![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/02/a27.jpg?itok=BPZJ7FTv)
புதியதொரு ஆண்டு பிறந்திருக்கிறது. வழமைபோல இலங்கையர் அனைவருக்கும் சுபீட்சமான ஒரு ஆண்டாக இது அமையட்டும் என்று வாழ்த்த விரும்பினாலும் கூட 2021விட்டுச் சென்ற விழுப்புண்கள் அவ்வாறு வாழ்த்துவது பொய்யான கூற்றாக அமைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காரணம் 2021இல் நாடு சந்தித்த பொருளாதாரப் பேரிடர்கள் அதன் காரணமாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட இடையூறுகள் 2022இலும் தொடர்ந்து செல்லும் சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன.
கொவிட் பெருந்தொற்று நாட்டை வெகுவாகப் பாதித்திருந்த போதிலும் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கு அது மட்டும் காரணமல்ல. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களே மிகப்பிரதான காரணமாக அமைந்திருப்பதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விவேகபூர்வமற்ற அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் கொள்கைச் சீர்திருத்தங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதற்கு ஓர் பரிசோதனைக் கூடமாக இலங்கை அமையக்கூடும். கொவிட் பெருந்தொற்று உலகம் பூராகவும் பரவிய ஆரம்பகாலப்பகுதியில் உலக நாடுகள் அதற்கான தடுப்பூசியை ஏற்றுவதில் மும்முரமாக செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கை பாரம்பரிய முறையில் அதனைத் தீர்ப்பதாகக் கூறி பாணிகளை அறிமுகப்படுத்தி கங்கைகளில் மந்திரித்த பானைகளையும் விட்டது. அதனால் நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி பலரைப் பலிகொண்டபோது அலறியடித்துக்கொண்டு தடுப்பூசிகளைத் தேடி ஓடியது. ஆரம்பத்திலேயே தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் இறப்புக்களை ஓரளவு தடுத்திருக்கலாம் என்ற அபிப்பிராயத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது.
தேசிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற நியாயப்பாட்டின் அடிப்படையில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இலங்கையில் போதியளவு உற்பத்தி செய்யப்படாத அதேவேளை உடனடியாக உற்பத்தியைப் பெருக்க முடியாத உணவுப்பொருள்களின் இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டன. மஞ்சள், உளுந்து, பயறு போன்றனவும் இதில் உள்ளடங்கின. உடனடியாகவே அவற்றின் விலைகள் வானைத் தொட்டன. சுமார் 500ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மஞ்சள் தூளின் விலை 10000ரூபாவை எட்டியது. உளுந்து 2000ரூபாவை எட்டியது. மனமகிழ்ந்த இலங்கை இவற்றின் உற்பத்தியாளருக்கு சிறந்த விலையைப்பெற்றுக் கொடுத்ததாக பெருமைப்பட்டுக்கொண்டது.
சாதாரண மக்கள் சாப்பிடும் வடையிலும் தோசையிலும் இட்லியிலும் உளுந்து காணாமல் போனது. ஒரு போதைப் பொருளைத் துரத்துவது போல மஞ்சள் கடத்தல்காரர்கள் துரத்தப்பட்டனர். பெருந்தொற்றைக்கருதி இலட்சக்கணக்கான லீற்றர் செயற்கைத் தொற்றுநீக்கித் திராவகங்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட அதேவேளை, மிகச்சிறந்த இயற்கைத்தொற்று நீக்கியான மஞ்சளுக்கான தடை தொடர்ந்தும் செயற்படுகிறது.
நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வெளியே சொல்லப்பட்ட நோக்கத்தோடு அத்தியாவசியப் பொருள்களின் விலைக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் சந்தையில் குறித்த விலைகளில் அவற்றை பெறமுடியாததால் அவற்றுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. இற்றைவரையில் பால்மாவுக்கும் எரிவாயுவுக்கும் ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்கின்றது.
ஓரு கட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த விலைக்கட்டுப்பாடுகள் அனைத்தும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் விலக்கிக் கொள்ளப்பட்ட போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தன. அத்தோடு நாட்டின் எரிபொருள் விலைகளில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து 117ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒருலீற்றர் பெற்றோலின் விலை 177ரூபாவாக அதிகரித்திருக்கிறது.
