![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/09/a27.jpg?itok=chhbP0ac)
நாற்பது வருடகால அரசியல் அபிலாஷைகளை அடைவதில் தாண்டவுள்ள தடைகள் இன்னும் எத்தனையோ இருக்கையில், உள்ளக முரண்பாடுகளுக்கே தீர்வின்றியுள்ளனர் தமிழ்மொழிச் சமூகத்தினர். ஒரு ஆவணத்தில் கூட தமிழ்மொழித் தேசியங்களாக ஒன்றுபடாதளவில்தான் இவர்களது இடைவெளிகள் இருக்கின்றன. இதனால், இந்தியாவின் அழுத்தங்களைக் கோரும் இவர்களது முயற்சிகள் ஒருதலைப்பட்சமாகுமளவுக்கு வந்துள்ளன. இந்த அரசாங்கத்திலா இவர்களது ஒற்றுமையின்மையை காட்டுவது? அடைந்துகொள்ள உள்ள இலக்குகளிலே இவர்களுக்குள் இழுபறிகள், 13க்கு மேலாகத்தீர்வு, 13ஐ வைத்தே நகர்வு, இணைந்த வட
கிழக்கில் எங்களுக்கென்ன? என்ற கேள்விகளால் ஒப்பமிடுவதிலிருந்து சில கட்சிகள் ஒதுங்கிக்கொண்டன. சமூகங்களை ஒருநிலைப்படுத்தும் கோட்பாட்டில் செல்லும் இந்த அரசாங்கம், இவர்களின் இந்த முயற்சிகளை எந்தளவு பொருட்படுத்துமென்பதும் தெளிவில்லாதுள்ளது.
“ஒரே நாடு, ஒரே சட்டம்” தான் தேசப்பற்றுக்கு வழி. இன, மத அடிப்படையிலான நிர்வாகப் பிரிவுகள் இனங்களுக்கிடையில் இடைவெளிகளை ஏற்படுத்துமென்கிறது இந்த அரசாங்கம். இது தவிர முஸ்லிம்களின் நிலைப்பாடு, இதைப்போன்று பெரும்பான்மை சமூகத்துக்குள் உள்ள கடும்போக்குகளின் மனநிலை, இன்னும் இவ்வாறு அதிகாரங்களை பகிர்வதில் இந்தியாவுக்குள்ள சிக்கல்கள், இவ்வாறு பலதரப்பட்ட விடயங்களை கடக்க வேண்டிய கடப்பாடுகளுக்குள் சிறுபான்மையினரின் குறிப்பாக, தமிழர்களின் அரசியல் தீர்வு சிக்கியிருக்கிறது. இச்சிக்கல்கள் சர்வதேச அளவில் ஏற்படுத்தப்போகும் அழுத்தங்கள் ஏதோ ஒரு தீர்வை நோக்கி நகர்த்தும். இந்த நம்பிக்கையில்தான் இன்று வரைக்கும் தமிழர் தரப்பு சளைக்காது முயற்சிக்கிறது. ஆனாலும், ஒருதளத்தில் ஒன்றுபட இயலாத பலவீனம், ஆட்சிக்கு வரும் அரசுகளை அரவணைத்துச் செல்லத் தவறும் கவனயீனம், புலம்பெயர் சமூகத்தில் இதுவரையும் முழுமையாகப் பெறப்படாத அங்கீகாரங்கள்தான், தமிழ் அரசியல் தளத்தை தளம்பச் செய்கிறது. ஈழக் கோரிக்கையிலிருந்து இறங்கி வர மறுக்கும் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், இன்னும் இந்த தமிழ் தேசியத்தை போராட்ட குணாம்சத்திலா வழிநடத்த விரும்புகிறது?
