வரலாற்றுக் காலம் தொடக்கம் தொடரும் இருதரப்பு நட்புறவு | தினகரன் வாரமஞ்சரி

வரலாற்றுக் காலம் தொடக்கம் தொடரும் இருதரப்பு நட்புறவு

ஒரு நாட்டினுடைய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே அந்நாடு ஏனையநாடுகளுடன் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புடன்செயற்படும். இந்தக் கொள்கை ஒவ்வொரு நாட்டுக்கும் அமைய வேறுபடுவதுடன், பூகோள அமைவிடமும் வெளியுறவுகொள்கையில் தாக்கம் செலுத்தும் காரணியாக அமைந்து விடுகிறது. இந்து சமுத்திரத்தின் சர்வதேச கப்பல் பாதையில் இலங்கை அமைந்திருப்பதால் பல்வேறு நாடுகள் நட்புப்பாராட்டுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக இலங்கையுடன் நெருக்கமானஉறவுகளைப் பேணி வரும் நாடுகளில் ஒன்றாக சீனா அமைந்து விட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வெங்க் யீ தலைமையிலான உயர்மட்டக் குழுவினரின் விஜயம் அமைந்திருந்தது. குறித்த உயர்மட்டக்குழு உலக நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் ஒரு அங்கமாக கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து இவ்விஜயத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

24மணி நேரத்திற்கும் குறைவான தனது இலங்கைச் சுற்றுப் பயணத்தின் போது சீன வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தினார், அத்துடன், சீன நிதியுதவியுடன் கூடிய கொழும்பு துறைமுக நகரத் திட்டப் பகுதிக்கு செல்லும் பொதுநடைபாதையான மெரினா உலாவுப் பாதையையும் அவர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்வது சீன வெளிவிவகார அமைச்சர்களுக்கு வழமை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். ஆபிரிக்க விஜயத்தைத் தொடர்ந்து சீன-_ மாலைதீவு உறவுகளின் 50வது வருட பூரத்தியை முன்னிட்டு மாலைதீவுக்குச் சென்றதாகவும், இலங்கை_-சீன அரிசி ஒப்பந்தத்தின் 65வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் அப்பேச்சாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

1952இல் அப்போதைய டட்லி சேனாநாயக்க அரசாங்கம் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் சீனாவுடன் அரிசிக்கு ரப்பரைப் பரிமாறிக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரப்பர்_-அரிசி ஒப்பந்தம்' இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை மற்றும் வெற்றிகரமான வர்த்தக ஒப்பந்தமாக பரவலாகப் பாராட்டப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில், இலங்கை அந்நியச் செலாவணிக்குத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது. கொவிட் -19க்கு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடன் திருப்பிச் செலுத்துதலை மறுசீரமைப்பது குறித்து சீன உயர்மட்டத் தூதுக்குழுவினருடனான சந்திப்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருந்தார். சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு சலுகை வர்த்தகக் கடன் திட்டம் தொடங்கப்பட்டால் அது உள்ளூர் கைத்தொழில்களை சீராக இயங்கச் செய்யும் என்பது பற்றியெல்லாம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேநேரம், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு சீன தூதுக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், 'உலகிற்கு மேலும் சாதகமான சமிக்ஞைகளை அனுப்பவும், பங்களிக்கவும் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தி' பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்கும் உதவுகிறது. இது எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்காது மற்றும் எந்த மூன்றாம் தரப்பினரும் தலையிடக் கூடாது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அனைத்து சுற்று ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய பரஸ்பர நம்பிக்கை ஆகியவை பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேர்மறையான ஆற்றலை செலுத்தியுள்ளன என்ற விடயத்தை சீன உயர்மட்டத் தூதுக்குழு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்ததாக சீனத் தூதுரகம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி திட்டத்திற்கான மேலதிக ஒத்துழைப்பு, துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பது, சீனாவுக்கான இலங்கை ஏற்றுமதிகளை அதிகரிப்பது மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக பௌத்த உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இச்சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இருதரப்புச் சந்திப்புக்களைத் தொடர்ந்து கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000வீடுகள், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் மறுசீரமைப்பு மற்றும் சிறுநீரக நோய்ப் பரிசோதனைகளுக்கான அம்பியூலன்ஸ்கள் போன்றவற்றுக்கான 800மில்லியன் பெறுமதியான மானியம் குறித்த நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

சீன உயர்மட்டத் தூதுக்குழுவினர் இலங்கை வருவதற்கு முன்னர் சர்ச்சைக்குரிய உரக் கொள்வனவுக்காக சீன நிறுவனத்துக்கு மக்கள் வங்கியின் ஊடாக 6.9மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்தது. உரக்கப்பல் விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் சிறியதொரு மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்த போதும், இவ்விடயம் தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை அந்நிய செலாவணிக் கையிருப்புப் பற்றாக்குறையால் உலக நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கும் நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் விஜயம் அமைந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறாமல் நட்பு நாடுகளிடம் உதவியைக் கோருவதற்கான முயற்சிகளில் நிதி அமைச்சர் இறங்கியிருக்கும் நிலையில், இலங்கை, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பியுள்ளது.

பி.ஹர்ஷன்

Comments