![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/02/a20.jpg?itok=5Styl7Ov)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம் ஆரம்பத்தில் அந்த மக்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தையே உறைய வைத்த சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பிலான விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன நிதர்சனா, தனது வீட்டிலிருந்து ஏறக்குறைய 400மீற்றர் தொலைவிலுள்ள அவரது அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கிராம மக்கள் பொலிசார் இராணுவத்தினர் எனப்பலரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டன் விளைவாக உருக்குலைந்த நிலையில் நிதர்சனா சடலமாக மீட்கப்பட்டாள்
நான்கு நாட்களின் பின்னர் கடந்த 19ஆம் திகதி சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ஏற்கனவே சிறுமி காணாமல் போனபின்னர் கிராம மக்களும் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மேற்கொண்ட பகுதிதான். ஆனால் அங்கு ஆரம்பத்தில் மேற்கொண்ட தேடுதல்களின்போது சடலம் அங்கிருக்கவில்லை. இந்தச் சடலம் எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது என்ற மர்மம் தொடர்ந்த நிலையில், உறவினர்களால் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மையை மறைப்பதற்காக கட்டப்பட்ட கதைகள் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது சகோதரியின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவர் ஆகியோரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமியின் தந்தை இந்தக் கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை வாக்குமூலமாக பொலிசாருக்கு வழங்கியிருந்தார்.
தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் அவரது தாய் கருவை கலைப்பதற்காக சிறுமியை மயக்கமடையச் செய்யும் நோக்கில் ஏதோவொரு மருந்தை வழங்கியதாகவும் தந்தை தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவின் சகோதரியின் கணவரின் வீட்டிலும் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
நிதர்சனாவின் சடலம் நீண்ட நேரம் நீரில் ஊறியிருந்ததால் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள சில கிணறுகளின் நீரை இறைத்து பொலிசார் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டனர்
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சென்று பார்வையிட்டுள்ளதுடன் சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார். இளநீல நிற கறைபடிந்திருந்த மேசையொன்றினை சான்றாக மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்
சம்பவ இடத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்
திருகோணலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 7-இல் கல்வி கற்ற யோகராசா நிதர்சனாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கற்றல் உபகரணங்கள் மாத்திரமே இன்று அவரின் வீட்டில் எஞ்சியுள்ளன.
ஒரு குழந்தை இவ்வுலகில் பிறக்கும் போது, அதற்கு சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்குமிடத்து அக்குழந்தை நற்பிரஜையாக வளரும், மாறாக இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுமிடத்து அக்குழந்தையினுடைய எதிர்காலம் வேறு திசையில் சென்றுவிடும்.
சிறுவர்களின் உடல், உள ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்களது குடும்ப சூழல் அமைகின்ற போது, அக்குழந்தையினுடைய வளர்ச்சியும் எதிர்காலமும் என்பன சிறப்பாக அமையும்.
மாறாக, குடும்பச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகள் அக்குழந்தையின் உடல்,உள வளச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நிதர்சனாவுக்கு நிகழ்ந்தது போன்ற வன்கொடுமைகள் இன்றும் பல சிறுமிகளுக்கு நிகழ்ந்த வண்ண மேயுள்ளன. ஆனால் அவை வெளிச்சத்துக்கு வரும்போது மட்டும் அது பற்றிப் பேசி விட்டு நாமும் மறந்து விடுகின்றோம். எங்கோ ஒரு மூலையில் இன்னொரு நிதர்சனாவுக்கு நிகழும்வரை.
ஜது பாஸ்கரன்