பதினேழு வருடங்கள் கடந்த போதிலும் உள்ளத்தை விட்டு இன்னுமே நீங்காத வலி! | தினகரன் வாரமஞ்சரி

பதினேழு வருடங்கள் கடந்த போதிலும் உள்ளத்தை விட்டு இன்னுமே நீங்காத வலி!

ஆழிப்பேரலை ஏற்படுத்திய ஆறாத் துயரம்!

கடலோர  மக்களுக்கு அலைகள் புதிதல்ல. 17வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் வந்த  அலையையும் அவர்கள் முதலில் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால்,  பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும்  எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்

 2004ஆம் ஆண்டு நத்தார் நாளின்  மறுதினத்தை அவ்வளவு எளிதில் எமது மக்களால் மறக்க இயலாது. அந்த  ஞாயிற்றுக்கிழமை எழுந்த ஆழிப்பேரலை கரையோரங்களில் துயரங்களைப் படர விட்டது.  இப்போதுவரை அந்தப் பாதிப்பில் மக்கள் உழன்று கொண்டிருக்கின்றனர்.

 2004  ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை  வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1முதல் 9.3  ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14  நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அன்று  ஒரு ஞாயிற்றுக்கிழமை. "கடல்வருகிறது" என்று அலறியடித்துக் கொண்டு பலர்  ஓடினார்கள். எங்கும் மரண ஓலங்கள். பொங்கி வந்த பேரலையினால் ஒரு சில  நிமிடங்களில் எல்லாமே முடிந்து போயின. உலகின் பல நாடுகளில் இலட்சக்கணக்கான  உயிர்களையும், பெறுமதியான உடைமைகளையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய்  விட்டது கடல்.

ஆழிப்பேரலையானது இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக்  குறிப்பாக வடக்கு, கிழக்கை அதிகம் பாதித்தது. அதில் பெருமளவில் உயிர்களைக்  காவு கொண்ட மாவட்டம் அம்பாறை. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும்  கோடிக்கணக்கான உடைமைகளையும் காவு கொண்ட கிராமம் மருதமுனை.

இலங்கையில்  சுனாமியின் தாக்கமானது வடபகுதி தொடக்கம் நாட்டின் மேல்மாகாணமான களுத்துறை  வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. கரையோர ரயில் பாதையில் பயணித்த  புகையிரதமொன்று சுனாமியினால் அடித்துச் செல்லப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர்  உயிரிழந்தமை நினைவிருக்கலாம்.

சுனாமிப் பேரலையானது எல்லா இடங்களிலும்  ஒரே அளவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நில அதிர்வுக்குள்ளான சுமாத்திரா  உள்ளிட்ட தீவுகளின் நேர் எல்லையாகவுள்ள கடற்பிரதேசங்களே அதிகம்  பாதிப்புக்குள்ளாகின. 

சுனாமி அலைகள் சுமார் 30மீற்றர் (100அடி)  உயரத்துக்கு எழுந்தன. சுனாமியினால்   14நாடுகளில் ஒட்டுமொத்தமாக 2,29,866  பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786  காணாமல் போனார்கள். மேலும் 17இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள்  வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்தனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடான  இந்தோனேசியாவில் மட்டும் 1,67,736உயிரிழந்துள்ளனர். 37,063பேர் காணாமல்  போயினர். மேலும் இலங்கை, தாய்லாந்து, சோமாலியா, மியன்மார் போன்ற நாடுகளில்  பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். இலங்கையில் 35,322பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலுக்கு  அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப் பெரிய அலைகள்  ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம்.  கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால்  ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர்  தரைப்பகுதிக்கு வந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது. சுனாமியின்  வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன்  வேகம் பல மடங்கு அதிகரிக்கும்.     சுனாமி என்ற வார்த்தை ஜப்பான்  மொழியில் இருந்துதான் வந்தது.

இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று  பொருள். சிறிய உயரமுடைய அலைகள்,  பெரிய அலைகளாக மாறுகின்றன.  கரையில்  இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். நீர்  அலை வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். அலை திரும்பி வருகையில்  அனைத்தையும் சுருட்டிக் கொண்டு வந்து விடும்.கடலின் மேல் பகுதியில்  இருக்கும் கப்பலில் கூட சுனாமி உருவாவதை உணர முடியாது. சுனாமி என்பது ஒரே  ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும்.  இந்த அலைகள் கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி மணிக்கு 1,000  கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். சுனாமி அலைகள் கரையை நோக்கி  அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும் போது  கடலுக்குள் இருந்த தண்ணீரின்  கணிசமான பகுதி வெறுமையாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப்  பாறைகள் கூட கண்ணுக்கு தெரியும்.

கடலில் இருந்து வேகமாக வரும் அலை,  அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும்.  இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும் போது, கடலுக்குள் எல்லாமே  அடித்துச் செல்லப்படும். ஆழிப்பேரலையினால் பல குடும்பங்களில் அனைவருமே  கொல்லப்பட்டனர். மேலும் பல குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்  பலியாகினர். எமது நாட்டில் சுனாமி ஏற்படுத்திய துயரம் வார்த்தைகளால்  விபரிக்க இயலாதது. உயிரிழந்தவர்களை ஒவ்வொரு வருடமும் இதே நாளில் நினைவு  கூருகின்ற போது மனதில் பெரும் வலி ஏற்படுகின்றது.பதினேழு வருடங்கள் கடந்த போதிலும்  உள்ளத்தை விட்டு இன்னுமே நீங்காத வலி!

Comments