லஹிரு அமரசேகரவின் அபார பந்துவீச்சு மற்றும் நிரான் ஜயசுந்தர, மிதிர தேனுர ஆகியோரது அரைச்சதங்களின் உதவியால் அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 85ஓட்டங்களால் மருதானை புனித ஜோசப் கல்லூரி அணி வெற்றியீட்டியது.
மருதானை புனித ஜோசப் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரிக்கும் இடையிலான 47ஆவது அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த கிண்ண ஒருநாள் போட்டி கடந்த (16) கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மருதானை புனித ஜோசப் கல்லூரி அணித் தலைவர் ஷெரான் பொன்சேகா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜோசப் கல்லூரியின் முன்வரிசை வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறியிருந்தாலும், நிரான் ஜயசுந்தர மற்றும் மிதிர தேனுரவின் அரைச்சதங்களின் உதவியுடன் 49.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்து 200ஓட்டங்களைப் பெற்றது.
ஜோசப் கல்லூரிக்காக மத்திய வரிசையில் வந்த நிரான் ஜயசுந்தர 58ஓட்டங்களையும், மிதிர தேனுர 52ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
புனித பேதுரு கல்லூரியின் பந்துவீச்சில் தனால் சமெல்க டி சில்வா மற்றும் தனால் ஹேமானந்த ஆகிய இருவரும் தலா 2விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
200ஓட்டங்கள் என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி வீரர்கள் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணி சார்பாக ஆரம்ப வீரர் ஷெனால் பொதேஜு 48ஓட்டங்களையும், நிபுன பொன்சேகா 31ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று நம்பிக்கையளித்த போதிலும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, புனித பேதுரு கல்லூரி 115ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட புனித ஜோசப் கல்லூரியின் லஹிரு அமரசேகர 36ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுகளைக் கைப்பற்ற, தேஷான் செனவிரட்ன மற்றும் யெசித் ரூபசிங்க ஆகிய இருவரும் தலா 2விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
இதன்படி மருதானை புனித ஜோசப் கல்லூரி 85ஓட்டங்களினால் வெற்றியீட்டி இந்த ஆண்டு புனிதர்களின் ஒருநாள் சமரில் அருட்தந்தை பீட்டர் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் புனிதர்களின் ஒருநாள் கிண்ணத்தை புனித ஜோசப் கல்லூரி அணி தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகக் கைப்பற்றி அசத்தியது. அந்த அணி இறுதியாக 2018, 2019ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை ஜோசப் கல்லூரியின் ஹிரான் ஜயசுந்தர பெற்றுக்கொள்ள, சிறந்த களத்தடுப்பாளராக ஷெரான் பொன்சேகாவும், போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை அதே கல்லூரியின் லஹிரு அமரசேகர பெற்றுக்கொண்டார்.
சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது புனித பேதுரு கல்லூரியின் தனால் ஹேமானந்தவுக்கு வழங்கப்பட்டது. இவ்விரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் 87ஆவது தடவையாக நடைபெற்ற புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.