மூன்றாம் உலகையும் அச்சுறுத்தும் சைபர் தாக்குதல் | தினகரன் வாரமஞ்சரி

மூன்றாம் உலகையும் அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதி உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நவீனத்துவமும், அதை ஒட்டிய சிந்தனைகளும் இன்றைய உலகின், இயக்கத்தை குறுக்கி, மனித வலுவையும் சிந்தனா திறனையும்  மழுங்கடித்து, மாறுபட்ட பல அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. அதி வேக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால்  அதிகரித்துவரும் சமூகவலைத்தள பாவனை, இணைய தொழில்நுட்ப பயன்பாடு என்பன சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர் உலகிற்கு மாபெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ள அதே வேளை பாரிய சமூக அவலத்துக்கும் உள்ளாகி நிற்கிறது.

சைபர் தாக்குதல்கள் (Cyber Attack) என்று பரவலாக அழைக்கப்படும் இணைய ஊடுருவல்களும்,இணைய முடக்க செயல்பாடுகளும்  உலகளாவிய ரீதியில் ஒன்றிவிட்ட இணைய செயல்பாடுகளை குறிவைத்து, திட்டமிட்டு நடாத்தப் படுவதுடன், நாடுகளினதும் சமூகங்களினதும்   பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. பேரழிவின் அறிகுறியான இந்த இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதும் நாடுகளிடையே குறிப்பாக அரசுகளிடையே பெரும் சர்ச்சையையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சைபர் தாக்குதல்கள் மேற்குலக நாடுகளையும் தாண்டி இன்று மூன்றாம் உலக நாடுகளையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அடிக்கடி குறிவைக்கப்படும் இந்தியா, இலங்கை அரச இணையத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு உள்நாட்டு ஒடுக்கு முறைகளுக்கு  எதிரான சக்திகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

சைபர்ஸ்பேஸ் 'ஒரு புதிய சர்வதேச போர்க்களம்' என்று வர்ணித்துள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான I Defense இன் இணை நிறுவனர் ஜேம்ஸ் அடம்ஸ் இதன் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகும் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாவதுடன் அந்த நாட்டின்  இராணுவ பிரசாரங்கள் வெற்றிபெறும் அல்லது இழக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடுகளின் தேர்தல்கள் நடவடிக்கை களுக்கு கூட அச்சுறுத்தல் ஏற்படும் இந்த சைபர் தாக்குதல்கள், தனிப்பட்ட வணிகங்கள் மீது நடாத்தப்படும் போது அந்த நிறுவனத்துக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் நிதியை இழக்க வைத்து நிறுவனத்தை திவாலாக்கு கிறது.

ஒரு போர்க்களத்தில் யார் வென்றார்கள் அல்லது தோற்றார்கள் என்பதை வரையறுத்து அதற்கேற்ற முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் இணைய அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் பௌதீகப் போர் நயவஞ்சகமான ஆபத்தை ஏற்படுத்தி அனைவரையும் திணற வைக்கின்றது. சந்தைகள், அரசாங்கங்கள் மற்றும் தேசிய சக்திகள் என்பனமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கின்றன.

முன்பை விட அதிக நம்பிக்கை சார்ந்ததாக மாறிவரும் இன்றைய உலகின் நவீன பொருளாதார செயல்பாடுகள், சமூக அசைவுகள், அரச முன்னெடுப்புகள் மற்றும் இராணுவ பாதுகாப்பு என்பன தகவல் தொழில்நுட்பம் நிறைந்ததாகவே வடிவமைக்கப்படுகிறது. இவற்றின் மெய்நிகர் இயல்பு அன்றாட நடவடிக்கைகளில் “நம்பிக்கை” வகிக்கும் பங்கை அதிகரிக்கிறது. இணையம் சார்ந்து இருக்கும் இன்றைய டிஜிட்டல் பொருளாதாரம் நம்பிக்கையின் சீரழிவுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..

