இந்நாட்டு வரலாற்றில் முதற் தடவையாக இந்நாட்டு அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், அங்கவீனமுற்ற படை வீரர்கள், சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் விவசாயிகளுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் ஒரே தடவையில் 22,900கோடி நிவாரணப் பொதியினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் இதன் மூலம் 1450,000அரச ஊழியர்கள், சமுர்த்தி உதவி பெறும் 17,93000குடும்பங்கள், ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் விசேடமாக நன்மையடைய உள்ளனர்.
இதற்கு மேலாக 17இலட்சம் விவசாயக் குடும்பங்கள், 247,000தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அங்கவீனமுற்ற படை வீரர்களும் இதன் மூலம் நன்மையடைவார்கள் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செயற்பாட்டில் இந்த நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருடத்தில் குறைந்த பட்சம் இந்நாட்டில் வாழும் 46இலட்சம் சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் நேரடியாகவே நன்மையடைய உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொவிட் தொற்று, டொலர் பிரச்சினை என்பன இருக்கும் நிலையிலும் இவ்வாறாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டமை பாராட்டப்பட வேண்டிய விடயம் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதன் கீழ் அரச ஊழியர்களுக்கு, ஓய்வூதியக்காரர்களுக்கு மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கும் இவ்வருடத்திலிருந்து 5000ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கும், சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 1000ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விடயம் யாதெனில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் இந்த 5000ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகும். இது தொடர்பில் ஆசிரியர்கள், அதிபர்கள் ஒன்றிணைந்த அமைப்புக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
தனியார் துறையின் ஊழியர்களுக்கும் இந்த 5000ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுவாக நாட்டின் அனைவருக்கும் இந்த நிவாரணப் பொதியின் மூலம் நன்மை கிடைக்கவுள்ளது. இது இடம்பெறுவது, இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றன அனைத்து வரிகளிலிருந்தும் விடுவிப்பதற்கு இந்த செயற்பாட்டின் மூலம் தீர்மானிக்கப்பட்டதனாலாகும். மேலும் இந்நாட்டின் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக 80ரூபா சலுகை விலையில் மாதாந்தம் 15கிலோ மாவினை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ஒரு கிலோவுக்கு 40ரூபாய் இலாபம் அவர்களுக்கு கிடைக்கின்றது. அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்காக மேலதிகக் கொடுப்பனவை வழங்கும் போது அரச ஊழியர்களுக்காக 9700ஆயிரம் கோடி ரூபாவும், ஓய்வூதியம் பெறுவோருக்காக 4000ஆயிரம் கோடி ரூபாவும் மேலதிகமாக அரசாங்கத்தினால் ஒதுக்க வேண்டியுள்ளது.
இந்நாட்டில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் 1,793,000உள்ளன. அவர்களுக்காக மாதாந்தம் ஒரு குடும்பத்திற்கு 3500ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு இம்மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் மேலும் 1000ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாதாந்தம் 179கோடி ரூபாவினை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு கிலோ நெல்லுக்கான உத்தரவாத விலையினை 50ரூபாவாக ஆக்கியுள்ளதை நினைவுபடுத்திய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விவசாயிகளின் நெல்லின் விளைச்சல் 50வீதம் குறைவடைந்துள்ளது என கருதினால் அவ்வாறு நஷ்டமடைந்த நெல்லுக்காக விவசாயிகளுக்கு மேலதிகமாக 25ரூபாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வகையிலும் அரிசி விலையினை அதிகரிக்காமல் விவசாயிகளுக்காக வழங்கப்படும் நிவாரணமே இந்த 25ரூபாவாகும். இந்த போகத்தில் முன்னரைப் போன்று எல்லா வயல்களிலும் விளைச்சலினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் வழியில் விவசாயிகளுக்கு நஷ்டங்கள் ஏற்படுமாயின் ஒரு கிலோ நெல்லுக்கு 75ரூபாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மேலாக வீட்டுத் தோட்டங்களை ஆரம்பிப்பதற்காக மேலதிகமாக 3100கோடி ரூபாய் அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளது. 20பேர்சஸூக்கு குறைந்த நிலத்தில் வீட்டுத் தோட்டச் செய்கையினை மேற்கொள்வதாயின் 5000ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவும், 20பேர்சஸூக்கும் ஒரு ஏக்கருக்கும் இடையிலான நிலத்திற்கு 10ஆயிரம் ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கு மேலாக ஆறு மாதங்களுக்குப் பின்னராயினும் இந்த கொடுப்பனவு 5000ரூபாய் மற்றும் 10ஆயிரம் ரூபாய் என்ற வகையில் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த அனைத்து நிவாரணங்களுக்காகவும் குறித்த துறைகளின் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நாட்டில் அதிகமான கோதுமை மாவினை உணவுக்காகப் பயன்படுத்தும் மக்களான தோட்டத் தொழிலாளர்கள் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாலும் அதற்கான தீர்வாக அரசாங்கம் இந்தப் பொதியின் ஊடாக அந்தக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 80ரூபாய் சலுகை விலையில் கோதுமை மாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கோதுமை மாவினை குறைந்த விலையில் வழங்குவது வாழ்க்கைச் செலவுச் சுமையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு பாரிய நிவாரணமாகும் என இது தொடர்பில் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ. முத்துலிங்கம் தெரிவித்தார்.
“எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. 25கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது. எமது மக்களுக்கு உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. போட்டியிட்டு வெற்றி பெற்றும் உள்ளார்கள். எனினும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு தோட்ட நிர்வாகங்களால் அனுமதிக்கப்டுவதில்லை. இந்த முறையினை மாற்ற வேண்டும். எவ்வாறாயினும் 2,4500தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இந்த கோதுமை மா நிவாரணத்தினால் நன்மை பெறும். இதற்காக அரசாங்கத்திற்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என முத்துலிங்கம் தெரிவித்தார்.
எமது நாட்டில் இன்னமும் கொவிட் நெருக்கடி குறையாமல் கொவிட் பிரச்சினைகள் உள்ள சந்தர்ப்பத்திலும், கொவிட் தொற்றுக்காக 3தடுப்பூசிகளை வழங்கியுள்ள சந்தர்ப்பத்திலும், டொலர் கையிருப்பில் பற்றாக்குறை இருக்கும் நிலையிலும் நிதி அமைச்சரின் ஏற்பாட்டில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டிருப்பது நாளைய தினம் பொருளாதார நிலை தொடர்பில் ஏதேனும் சாதகமான பண்புகள் தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு புரிந்துணர்வு உள்ளதாலேயாகும் என பொருளதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வீட்டுத் தோட்டச் செய்கையினை ஊக்குவிப்பதற்காக 5000ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரையில் வழங்குவது நாட்டின் உணவு உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முக்கியமான நடவடிக்கையாகும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த முற்போக்கு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் கவுடுல்லே விவசாயத் தலைவர் எம். கே. ஜயதிஸ்ஸ எம்மிடம் கூறினார்.
“நாம் முன்னரிலிருந்தே காபனிக் செய்கையில் ஈடுபடுகின்றோம். காபனிக் செய்கைக்கு நிலத்தைச் சரி செய்திருந்தால் காபனிக் செய்கையினால் சிறப்பான அறுவடையினைப் பெற்றிருக்கலாம். 75ரூபாய் என்பது எமது நாட்டில் நெல்லுக்காக அரசாங்கம் வழங்கும் அதிகூடிய விலையாகும் என்பதைக் குறிப்பிட வேண்டும்” என ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
“நெல்லுக்காக இந்த முறை 25ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது கடுவுல்லேவில் நெல் விலை 80ரூபாயாகும். எவ்வாறாயினும் இந்த விலையினை அதிகரிப்பதை விடவும் எமது காபனிக் விவசாயத்தை சுற்றாடல் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள், வாகனங்களை சலுகை விலையில் வழங்குவது அவசியமாகும். விசேடமாக எமது நாட்டிற்கு நிலையான விவசாயக் கொள்கை ஒன்று அத்தியவசியமாகும். அத்துடன் நாட்டின் சுற்றாடல் விவசாயம், காபனிக் விவசாயம் போன்றவற்றின் வெற்றி, தரம் போன்றன தொடர்பில் நாட்டிற்கு எடுத்துக் கூறுவதற்கு எமது இலத்திரணியல் ஊடகங்கள் மிகவும் அக்கரை காட்ட வேண்டும்” என்றும் எம். கே. ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வாக இந்த மாதத்திலிருந்து சம்பளத்தில் 5000ரூபாய் கொடுப்பனவு வழங்குவது ஆறுதலான விடயமாகும் என அரச ஊழியர்களுக்கு 5000ரூபாய் கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் டப்ளிவ். ஜே. கமல் கித்சிரி கருத்து தெரிவித்தார்.
