கொழும்புக்கு வந்த முதலைகள் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்புக்கு வந்த முதலைகள்

மாத்தறை ஆற்றில் உள்ள முதலைகள் மனிதரை கொல்லாது என்றொரு நாடோடி பாடல் உண்டு. ஆனால் நர மாமிசம் உண்ணாத முதலைகளை இதுவரை நாம் அறிந்ததில்லை. சிலவேளைகளில் ஆறு, குளம், சதுப்பு நிலங்களை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் முதலைகள் மனிதர்களை இரையாக்கிக் கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் கடலில் முதலை தாக்குதல் பற்றி இதுவரை யாரும் கேட்டதில்லை. ஆனால் புதுவருட ஆரம்பத்துடன் அதாவது ஜனவரி 3ஆம் திகதி கடலில் நடந்த முதலை தாக்குதல் இந்நாட்டின் முதல் தடவையாக நிகழ்ந்த சம்பவமாகும். இது பலரது நெற்றிப் புருவங்களை உயர்த்தியுள்ளது. 

இச் சம்பவம் தெஹிவளை கடல் பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள கொடகல அருகிலுள்ள ஆழ்கடலில் சுழியோடுவதற்கு சென்ற கிருலப்பனையை சேர்ந்த சோமசிறி பீரிஸ் (ஜயந்த) என்பவரே முதலைக்கு இரையாகி துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். இரத்மலானை கல்தேமுல்ல சுனாமி மீனவ கிராமத்தில் வசித்த 58வயதான சோமசிறி பீரிஸ் 16வருடங்களாக ஆழ் கடலில் சுழியோடி அலங்கார மீன்களை பிடித்து வாழ்க்கை நடத்துபவர். அவரின் ஒரே மகள் தக்ஷிலா  தில்ருக்ஷி. 

"ஒவ்வொரு நாளும் காலை 6மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று கடலில் சுழியோடி அலங்கார மீன்களை பிடித்து வருவார். அவர் பழகுவதற்காக செய்யும் தொழில் அல்ல. அவர் படகில் செல்பவரல்ல .நீந்தியே செல்வார். ஒட்சிசன் தாங்கியும் பயன்படுத்த மாட்டார் சுழியோடுவதற்கான அங்கியையும் அதற்குத் தேவையான காலணிகளை மாத்திரமே பயன்படுத்துவார். சம்பவ தினத்தன்று காலை 10மணிக்கே முதலை அவரை தனக்கு இரையாக்கியுள்ளது என்று பேச ஆரம்பித்த சோமசிறியின் மனைவி லட்சுமி பெரேரா.

"எனக்கு பகல் 12மணியளவில் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நடந்த சம்பவத்தை வந்து கூறினார். நான் கணவரின் சகோதரியுடன் களுபோவில வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு அவர் மரணம் அடைந்ததை அறிந்தேன்".  என்றார் மனைவி லட்சுமி பெரேரா.

இரண்டு முதலைகள் அந்த கடற்பகுதியில் நடமாடுவதாக மரணமடைந்த சோமசிறியின் உறவினர்கள் கூறுகின்றார்கள். அதனாலேயே தெஹிவளை கடல் பிராந்தியத்தில் முதலைகளை பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். இல்லாவிட்டால் சோமசிறி போன்ற சில சுழியோடிகளுக்கு மாத்திரமல்ல கடலில் இறங்கி நீந்தும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்  இருக்கத்தான் செய்யும்.  

