியன அனுசரணைகள் வழங்குகின்றன.
இவர்கள் அத்தனை பேரினதும் அயராத பணிகளாலேயே கடந்த 11ல் ஆரம்பித்து வருகிற 21வரை எல்பின்ஸ்டனிலும் டவர் அரங்கிலும் மொத்தமாக (30) நாடகங்கள். இவற்றிலே பழசும் புதுசும் கலந்துள்ளன.
அதேவேளை, “தமிழ் நாடக விழா ஒன்று நடக்குமா?” என்று ஏங்கித் தவிக்கிறது தமிழ்க்கலை உள்ளம்.
டவர் அரங்கு நிதியத்தில், தமிழ்க் கலைஞர் மேம்பாட்டுக்கென தமிழ்க் கலை – இலக்கிய ஆர்வலர் ஒருவர் சபை அங்கத்தவராகவும் தமிழ்ப் பிரிவுகளுக்குப் பணிப்பாளர் ஒருவரும் அங்கம் வகிக்கும் நிலையில் அவர்களிருவரும் ஒரு தமிழ் நாடக விழாவுக்கு ஏற்பாடு செய்ய என்ன தடைக்கல் இருக்கும்?
புதியதாக ஒன்றும் செய்ய வேண்டாம். கடந்த அக்டோபர் 2020ல் கொரோனா ஆரம்பித்ததால் பாதியோடு பாதியாக நிறுத்தப்பட்ட தமிழ் நாடகங்களை மீண்டும் இதே எல்பின்ஸ்டனில் அரங்கேற்றலாமே?
அந்த நந்நாளை அல்லது நாட்களை ஆவலோடு ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் நாடக ஆர்வலர்களுடன் இப்பேனையும் இணைந்து ஒரு மூலையில் நிற்கிறது.
அடிக்குறிப்பு: இன்று ஞாயிறு கொழும்பில் மூன்று அரங்குகளில் சிங்கள நாடகங்கள் மேடையேற்றம் காண்கிறது.
கசப்பு-2
உலகளாவிய தொலைக்காட்சிச் செய்திகளிலும், அச்சு ஊடகப் பதிவுகளிலும் நாளும் பொழுதும் ‘கழுகுப் பார்வை’ பார்த்துக் கொண்டிருக்கும் என் போன்றோருக்கு தினமும் தவறாமல் வந்து மோதும் பெயர்கள் சீனா – ஆப்கானிஸ்தான்!
அபிமானிகளுக்குக் கூட ஆப்கானை விட சீனம் அத்துப்படியே! என்னைப் பொறுத்தவரையில் சீனாவில் பெண்கள் பதாகைகள் பிடித்துப் போராடும் படத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரிவின் கண்டன அறிக்கையையும் கண்டேன்.
விவரங்களை வெளிச்சமிடமுன், தகவலொன்றைத் தருகிறேன்.
அனைவரினதும் பேசுபொருளாகிப் போன சீன தேசத்தில், சிறுபான்மையினராக முஸ்லிம்களும் இருக்கிறார்கள். பள்ளிவாசல்களும் உள்ளன.
அங்கே ஜின்ஜியாங் மாகாணத்தில் “உய்குர்” என்கிற பகுதியில் பல்லாண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் குடியேற்றம் ஏற்பட்டுப் போயிற்று. ‘பழங்குடியினர்’ என்ற பெயருடன் அவர்கள் வாழ்கிறார்கள்.
இப்பொழுது வந்திருக்கிறது பெருவினை அந்தப் பழங்குடி முஸ்லிம் பெண்களுக்கு!
அவர்கள் கட்டாய கருத்தடை செய்யப்படுகிறார்களாம்.
இதை ஏன் சீனம் செய்ய முயல்கிறது? மக்கள் தொகையைக் குறைக்கவாம்! இன்னொரு விதத்தில் பதிவதாக இருந்தால் முஸ்லிம், சமூக எண்ணிக்கையைக் குறைக்க!
என் பேனை ஒன்றும் இட்டுக்கட்டிப் பதியவில்லை. “ஐ.நா” என்கிற உலகளாவிய பென்னம் பெரிய சபையின் மனித உரிமைப்பிரிவு கண்டன அறிக்கையில் காணப்படுகிற கசப்பு!
