![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/16/a32.jpg?itok=M_46KAds)
மன்னார் மாவட்ட மக்களால் அதிகளவாக அருவருக்கப்படும் விலங்காகவும் அவமதிக்கப்படும் விலங்காகவும் விளங்குவது கழுதைகளே! ஆகும்.
ஏனைய மாவட்டங்களில் (மன்னார் கழுதைகள்) என மன்னார் மாவட்டத்தை அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசித்தி பெற்றவை இக் கழுதைகள்.
மன்னாரில் உள்ள பிரதான வீதிகள் உள்ளடங்களாக அனைத்து இடங்களிலும் உடனடியாக அடையாளம் காணக்கூடிய விலங்காக கழுதைகள் விளங்குகின்றன.
வீதிகளில் வீசப்படும் பொலித்தீன்களையும், குப்பைகளையும் உண்டு வாழும் இவ் விலங்கின் பொருளாதார மதிப்பு மன்னார் மக்களுக்கு புரியாமல் போனது கவலையே. கழுதை சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்றது.
கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் ஏனைய விலங்குகளை விட அதிகமாகும். எனவே இவை கரடு முரடான பகுதிகளில் மிகுந்த சுமைகளை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 100சென்றி மீற்றர் முதல் 142சென்றி மீற்றர் உயரம் வரை வளரக்கூடியவை. ஆனாலும் வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 90இல் இருந்து 142செ.மீ உயரம் வரை வளரக் கூடியவை. பொதுவாக கழுதைகள் மிதமான பாலை நிலங்கள் மற்றும் வறண்ட வெப்பம் நிறந்த பகுதிகளில் வாழக் கூடியவை.
அதை விட இவை குதிரைகளை விட குறைவான உணவையே உட்கொள்கிறது. பல நாடுகளில் தற்போது வரை கழுதைகளை பயன்படுத்தி கட்டட வேலைகள், போக்குவரத்து, எனப் பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில நாடுகளில் தற்போது வரை திருமணத்தின் போது கழுதைகள் சீதனமாக வழங்கப்படும் வழக்கமும் காணப்படுகின்றது.
பண்டைய கால மத சடங்குகளுக்கும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளரான கிளியோபட்ரா தனது அழகை பராமரிக்க கழுதைப் பாலில் குளிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விலங்குகளில் கழுதை மிகவும் புத்திசாலியான விலங்காகவும் பண்டைய காலங்களில் கருதப்பட்டது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக கழுதை பால் குறைந்த புரதமும் கொழுப்பும் காணப்படுவதுடன் லக்டோஸும் கொண்டது என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு வேளாண்மை ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் கழுதை பாலில், விற்றமின் A,B-1,B-2,B-6விற்றமின் D விற்றமின் E உள்ளது. கழுதை பாலில் இருந்து தயாரிக்கப்படும் சோப், கிறீம் மற்றும் இதர பொருட்களுக்கு சில நாடுகளில் நல்ல சந்தை மதிப்பு உள்ளமை சிறப்பம்சமாகும்.
அதே நேரம் கழுதைப்பால் அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ துறைக்கு பயன் படுத்தப்படுகின்றது. ஏனெனில் கழுதைப்பால் உடலில் காணப்படும் செல்களை குணப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதே நேரம் கழுதை பாலின் சந்தை மதிப்பு லீற்றருக்கு 12 ஆயிரம் தொடக்கம் 20ஆயிரம் வரை இலங்கை மதிப்பில் கணிப்பிட கூடியதாக உள்ளது. இவ்வாறான பின்னணியில் மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக பரவல் அடைந்திருந்த கழுதைகளின் எண்ணிக்கை அண்மை காலமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பராமரிப்பற்ற தன்மை விபத்துக்கள்,உணவு இன்மை,நோய்த்தாக்கம் உட்பட பல காரணங்களால் இந்த கழுதைகளின் இனம் பெருக்கம் மற்றும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் கழுதைகளுக்கு புனர்வாழ்வளிக்கும் முகமாகவும் அவற்றின் ஊடாக பயனுள்ள கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் ஓலைத்தொடுவாய் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் பலரையும் கவர்ந்துள்ளது.மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் கழுதைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவைகளை பராமரிப்பதற்கான மருத்துவமனை ஒன்றும் அதன் அருகில் கழுதைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு 5வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.
இந் நிலையத்தின் ஊடாக மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவது டன் அவ்வாறான காயமடைந்த கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் திட்டமும் மேற்கொள்ளப்படுகின்றது.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கழுதைகள் தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கக்கூடிய கற்றல் நிலையம் ஒன்றும் இந் நிலையத்தில் செயற்பட்டு வருகின்றது.
ஆறு வகையான இனங்களை சேர்ந்த கழுதைகள் இங்கு பராமரிக்கப்படுவதுடன் இங்கு பயிற்றுவிக்கப்பட்ட கழுதைகளை கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் அவதானிக்கத்தக்கது.
கழுதைகள் அதிகம் காணப்படுவதால் மன்னாரில் தற்போதுவரை கழுதைகள் புறக்கணிக்கப்பட்ட விலங்காகவே கருதப்படுகிறது. அவற்றை பயனுள்ள விலங்காக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளா விடத்து புகைப்படங்களிலே கழுதைகளை எமது எதிர்கால சந்ததியினர் காண வேண்டிய நிலை வரும் என்பதே நிதர்சனம்.
மன்னார்
எஸ். றொசேரியன் லெம்பேட்