"எனக்கு சுழியோடி ஒருவரை முதலை தாக்கியுள்ளதாக அழைப்பொன்று வந்தது. அவ்வேளையில் சுழியோடிகள் சிலரும் கரைக்கு வந்தார்கள். நானும் இன்னும் நான்கு பேரும் படகு ஒன்றில் ஏறி கடலுக்கு சென்றோம். சோமசிறியை ஆழ் கடலுக்குள் முதலை இழுத்துச் செல்வதை நான்  கண்டேன். மீண்டும் முதலை மேலே வந்தது. நான் படகின் நங்கூரத்தை முதலையின் மேல் படுமாறு போட்டேன். அதன் பின்னர் படகை வேகமாக முன்னால் செலுத்தினேன். அப்போது அவரை முதலை விட்டுவிட்டது. முதலை அவரின் தோள்பட்டையை பிடித்திருந்தது கையை பிடித்திருந்தால் கையை இழந்தாவது அவர் தப்பியிருக்கலாம். அவரால் எதுவும் செய்ய முடியாமற்போயிற்று. நாம் பின்னர் அவரை கரைக்கு கொண்டு வந்தோம்” என கொழும்பு மாவட்ட அலங்கார மீன்கள் பிடிப்பவர்களின் கூட்டுறவு சங்கத் தலைவர் ரஞ்சித் சில்வா தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை நேரில் கண்ட தெஹிவளை      ரயில் பாதையில் வசிக்கும் சுழியோடியான கன்உபுலிகே நந்தன குஷாந்த இச்சம்பவத்தை பின்வருமாறு விபரித்தார் :  

"எனது வீடு இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே உள்ளது. முதலையொன்று நபரொருவரை பிடித்துக் கொண்டு சென்றதாக அறிந்தவுடன் நானும் இன்னும் சிலரும் அந்த இடத்துக்கு சென்றோம். அங்கு சென்றபோது சுழியோடி ஒருவர் பாவிக்கும் பாதணிகள் கரையில் இருந்து 100மீட்டர் தூரத்தில் நீரில் மிதப்பதை கண்டோம். அதன் அருகில் முதலை ஒன்றையும் கண்டோம்.

நாம் முதலை இருந்த இடத்துக்கு உடனடியாக செல்லவில்லை. முதலை எமது படகை கவிழ்த்துவிடுமோ  என எங்களுக்கு சந்தேகமாக இருந்தது. முதலை கைவிட்ட நபரை படகில் கொண்டு வரும்போதுதான் அவர் ஜயந்த என்பது தெரியும். அவ்வேளையில் மூக்கில் இருந்து சளி போன்ற திரவம் வடிந்து முகம் முழுவதும் மறைத்திருந்தது. அவரை நாம் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றாலும் அவர் அங்கு கடலில் முதலை தாக்கி இறந்த முதலாவது நபராக மாறியிருந்தார்.  

இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.   ஏனென்றால் முதலைகள் கடலில் வசிக்கும் என்பது புதிய விடயம்.     ஆனால் உவர்நீர் முதலைகள் salt water crocodile எனப்படும் முதலைகள் கடலில் வசிக்கக்கூடியவை. 

"இலங்கையில் இரண்டு வகையான   முதலைகள் வசிக்கின்றன.  ஒன்று நன்னீர் முதலை. மற்றையது உவர்நீர்  முதலை.  கடலுக்கு அருகில் முகத்துவாரம் மற்றும் சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளிலும் நன்னீர் முதலைகள் வாழ்கின்றன. பானம, மாத்தறை போன்ற இடங்களில் நன்னீர் முதலைகள் அதிகளவில் நடமாடுகின்றன. நாம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் உவர் நீர்முதலைகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியபோது அவற்றின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்திருந்தது.  

நன்னீர் முதலைகளின் எண்ணிக்கை 7000மாக காணப்பட்டது. நன்னீர் முதலைகள் அதிகமாக யாழ்ப்பாண பிரதேசத்திலேயே  காணப்படுகின்றன.

உவர்நீர் முதலைகள் 20அடிக்கும் அதிக நீளமான ஊர்வன வகையை சேர்ந்தவை. நன்னீர் முதலைகள் மற்றும் உவர்நீர் முதலைகளை இலகுவாக வேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம். நன்னீர் முதலைகளின் கழுத்தில் உள்ள செதில்கள் பாதி தேங்காய் சிரட்டையை விட பெரிய அளவாக காணப்படும். உவர்நீர் முதலைகளின் செதில்கள் பலாவின் மேற்பகுதியில் உள்ள முள் போன்று காணப்படும் என   ஊர்வன தொடர்பான விசேட நிபுணர் என்சலம் த சில்வா தெளிவுப்படுத்துகிறார்.  

