![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/02/a14.jpg?itok=UiWhsQ55)
கொவிட் உலகப் பெருந்தொற்றை பின்னணியாகக் கொண்ட பொருளாதாரப் பின்னடைவில் இலங்கை மாத்திரம் விதிவிலக்காகி விட முடியாது. தற்போதைய நிலைமை ஜீரணிக்கக் கூடியதாக இல்லாவிட்டாலும், இந்தக் குழப்பத்திலிருந்து நாடு இலகுவில் விடுபடுவதற்கு எளிதான வழி இல்லை என்பதே உண்மை.
நிறைவடைந்திருக்கும் 2021ஆம் ஆண்டு கடினமாக ஆண்டாக இருந்த நிலையில், பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டும் கடினமாக இருக்கப் போகின்றது என்பதையே நடைமுறையில்உள்ள சமூக, பொருளாதாரச் சுட்டிகளின் கணிப்புகள் உணர்த்துகின்றன.
புத்தாண்டு பிறந்திருக்கும் இத்தருணத்தில் நாடு டொலர் பற்றாக்குறையின் காரணமாகப் போராடி வருகிறது. டொலர் பற்றாக்குறையினால் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. நாடு இப்போது ஏற்றுமதி பற்றி மாத்திரமே சிந்திக்க முடியும். இதனால் எரிபொருள் போன்றவற்றின் கொள்வனவுக்கான தட்டுப்பாடும் காணப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெற்றுக் கொண்ட 6.9மில்லியன் அமெரிக்க டொலர்களின் சுமை தோள்களில் காணப்படுகிறது.
வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச்செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான டொலர் பற்றாக்குறை காணப்படும் நிலையில், அந்நிய செலாவணிக் கையிருப்புக்களை அதிகரிக்க நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் உதவிகளை நாடுவது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாட வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இருந்த போதும், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை இல்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் தற்போதைய பொருளாதார முட்டுக்கட்டையை எம்மால் சமாளிக்க முடியும்.
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள் இலங்கையில் மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் பொதுவானவை. நல்ல காலம் விரைவில் வரும் என அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் மீதமுள்ள அனைத்து வெளிநாட்டுக் கடன்களும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி மீளச் செலுத்தப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பல நிபந்தனைகளுடன் வருகிறது, அவர்களின் உதவியைப் பெற்றால் அனைத்து நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு கைச்சாத்திட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், புத்தாண்டில் அரசாங்கம் எடுக்க வேண்டிய இரண்டு முக்கிய மற்றும் அவசரமான முடிவுகள் காணப்படுகின்றன. டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதியை நிலையாகப் பேணுவதா அல்லது மிதக்க விடுவதா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெறுவதா ஆகிய இரண்டு தீர்மானங்களே எஞ்சியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. சர்வசேத நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் அமைச்சரவையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாகவே தெரிகிறது. நிதி அமைச்சர் நாடு திரும்பியதும் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை 03ஆம் திகதி கூடவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்படவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதன் ஊடாகவே இந்த நிலைமையிலிருந்து அரசாங்கத்தினால் மீள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார அழுத்தத்தைத் தணிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு ஆதரவாக அமைச்சரவைக்குள் பல குரல்கள் சமீப காலமாக வலுத்துள்ளன. ஆனால் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட சில அமைச்சர்கள் இந்த யோசனையை கடுமையாக எதிர்க்கின்றனர். எதிர்வரும் சில நாட்களில் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்த வரையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன்னரும் உதவியைப் பெற்ற வரலாறு உள்ளது. 1965ஆம் ஆண்டு முதல் இதுவரை 16முறை சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளது. இறுதியாக 2016ஆம் ஆண்டு உதவியைப் பெற்றிருந்தது. 2016ஆம் ஆண்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இறுதித் தவணையை சர்வதேச நாணய நிதியம் வெளியிடவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெறுவதாயின் பொதுச் செலவுகளைக் குறைத்தல், நஷ்டமடையும் நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட சில சிக்கலான விடயங்கள் முன்வைக்கப்படுவது என்பது இரகசியமில்லை. இருந்தபோதும் அவர்களால் விதிக்கப்படக் கூடிய நிபந்தனைகள் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் உறுதிமொழிகளுடன் பொருந்தாது.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார உறுதியற்ற தன்மையிலிருந்து வெளியேற வேண்டுமானால், நாடு அவசர பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஒவ்வொரு பொருளாதார நிபுணரும் ஒப்புக் கொள்வார்கள்.
எதுவாக இருந்தாலும் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வருவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். டொலர் பற்றாக்குறை தொடர்ந்தால் இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையை மாற்ற அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான நிலையில், அந்நிய செலாவணிக் கையிருப்பு 1.5பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 3.1பில்லியன் அமெரிக்க டொலாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். இருந்தபோதும் இத்தொகை எவ்வாறு கிடைத்தது என்பது வெளிப்படுத்தப்படவில்லையென விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
பி.ஹர்ஷன்