“சில சில அத்தியவசிய உணவுப் பொருட்களைத் தெரவு செய்து அவற்றின் விலைகளைக் குறைத்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் ஆறுதலாக அமையும். எவ்வாறாயினும் நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் 5000ரூபாவினை அரச ஊழியர்களுக்கு அதிகரித்துள்ளமை தொடர்பில் எமது கிராம உத்தியோகத்தர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும் எமது பிரதான இலக்காக இருப்பது கிராம உத்தியோகத்தர்களின் சேவைப் பிரணயத்தினை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதேயாகும்” என்றார்.
இது தொடர்பில் தினகரனுக்கு கருத்து தெரவித்த இலங்கை அரசாங்க மற்றும் உள்ளுராட்சி சேவை ஓய்வூதியம் பெறுவோரின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. எம். கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், “5000ரூபாய் கொடுப்பனவு வழங்குவது இந்த சந்தர்ப்பத்தில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகளுக்கு சிறியதொரு நிவாரணம் மாத்திரமேயாகும்” என்றார். “ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாட்டினை இல்லாமல் செய்வதே எமது தேவையாகும். இது நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வரும் எமது கோரிக்கையாகும். இந்த முரண்பாடு இல்லாமல் செய்யப்படுமானால் எமக்கு இதனை விட சம்பளம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது” எனக் கூறினார்.
நிவாரணப் பொதி தொடர்பில் கருத்து தெரிவித்த இந்நாட்டு அரச ஊழியர்களின் முக்கிய தொழிற் சங்கமான அரச சேவை தொழிற் சங்க சம்மேளனத்தின் தலைவர் டப்ளிவ். எச். பியதாச, “ அரசாங்கத்தினால் இவ்வாறு வழங்கப்படும் நிவாரணத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
“கடந்த இரண்டு வருடங்களான எமது நாட்டைப் பீடித்துள்ள கோவிட் தொற்று நிலைக்கு மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் இல்லாமல் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருக்கும் நிலையிலும் இந்நாட்டின் அரச துறையினருக்கும், ஒய்வூதியம் பெறுவோருக்கும் மற்றும் அங்கயீனமுற்ற படை வீரர்களுக்கும் 5000ரூபாய் வீதம் மேலதிக கொடுப்பனவை வழங்கி பொருளாதார நிவாரணைத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள நடவடிக்கையினைப் பாராட்ட வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தும் உலகின் பாராட்டைப் பெற்ற கோவிட் தடுப்பூசி போடும் செயற்திட்டத்தின் மூலம் அந்த தொற்று நோய் தற்போது பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு உந்து சக்தியாக அமையும் என எமது கூட்டமைப்பு நம்புகின்றது.
அத்துடன் அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டதால் நாட்டின் அனைவருக்கும் நன்மையடைவார்கள். அத்துடன் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சலுகை விலையில் கோதுமை மாவினை வழங்குவதும், சமுர்த்தி நிவாரணத் தொகையினை 1000ரூபாவினால் அதிகரித்திருப்பதும், பல்வேறு காரணங்களினால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளன.
“கோவிட் தொற்றின் காரணமாக எமது நாட்டின் இலக்குடைய வருமானம் இல்லாமைப் போனமை, தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் திருப்பிக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர்களின் வெற்று விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மக்களுக்கு இவ்வாறு முழுமையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தைப் பாராட்டுவதாகவும் அரச பணியாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் டப்ளிவ். எச். பியதாச மேலும் கூறினார்.
இதனிடையே தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த 5000ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான சட்டதிட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் அண்மைய வராலற்றின் பல்வேறு துறைகளின் பயனாலர்கள் அனேகமானோருக்கு ஒரே தடவையில் நிவாரணங்களை வழங்கிய சந்தர்ப்பங்கள் இல்லை. எனவே இந்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் எமது நாட்டினை பொருளாதார ரீதியிலும், விவசாயத் துறையிலும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது முக்கியமான கடமையாகும்.
நிஹால் பீ. அபேசிங்க
தமிழில்: எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)