இந்திய மீனவர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர் சமூக அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இரு தினங்களுக்கு முன்னர் சண்டிலிப்பாய் பகுதியிலும் மீனவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இவ்விவகாரத்துக்கு இராஜதந்திர ரீதியில் விரைவில் தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கு உறுதியளித்திருந்தார்.
கொவிட்-19தொற்று சூழல் காரணமாக மீன்பிடித் தொழில் உள்ளடங்கலாக பெரும்பாலான துறைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவது மீனவ சமூகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மீனவர்கள் ‘பொட்டம் ட்ரோலிங்’ எனப்படும் தடை செய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். கடலின் அடிமட்டம் வரையில் செல்லும் வலைகள் கடற்பாறைகள், மீன்குஞ்சுகள் என அனைத்தையும் இழுத்துச் சென்று அழிவை ஏற்படுத்தி விடுகின்றன. இந்திய மீனவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது நாட்டு கடற்பரப்பில் இத்தொழிலில் ஈடுபட்டு அனைத்து வளத்தையும் அழிவடையச் செய்து விட்டு தற்பொழுது இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். ‘ஈழத் தமிழர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள்’ எனக் கூறிக் கொள்ளும் தமிழக மக்கள், யுத்தத்தினால் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு மீண்டெழ நினைக்கும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்றார்கள் என்பதே கவலைக்குரிய விடயமாக உள்ளது. இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுக்கு பல உலக நாடுகளின் உதவியை நாடி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் சீனா பல வழிகளில் இலங்கைக்கு மேற்கொண்டு வரும் உதவிகள் இந்தியாவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இலங்கை விவகாரத்தில் தனது இறுக்கமான நிலைப்பாட்டை இந்தியா அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றது. இருந்தபோதும் பொருளாதார பின்னடைவுகளால் இந்தியாவின் உதவியையும் நாடும் நிலைக்கு இலங்கை இப்போது தள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூட அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தார். அதேபோல, பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவின் உதவியை நாடவேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்தமீறி நுழைவதும் அதிகரித்துள்ளது.
மறுபக்கத்தில், இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், கடற்பகுதிக்குச் சென்றும் பார்வையிட்டிருந்தார். இலங்கை தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவதற்கு உலக நாடுகள் முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாததாக உள்ளது.
இருந்தபோதும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி விவகாரத்தை அந்நாட்டின் மத்திய அரசும், தமிழக அரசும் இலங்கை மீனவர்கள் மீதான கரிசனையுடன் அணுக வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் தடைப்பட்டுப் போயுள்ள பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டியது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.
அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13பேர் சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தின் ஊடாக விடுவிக்கப்பட்டிருந்தனர். இதுபோன்ற கைதுகள் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நல்லுறவில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன.
எனவே, தமது நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான மாற்றுவழிகளை அறிமுகப்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ‘பொட்டம் ட்ரோலிங்’ முறையில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.
இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையிலான படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவது குறித்து செய்மதி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்திய மத்திய அரசுக்குக் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் தமது தரப்பில் தவறு இருப்பதை ஓரளவுக்கு இந்தியத் தரப்பினர் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
எனவே இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் வேண்டுகோள் ஆகும்.
தமிழகத்தில் அரசியல் பின்புலம் கொண்டவர்களின் படகுகளே இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகத் தெரியவருகிறது. இதனால் எந்தக் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் இப்பிரச்சினையை முடிக்க முடியாமல் உள்ளது. அதேநேரம், இலங்கைக்கு எப்பொழுதும் நேசக்கரம் நீட்டும் நாடாக இந்தியா இருப்பதால் அதனைப் பகைத்துக் கொள்ள இலங்கைத் தரப்பில் விரும்பவில்லை. இதனாலேயே இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மீது அக்கறை காண்பித்து வருகிறது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒன்லைன் ஊடாக தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அண்மையில் இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களிலும் இவ்விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தடைப்பட்ட பேச்சுக்களைத் தொடர்வதற்கும் இதில் இணங்கப்பட்டது. இராஜதந்திர மட்டத்தில் எவ்வாறான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டாலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளே இப்பிரச்சினையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும்.
எந்தவொரு நாட்டினதும் அளவின் அடிப்படையில் அதன் இறையாண்மை தீர்மானிக்கப்படலாகாது. இந்தியா அளவில் பெரியது என்பதால் இலங்கையின் சர்வதேச கடல் எல்லையை மீறி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அர்த்தப்படுத்த முடியாது. எனவே, இரு தரப்புக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சுமுகமாக இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பி.ஹர்ஷன்