முதலைகள் குறைந்த வெப்ப இரத்த பிராணிகளாகும். வெளிவெப்பநிலையை ஆதாரமாக பயன்படுத்தும் முதலைகள் விசேட புலம்பெயர் தன்மையைக் கொண்டவை. பகல் நேரங்களில் நீர் நிலைகளில் காணப்படும் முதலைகள், இரவு நேரங்களில் கரைக்கு வருகின்றன. அடிக்கடி நீருக்கு  மேலே வந்து காற்றை சுவாசிக்கும்  முதலைகள் மீண்டும் நீரின் அடியில் பயணம் செய்யும். உவர்நீர் முதலைகள் கடலில் காணப்பட்டாலும் நீண்டகாலம் அங்கு வசிக்கும் திறன் அற்றவை. அனேகமாக ஒரு முகத்துவாரத்தில் உள்நுழைந்து வேறொரு முகத்துவாரத்துக்கு செல்வதற்கு பயணப்பாதையாக கடலையே பயன்படுத்துகின்றன. நன்னீரிலும் உவர் நீரிலும் வசிக்கும் முதலைகளின் சக்தி அதிகரிப்பது நீரிலாகும். 180பாகைக்கு தங்களது கண்களை திருப்பக் கூடிய திறன் வாய்ந்தவை. அத்துடன் தந்திரமாக இரையை கெளவ்வக் கூடியவை.  

முதலைகள் நீரை சலனப்படுத்தாது வாலை இருபுறமும் அசைத்தவாறு நீந்தி செல்லும் தன்மை வாய்ந்தவை. இரைக்கு அருகில் நெருங்கும் வரை அதனை இரையால் உணர முடியாது. அதனால் அருகில் சென்று ஒரேயடியாக அவற்றை கெளவ்விக் கொள்ளும். அது மாத்திரமல்ல; நீருக்கடியில் வாலை அசைத்து தண்ணீரை கலங்கச் செய்து மீன்களையும் வேட்டையாடும் திறமை வாய்ந்தது. நீரில் நீந்தும் போது உடம்பு புூராவும் நீரிலேயே மூழ்கி இருக்கும்.

இரையை நெருங்கும் போது மாத்திரம் கண்களும் மூக்கு நுனியும் நீரின் மேல் தெரியும்படி வெளியே வரும். முதலை குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவரும்.

அவை ஒரு தரம் இடும் முட்டைகளின் எண்ணிக்கை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். ஒரே தடவையில் 20தொடக்கம் 90வரையான முட்டைகளையிடும் திறன் வாய்ந்தவை. 

”இலங்கை கடலில் உவர்நீர் முதலைகள் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. 

இந்த துரதிர்ஷ்ட வசமான சம்பவம் தெஹிவளையில் நிகழ்ந்துள்ளது. தெஹிவளை கடலுக்கு எவ்வாறு முதலை வந்ததென ஆராய வேண்டும்.

கொழும்பு வாய்கால் பாதைகளை அண்டிய பிரதேசங்களில் உவர்நீர் முதலைகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பத்தரமுல்லை பக்கமிருந்து ஹவ்லொக் டவுன் ஊடாக பாயும் வாய்க்கால் கடலில் பாய்கிறது. இப்பாதையின் ஊடாகவே கடலுக்குள் முதலை வந்திருக்கலாம் என நாம் அனுமானிக்கின்றோம்.  

இதன்போது பொரலஸ்கமுவ,பெல்லன்வில போன்ற பிரதேசங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்போது  அப்பிரதேசம் கடல்மட்டத்தை விட மிகவும் ஆழமாக காணப்படுவதை கண்டோம். அப் பிரதேசங்களுக்குள் கடல் நீர் கசிந்து நீரானது உவர்த்தன்மையாக மாறியுள்ளது. உப்பு நீரில் வசிப்பதற்கு உவர்நீர் முதலைகள் மிகவும் விரும்புகின்றன. அதன் பலனாக அவற்றின் இனப்பெருக்கமும் அதிகரிக்கின்றது. பெரிய பறவைகள் முதலை குட்டிகளை உணவாகக் கொள்கின்றன. ஆனால் இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக சதுப்பு நிலங்களில் பெரிய மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பெரிய மரங்கள் இல்லாததால் பறவைகள் வந்து தங்குவதும் குறைந்து விட்டது. அதனால் உணவுச் சங்கிலியானது பாதிக்கப்பட்டு முதலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கலாம்” என உயிரியல் பாதுகாப்பு மத்திய நிலைய தலைவர் புபுது வீரரத்ன தெரிவித்தார். 