பெற்றோலிய விலை அதிகரிப்பு எல்லாப்பொருள்களின் விலைகளும் மேலும் அதிகரிக்க காரணமாகியுள்ளது. போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மறுபுறம் இயற்கை விவசாயத்திற்கு மாறுகிறோம் என்று ஓரிரவில் இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டது.
சந்தையில் மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களின் நிரம்பல் சடுதியாக வீழ்ச்சியடைந்து இவற்றின் விலைகள் வானைத் தொட்டிருக்கின்றன. ஒரு கிலோ கத்தரிக்காய் 600ரூபாவுக்கு சந்தையில் விற்கப்படுவதை இதற்கு முன்னர் நாம் கண்டதில்லை. இப்போதும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது என்று இலங்கை ஆனந்தமடைவது தெரிகிறது. ஆனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பது நாளுக்கு நாள் முடியாத காரியமாகி வருகிறது. முன்னர் பொருளாதார நெருக்கடிகளின் போது சம்பலும் சோறும் சாப்பிட்டாவது வாழ்க்கையை நடத்திய மக்கள் இப்போது அவற்றின் விலைகளும் அதிகரித்துவரும் நிலையில் வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
அரச செலவினங்களை ஈடுசெய்ய போதிய வருமானங்கள் அற்ற நிலையில் தொடர்ச்சியாக பெரும் அளவில் ரூபா அச்சிடப்பட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதுடன் வட்டிவீதங்கள் கீழ் மட்டத்தில் பேணப்பட்டன. அதன் விளைவாக உள்நாட்டில் ரூபாவின் பெறுமதி குறைவடைந்து விலைமட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது. அறிஞர்களின் எதிர்வு கூறல்களின்படி 2022இல் பணவீக்கம் 20சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ரூபாவின் நிரம்பல் அதிகரிப்பு அதன் டொலர் விலைகளில் தேய்வினை ஏற்படுத்தி இருக்கிறது.
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தேய்வடைந்த நிலையில் மத்திய வங்கி அதனை செயற்கையாக 203ரூபா என்ற மட்டத்தில் பிடித்து வைத்திருக்கிறது. அந்த விலையில் டொலரின் நிரம்பலை விட அதன் கேள்வி மிக அதிகமாக இருப்பதால் டொலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய போதியளவு டொலர் கையிருப்பு மத்திய வங்கியிடம் இல்லை. இதனால் கள்ளச் சந்தையில் ஒரு டொலர் 240ருபாவுக்கு மேல் விற்கப்படுகிறது.
மத்திய வங்கி வணிக வங்கிகளிடம் வரும் டொலர்களையும் மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் உள்ள டொலர்களையும் ரூபாவுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. செயற்கையான ஒரு நாணயமாற்று வீதத்தில் டொலர் விலைகளைப் பேணி வெளிநாட்டுத் துறையை முகாமை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளரை நாட்டைவிட்டு துரத்தி விட்டிருக்கிறது.
குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் பிணைமுறிகளில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் தயக்கம் காட்டுவதால் இரண்டாம் தரச் சந்தையில் அந்த முறிகள் மிகக் குறைந்த விலைக்கு பரிமாறப்படுகின்றன. புதிதாக பிணைமுறிகளை விற்க முடியதாத நிலை உருவாகியிருக்கிறது. புதிய முதலீட்டாளர்களை நாட்டுக்குள் கவரும் புறச்சூழல் நாட்டில் இப்போது இல்லை. மறுபுறம் வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு பணம் அனுப்பும் இலங்கையர்கள் அதனையும் அனுப்பாமல் விடக்கூடிய புறச்சூழல் உருவாகியிருப்பதால் எதிர்காலத்தில் இலங்கையின் டொலர் உள்வருகை மிகவும் ஆபத்தான நிலைக்கு குறையக் கூடும்.
2021டிசம்பரில் மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்து ஒதுக்குகள் 1.1பில்லின் டொலராக வீழ்ச்சியடைந்தது. இது இலங்கையின் இரண்டுவார கால இறக்குமதிகளைச் செய்வதற்கே போதுமானதாக இருக்கும். ஆனால் வருடத்தின் இறுதிவாரத்தில் மத்திய வங்கி சீனாவிடம் இருந்து பெற்ற கைம்மாற்றுக்கடன் (SWAP) மூலம் இலங்கையின் ஒதுக்குகளை 3.1பில்லியன் டொலர்களாக அதிகரித்து சாதனைபுரிந்து விட்டதாக அறிவித்தது.