அதிகரித்துவரும் ஓன்லைன் வர்த்தகத்துடன் ஒன்றிப்போய் உள்ள இன்றைய சந்தை நடவடிக்கைகளில் பெருகி வரும் இணைய அச்சுறுத்தல்கள்,  அதி நவீன தொழில் நுட்பத்துடன்  வடிவமைக்கப் படுவதுடன் இந்த தாக்குதல்களினால் ஏற்படும்  மொத்த பொருளாதார இழப்புக்கள்  உலகளாவிய ரீதியில் வருடாந்தரம் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் முதல் டிரில்லியன்கள் வரை இருக்கும் என கணக்கிடப் படுகிறது.

நவீன பொருளாதாரத்தை அச்சுறுத்தும் இந்த சைபர் தாக்குதல்கள் நிதி இழப்பை  மட்டுமல்லாது ஓன்லைன் வர்த்தக செயல்பாட்டின் மீதான நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாக இழக்க வைக்கிறது.

அமெரிக்காவின் முக்கிய  எண்ணெய் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான Colonial Pipeline மீதான Ransomware வகை இணைய தாக்குதலால் அந்த நிறுவனத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டு நிறுவனத்தையே இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டது  மட்டுமல்ல, இலட்சக்கணக்கான  பொதுமக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த வருடம் (2021) மே மாதம், Dark Side எனப்படும் கிறிமினல் கும்பல் ஒன்று கிழக்கு அமெரிக்காவின் எரிபொருள் தேவையில் சுமார் 45சதவீதத்தை  வழங்கும் இந்த பைப்லைன் நிறுவன வலையமைப்பு மீது  நடாத்திய தாக்குதலால் அந்த நிறுவனம் திவாலாகி மூடப்பட்டது மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற நிறுவனங்கள் அவற்றின்  இணைய கட்டமைப்பு போன்றன மீதான   நம்பிக்கையையும் இழக்க வைத்தது இப்படியான மக்களின் நம்பிக்கை இழப்புக்கள், ஏற்படுத்தும் குழப்பம், டிஜிட்டல் வர்த்தகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் அடித்தளத்துக்கே   அச்சுறுத்தலாக அமைகிறது..

உலகின் பிரபல செய்திச் சேவைகளில் ஒன்றான  (News Agents) ரோய்ட்டர்ஸ் (Reuters) மீது இந்த வருட ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட சைபர் தாக்குதல் அறிவுசார் சொத்துக்களைக்கூட  பாதுகாக்க முடியாத தொழில்நுட்பத்தின் இயலாமையை வெளிப்படுத்தி நிற்கிறது. ஒரு நிறுவனத்தின் வலையமைப்பில் (Network) ஊடுருவி, அங்கிருக்கும் முக்கியமான தரவுகளை அழிப்பது அல்லது செயலிழக்க செய்வது மட்டுமல்ல அங்குள்ள  அறிவுசார் சொத்துக்களையும் வர்த்தக ரகசியங்களையும்   திருடும் பழக்கம் சர்வதேச மட்டத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன் தமது பகை நாடுகளை வலுவிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்கும் இந்த தீங்கு பயன்படுத்தப்படுவதுதான் வேதனை.

வட கொரியா  தனது  கொவிட்-19தடுப்பூசி தொழில்நுட்பத்தை ஹேக் செய்து திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக பிரபல மருந்து நிறுவனமான ஃபைசர் பயோ ரெக் (Pfizer-Biotech) அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க பாதுகாப்பு தொழில் துறையின்  அடிப்படை ஆராய்ச்சிகள் சில ஹேக் செய்யப்பட்டு  சீன பாதுகாப்பு துறைக்கு சென்றடைந்ததாக கடந்த வருடம் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அமெரிக்க விமான மற்றும் ஏவுகணைகள் வளர்ச்சியின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சீன பாதுகாப்புத் துறை அறிந்து கொள்ள வழி வகுத்தது.