கடலில் முதலை தாக்கி கொல்லப்பட்ட சோமசிறியின் மரணம் இன்னுமொரு சம்பவம் என்று கருதிவிட முடியாது. இவரைப் போன்று மேலும் பல சுழியோடிகள் மீனவர்கள் மற்றும் கல்கிசை,தெஹிவளை பிரதேசங்களுக்கு நீராட வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் முதலைக்கு இரையாகலாம். என அவர் தெரிவித்ததோடு உலகில் அவுஸ்திரேலியாவிலேயே முதலைக்கு அதிகமானோர் இரையாகின்றனர் என்ற தகவலையும் புபுது வீரரத்ன தெரிவித்தார். 

"அந்தமான் தீவுகளின் பிரதான வருமானத்துக்கான வழி உல்லாச பயணத்துறையாகும். அந்நாட்டில் வெளிநாட்டு பெண்மணி ஒருவரை முதலை ஒன்று கெளவ்வியதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இந்திய அரசால் இப்பிரச்சனையை ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அங்கத்தவராக என்னையும் தெரிவு செய்திருந்தார்கள்” என்கிறார்  ஊர்வன தொடர்பான விசேட நிபுணர் என்சலம் த சில்வா. 

தெஹிவளை கடலில் சோமசிறிபீரிஸை பலியெடுத்த முதலை 3ஆம் திகதி மாலை கடற்பரப்பின் ஊடாக பாணந்துறை நோக்கி செல்வதை வனவிலங்கு அதிகாரிகள் அவதானித்துள்ளார்கள். பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் உவர்நீர் முதலை ஒன்றையும் கண்டுள்ளார்கள். கொழும்பு பிரதேசத்தில் நீர் கடலில் கலக்கும் வெள்ளவத்தை கால்வாய் போன்ற எந்த ஒரு வாய்க்காலின் ஊடாகவும் முதலைகளுக்கு கடலுக்குள் நுழைய முடியும் அதேபோன்று இந்த வாய்க்காலின் ஊடாக தரைக்கு வரமுடியும். 

"கடலை அவதானிக்க நாம் வனவிலங்கு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளோம்.

அவசர நிலைமைகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆயத்தமாக உள்ளது. முதலைகளை பிடித்தவுடன் நாங்கள் வனவிலங்கு பாதுகாப்பிடங்கள் அல்லது நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களில் விடுகின்றோம்.

சிலவேளைகளில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை பிடித்துச் செல்வார்கள். பொதுமக்கள் பிடித்து கொடுக்கும் முதலைகளையும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு சென்று விடுவிப்பார்கள். நாம் இதுவரை நன்னீர் முதலைகளையே விடுவித்துள்ளோம். உவர்நீர் முதலைகள் இதுவரை நாம் பிடித்து விடுவிக்கவில்லை.

இந்த முதலைகளில் உவர்நீர் முதலைகளே மிகவும் ரெளத்திரமானவை. ஆனால் இலங்கையில் அதிகமாக நன்னீர் முதலைகளே காணப்படுகின்றன" என்கிறார்  வனவிலங்கு திணைக்களத்தின் பிரசார பிரிவின் தலைவர் ஹசினி சரத்சந்திர.   முதலைக்கு பலியான சோமசிறி பீரிஸின் இறுதி சடங்குகள் கடந்த 6ஆம் திகதி நடைபெற்றது.  அபூர்வமாக முதலை ஒன்று மனிதனை இரையாக்கும் பொழுது அது பற்றி மிகவும் பெரிதாக கதைப்பார்கள். முதலையை பிடித்துக் கொண்டு செல்லும் விதம் பற்றி ஊடகங்களில் பிரசாரம் செய்வார்கள்.

ஆனால் இது முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டிய விடயம் அல்ல. முதலையின் பெருக்கம் முதலைகள் நடமாடும் பிரதேசங்கள் என்பவற்றை கண்காணிப்பது அவசியம்.

ஹர்ஷா சுகததாச
தமிழில்: வீ.ஆர். வயலட்

Comments