கனடாவில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து, அவர்களது உணர்ச்சிகளை புரிந்திருக்கும் இந்த அரசாங்கம். வெளிநாடுகளிலிருந்து தங்களது தாயகத்தை பார்க்கும் இந்த அமைப்புக்கள் இன்றைய யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளப் பின்னடிப்பது ஏன்? கூட்டமைப்பினருக்குள்ள கவலை இதுதான்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட புவியியல் ரீதியான அரசியல் பிணைப்பு, எந்த வகையிலும் இலங்கையைக் கூறுபோட உதவாது என்ற உணர்தலில்தான் தமிழ் தேசியம் இன்று சமஷ்டிக்கு இறங்கி வந்திருக்கிறது. இந்தப் புரிதல்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்பட வேண்டும்.
இந்த அமைப்புக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ உள்ளன. இந்தியாவின் அழுத்தத்தை கோரும் நகல் வடிவில் சகல தமிழ் கட்சிகளையும் ஒன்றுபடுத்தியிருக்கலாம். நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட மாகாண சபை திருத்தச் சட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதை தடுத்திருக்கலாம். இன்னும், அந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சியில் இருப்பதை கைவிட வைத்திருக்கலாம். 2010ஜனாதிபதி தேர்தலில் இருபது இலட்சத்தால் வெல்லவிருந்த மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்காதிருந்திருக்கலாம். இவ்வாறான நகர்வுகளே தமிழ் தேசியத்தின் நகர்வுகளை நலிவடையச் செய்தன.
அதிகாரப் பகிர்வின் முதல் அடையாளமான மாகாண சபைத் தேர்தல்கள், நான்கு வருடங்களாக நடத்தப்படாதுள்ளமைக்கு பொறுப்புக்கூறுமளவில் இந்தத் தரப்புக்களில் தவறு நடந்திருக்கிறது. இன்று கிழக்கை பிரிக்கக் கோரும் முஸ்லிம் தலைமையுட்பட சில பௌத்த கடும்போக்குகளும் இதைத்தானே தூக்கிப்பிடிக்கின்றன. உள்ளதையே காப்பாற்றத் தெரியாத உரிமை கோரிகள் தேசியத்தை பாதுகாப்பது எப்படி? இனங்களுக்காகப் பேசுவது இந்த நாட்டில் இனவாதத்தையே ஏற்படுத்தும்.
மானிடத்துக்காக அல்லது மாநிலங்களுக்காக பேசுவதுதான் இத்தனை காலமாக இழுத்தடிக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு. இதுதான் இவர்களது நிலைப்பாடு. இன்று தேசப்பற்றாளர்களும் இதுபற்றிச் சிந்திக்கவே தலைப்பட்டுள்ளனர்.
மதங்களின் இருப்பு, இனங்களின் கலப்பு, நிலங்களின் பரப்பு மற்றும் மொழிகளின் மரபுகள் பற்றிப் பேசித்தான் நமது நாட்டு உறவுகள் மாண்டுவிட்டன. இனி உள்ளோரது வாழ்வுக்கு ஔியேற்ற சமூகங்களின் ஒருங்கிணைவுகளே அவசியம். இந்த ஒருங்கிணைவுகள் எந்த உணர்வுகளையும் தாண்டியதாக இருத்தல் அவசியம். இதில் ஏதாவது ஒன்று மேலெழ நேரிடின் அது பிரிவினைவாதமாகிவிடும். இவ்விவாதங்கள் தலையெடுக்குமளவிற்கு தமிழ், முஸ்லிம் தரப்புக்களது பலவீனமும், தங்களுக்குள்ளே கயிறிழுக்கும் தமிழ் கட்சிகளது நிலைமைகளும் வந்துள்ளன. இவர்களின் இந்தப்போக்குகளும், பிளவுகளும் தேசப்பற்றுக்குத்தான் பலம் சேர்க்குமே தவிர தேசியங்களைப் பலப்படுத்தாது. மட்டுமல்ல, இவ்விடயத்தில் ஒரு அடிகூட முன்னகர முடியாத நிலைமைகளையே இவர்களது பொதுவெளிகள் ஏற்படுத்தப்போகின்றன. இந்தப் பொதுவெளிகளுக்குள் எதிரிகள் நுழைவது தடுக்க முடியாமலாவதுதான் இந்த தேசியங்களின் பலவீனமாகப்போகிறது.
சுஐப் எம்.காசிம்