மத்திய வங்கி வெளியிட்ட ஊடக அறிக்கையில் இலங்கையின் இறைமைக் கடன் தரமிடல் நிலையை கீழ்நோக்கி குறைத்த கடன் தரமிடல் நிறுவனங்களின் மூக்கில் ஒரு குத்தும் விட்டிருந்தது. ஆனால் உண்மையில் சீனாவின் கடனை டொலர் கையிருப்பாக மாற்ற முடியாது. காரணம் அது ஒரு கடன். அதனை சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தவும் முடியாது. வெளிநாட்டுச் சொத்துகளுக்கான சர்வதேச நாணய நிதியின் வரைவிலக்கணங்களில் சீனாவிடம் இப்போது பெற்றிருப்பது போன்ற கைம்மாற்றுக் கடன்கள் நாட்டின் ஒதுக்குச் சொத்தாகக் கருதப்பட முடியாது. அதனால் சர்வதேச நியமங்களுக்கு அமையும் தரமிடல் நிறுவனங்கள் மத்திய வங்கியின் வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இலங்கை உழைத்த வருமானங்களைக் கொண்டு ஒதுக்குகளைப் பேணினால் தரமிடலில் முன்னேற்றம் பற்றி யோசிக்கலாம் என அறிவித்திருக்கின்றன. ஆகவே உள்நாட்டில் செய்வது போல சண்டித்தனம் காட்டி குற்றம் சாட்டி சாதிக்கும் உத்தி சர்வதேச நிறுவனங்ளிடம் எடுபடப் போவதில்லை. அது மட்டுமன்றி இப்போது அதிகரித்திருப்பதாகக் கூறப்படும் 3.1பில்லியன் இலங்கையின் 2022இற்கான அந்நியச் செலாவணித் தேவையுடன் ஒப்பிடுகையில் யானைப்பசிக்கு சோளப்பொரி அளவினது மாத்திரமேயாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது பற்றி அரசல் புரலாக செய்திகள் அடிபடுகின்றன. ஏற்கெனவே பல கொள்கைத் திட்டங்களை அமுல்படுத்தி அடிவாங்கியவுடன் ரிவர்ஸ் கியரில் சென்றது போல் சர்வதேச நாணய நிதியத்திடம் போகவே மாட்டோம் என்று அடம் பிடித்த இலங்கை அங்கு சென்றேயாக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படலாம்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் (seal of approval) தேவை என்ற நிபந்தனை முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இல்லாது விட்டலும் கட்டாயமாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதை விட செலவு குறைந்த வழிகள் இலங்கைக்கு இல்லை. ஏற்கெனவே அந்நிறுவனத்திடம் சென்றிருக்கவேண்டிய காலம் கடந்து விட்டதாகக் கருதப்படும் நிலையில் சண்டித்தனம் காட்டி காலம் கடத்துவது இலங்கை மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை தராது.
ஏற்கெனவே உணர்ச்சிவேகத்தில் எடுக்கப்பட்ட பிழையான கொள்கை மாற்றங்களை திருத்தி உண்மையை உணர்ந்து தேவையான சீர்திருத்தங்களை உரிய அறிஞர்களின் அறிவுரையோடு மேற்கொண்டு இலங்கையை ஒரு சந்தைப்பொருளாதாரமாக அங்கீகரித்து அதற்குரிய தராதரங்களை விருத்தி செய்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக்கட்டியமைக்க முடிந்தால் மாத்திரமே இலங்கைப்பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைவதைத் தவிர்க்க முடியும். ஆயினும் பொருளாதாரம் தரையிறங்குவதைத் தவிர்க்க முடியாது.
ஆனால் அது ஒரு மென்மையான தரையிறக்கமாக (soft landing) மாற்றப்படலாம். மாறாக இப்போதைய நிலையில் இலங்கை தொடர்ந்த பயணிக்குமாயின் விபத்து நிலையிலேயே (crash landing) தரையிறக்கத்தை சந்திக்க நேரிடும். அதிலிருந்து மீள்வது மிகவும் வலிமிக்க ஒன்றாகவே அமையும். எனவே தான் பிறந்திருக்கும் 2022இல் சகல செளபாக்கியத்துடன் வாழுங்கள் என வாழ்த்த முடியாதுள்ளது.
கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்