இது போன்ற இணையத் தாக்குதலைத் தொடங்க ரஷ்ய ஹேக்கர்கள் தயாராகி வருவதாக அமெரிக்க பத்திரிகையான New York Times வெளியிட்ட செய்தி அமெரிக்க பாதுகாப்பு மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தமது நாடு மீதான சவுதி அரேபிய அரசாங்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்கான முயற்சிகளுக்கு சைபர் தாக்குதல்களை மேற்கொள்கிறது  இஸ்ரேலிய ஸ்பைவேர் அமைப்பு என்கிற செய்தியும் வெளியாகி இருந்தது.

அமெரிக்காவின் Solar Winds என்கின்ற நிறுவனத்தின்  மேலாண்மை மென்பொருள் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் நிறுவன மின்னஞ்சல் வலையமைப்பு (Microsoft Exchange Server) போன்றன மீதான சமீபத்திய ஹேக்குகள் என்பனவும் குறிப்படத்தக்கன.

இது போன்ற நவீன, டிஜிட்டல் அடித்தளங்களையே தகர்க்கும் வன்மம் கொன்ட  சைபர் தாக்குதல்களின் அலைகளைத் தடுக்க முடியாது என்பது உலகின் இன்றைய அவலங்களில் ஒன்று..

இது போன்ற தாக்குதல்கள் இந்த உலகிற்கு புதிது அல்ல என்பதும் கவனிக்க வேண்டியது.பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பீரங்கிகள், துப்பாக்கிகள் என்பவற்றை முதன்முதலில் தயாரித்து  ஃபயர்பவர் நாடுகள் (Firepower Countries) உருவானபோது, அதற்கு எதிரான சில அமைப்புக்கள் இதுபோன்ற இரகசிய தாக்குதலை நடாத்த திட்டமிட்டன என்பதும் மேற்படி நாடுகள் தமது நிலையை  தக்கவைக்க பெரும் சிரமங்களை எதிர்கொண்டன என்பதும் வரலாறு.

இந்த மாத ஆரம்பத்தில் இந்தய பிரதமர்  நரேந்திர மோடியின் ‘ட்விட்டா்’ கணக்கு முடக்கப்பட்டு ட்விட்டர் தலைமையகத்தின் தலையீட்டை யடுத்து நிலைமை சீரானது. திட்டமிட்டு முடக்கப்பட்ட அந்த இடைப்பட்ட காலத்தில்,மோடியின் கணக்கு வழியாகப் பகிரப்பட்ட தகவல்கள் இந்தியாவில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் பெரும் குழப்பத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தன. முன்னரும் பல தடவைகள் இந்திய பிரதமரின் ட்விட்டர் கணக்கில் நுழைந்து போலியான பதிவுகளை மேற்கொண்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சைபர் பாதுகாப்புக் குறைபாட்டால் ஏற்பட்ட இந்த நிலைமை இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்டிருக்கும் சவால் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

முன்னரும் பல தடவைகள் இந்திய அரசின்  இணைய தளங்களின் ஊடாக வெளியிடப்பட்ட அரச அறிவிப்புகள் சில செயலிழக்கச் செய்யப்பட்டதும் இதற்கு பின்னணியில் பாகிஸ்தான்,சீனா என்பன செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் இஸ்லாமாபாதிலிருந்து இயங்கும் APD 36என்கிற சைபர் ஊடுருவல் குழு, இந்தியா உட்பட பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் செயல்படும்  முக்கிய இணைய தளங்களை குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும் இலங்கையிலும் அரச இணைய தளங்கள், குறிப்பாக பாதுகாப்பு தரப்பினதும் அரச அதிபர்,பிரதமர் ஆகியோரதும் இணைய தளங்கள் பலதடவைகள் செயலிழக்க செய்யப்பட்டு பின்னர் சீர் செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதமும்  ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு,மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்கள் முடக்கப்பட்டதும், இது  தொழில்நுட்பக் கோளாறே என அரசு அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த சைபர் தாக்குதல்கள் புலம் பெயர் நாடுகளில் வாழும் விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப் படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.,

கோவை நந்தன்

Comments