இலண்டன் நீதிமன்றத்து சட்டத்தரணிகள் ஒன்பது பேர் ஓர் ஆய்வு மேற்கொண்டு இன்னுமொரு கசப்பையும் விழுங்க வைத்துள்ளனர்.
அது, உய்குர் முஸ்லிம் பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்கும் எருமை மாட்டு வேலை!
இதைச் செய்து விட்டு கட்டாயக் கருக்கலைப்பு!
என்ன உலகமடா இது!
மேலும், தொழிலாளர் சட்டத்தை மீறி இந்தப் பழங்குடி இன மக்கள் நாளொன்றில் பலமணி நேரம் வேலை வாங்கப்படுவதாகவும் குற்றச் சாட்டு.
இப்பொழுது இந்தப் பாவப்பட்ட மக்கள் உலக அரங்கில் அவலக்குரல் எழுப்புவதை வரவேற்றுள்ளது ஐ.நா மனித உரிமைப் பிரிவு.
சீன அரசும் கள்ள மௌனம் சாதிக்கவில்லை. சீனாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க உய்குர் பிரதேச காங்கிரஸ் அமைப்பு உலக அரங்கில் முயன்று வருவதாக ஒரு போடு போட்டிருக்கிறது.
எப்படியோ, சீனத்துப் பழங்குடி முஸ்லிம்கள் வெளிச்சத்துக்கு வந்து பரிதாபக் கோலமாகத் தென்படுகிறார்கள்.கால மகள் கட்டாயமாகப் பதில் சொல்வாள்.
இனிப்பு
நம்மில் பலரும், தமிழர் - முஸ்லிம் வேறு பாடின்றி வாசிப்பில் நேசங்கொண்டவர்கள் அவரை நன்கறிவார்கள்.
அவரின் எழுத்துக்களுக்கு தமிழகத்தினரை விட வடக்கில் யாழ். வாசகர்கள் அபிமானம் மிக்கவர்களாக இருந்தார்கள்.
அந்தளவுக்கு ஒரு வாழ்க்கையில் வெற்றி சுயமுன்னேற்ற நூல் அவர்களை ஆக்சிரசிட்டிருக்கிறது.
அந்த மாண்புறு எழுத்தாளர் எம்.ஆர். எம் அப்துர் ரஹீம்!
அவரது கோலாகல நூற்றாண்டு விழா அடுத்தாண்டு மூன்று கட்டங்களில் மூன்று முக்கிய இடங்களில் தமிழகத் தரணியில்!இலக்கியமே, உயிர் மூச்சாகக் கொண்டுள்ள ‘இனிய திசைகள்’ சே.மு.முகம்மது அலி, பேராசிரியர் தலைமையில் துடிதுடிப்பாக இயங்கும் “இஸ்லாமிய இலக்கியக் கழகம்” இப்பொழுதே செயலாற்றத் தொடங்கி விட்டது.
பன்னூல் அறிஞர் பெருமகனார் எம்.ஆர்.எம். அப்துல் றஹீம் பிறந்த மண் தொண்டித் திருநகரில் தொடக்க விழா 2022பெப்ரவரியில்!
பின்பு, 2022மார்ச்சில் திருச்சி மாநகரில் கோலாகல விழா! நிறைவாக 2022, மே மாதத்தில் சென்னையில் நிறைவு விழா! நிச்சயமாக தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் நிறைய நிறைய.
எம்மவர் ஒன்றிலோ, இரண்டிலோ அல்லது மூன்றிலோ கலந்தே தீரவேண்டும்.
என் பேனை என்ன செய்யும் என்றறிய அபிமானிகள் ஆவல் பட்டால், ஒன்று பதிவேன். அவன் எண்ணப்படியும் திட்டப்படியும் நிகழ்வுகள் நடக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதால் ‘நிழல்’ என்னைத் தொடர என் மூதாதையரின் செட்டிநாட்டுத் தேவகோட்டை – தொண்டியில் பிறந்து அனைத்துத் தமிழ் பேசும் வாசகர்களுக்கும் ‘வாழ்க்கையில் வெற்றி’ நூல் வழங்கியவரின் மூன்று விழாக்களிலுமே கலந்து தீருவேன்.
அனுமதித்தால் ஆய்வுக் கருத்துரையும் வழங்குவேன்.