![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/23/a18.jpg?itok=MM3Atu9r)
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பெல்வத்த பால்மாவிற்கு சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தனியாருக்குச் சொந்தமான பெல்வத்த நிறுவனத்தினால் பெல்வத்த முழு ஆடைப்பால்மா, வெண்ணெய், யோகட், நெய் மற்றும் பல்வேறு சுவைகளிலான ஐஸ்கிறீம் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெல்வத்தை பால்மாவை “அபேம கிரி” எனக்கூறி வாடிக்கையாளர்கள் வாங்குவதை கண்டிருக்கிறேன். பெலவத்த பாலைப்பருகும்போது அதன் சுவை அதன் உற்பத்தி தரத்தை உறுதி செய்யக்கூடியதாக இருக்கும். இந்த பால்மா உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பெலவத்த கிராமத்தின் பெயரிலேயே பால்உற்பத்தி தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இலங்கையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு வந்ததன் பின்னரே பெல்வத்தை பால்மாவின் அருமையை நம்மவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இலங்கையைத் தளமாகக் கொண்ட இரண்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெல்வத்தை நிறுவனம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமித்து பல்வேறு வகையான பால் உற்பத்திகளை மேற்கொண்டு வருகிறது. 2006ம் ஆண்டு பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2011இல் பால்மா உற்பத்தியை தொடக்கி தற்போது பெல்வத்த முழு ஆடைப்பால்மா, வெண்ணெய், யோகட், நெய் மற்றும் பல்வேறு சுவைகளிலான ஐஸ்கிறீம் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் 400பேர் பணியாற்றுகிறார்கள். இதில் உற்பத்தி, பொதிசெய்தல் மற்றும் விநியோகப்பிரிவினரும் உள்ளடங்குகிறார்கள்.
"நியூஸிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலிருந்து மட்டுமே பால்மா உற்பத்தி செய்யமுடியும் என்ற மரபை மாற்றி பெல்வத்தையில் பால் உற்பத்தி தொழிற்சாலையை தொடக்கியவர் தலைவர் ஆரியசீலி விக்ரமநாயக்க. பெல்வத்த பால் விநியோகச் சங்கிலியானது மிகவிரிவானதாகும். அண்மையில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் பெல்வத்த தொழிற்சாலையில் இருந்து எவ்விதத் தடங்கலுமின்றி பால்மா விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம்" என்கிறார் பிரபாஷ் லியனபத்திரன.
"நாட்டில் 250மெட்ரிக் தொன் பால்மா நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. ஆனால் எம்மால் மாதத்திற்கு 400மெட்ரிக் தொன் பால்மாவையே உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் பால் உற்பத்தியானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 12லட்சம் லீற்றர் பால் உற்பத்தியாகிறது. அவற்றில் 2லட்சம் லீற்றர் பாலையே எம்மால் கொள்வனவு செய்ய முடிகிறது. இந்த பாலில் இருந்தே நாளொன்றுக்கு 35மெட்ரிக் தொன் வெண்ணெயும், 14மெட்ரிக் தொன் ஐஸ்கிறீமும் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் பால்மா தேவையை பூர்த்தி செய்வதானால் பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்க வேண்டும். இதனை தனியே அரசினால் மட்டும் செய்ய முடியாது தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்" என்று கூறுகிறார் பிரபாஷ்.
பெல்வத்தை தொழிற்சாலை மூன்று பால்மா உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 80,000லீற்றர் பாலை பதனிடக்கூடிய திறன் கொண்டவை. மணித்தியாலத்திற்கு 550கிலோ ஆடைப் பால்மாவை உற்பத்தி செய்யக்கூடியவை. உலர்த்திகள் மூலம் தினமும் 30தொன் பால்மாவை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ பால்மாவை உற்பத்தி செய்ய 8.4லீற்றர் திரவபால் தேவைப்படுகிறது. பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் பால்மா உற்பத்தியை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது இந்த நிறுவனம் என்றார் பிரபாஷ்.
பெல்வத்தை தொழிற்சாலை புத்தம் புதிய பாலை மாத்திரம் பயன்படுத்துவதால், அவை மலிவானதாக அமைவதில்லை. சிறந்த பால்பொருட்களை சிறந்த மூலப்பொருளான பாலில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியும். அந்தவகையில் பெல்வத்தவும் அதன் பால் உற்பத்திச் சங்கிலியில் மிகச்சிறந்ததையே தெரிவுசெய்து வழங்குகின்றது. பால் மிகவும் போஷனை நிறைந்த ஆகாரம். பிறந்த குழந்தைகள் முதல் பெரியோர் வரைக்கும் பால் மிகவும் அவசியமானது. அதுபோல தூய பாலானது விரைவில் பழுதடையும் தன்மையைக் கொண்டுள்ளது.
பெல்வத்தை உற்பத்திப் பொருட்களுக்கான மூலாதாரமே பால் விநியோகச் சங்கிலி, இலங்கையில் உள்ள வலுவான 6,500பால் பண்ணையாளர்களை இச்சங்கிலி உள்ளடக்கியுள்ளது. அவர்களின் வாழ்வாதாரமும் பெல்வத்தை நிறுவனத்தை நேரடியாக நம்பியுள்ளது. ஊவா, கிழக்கு, மத்திய, வடமேல், மாகாணங்களில் 50பால் சேகரிப்பு மையங்களின் வலையமைப்பை நிறுவனம் கொண்டுள்ளது. இதன்மூலம் மாதாந்தம் 4.5மில்லியன் லீற்றர் புத்தம்புதிய பால் கிடைக்கிறது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நிறுவனம் பாலை விநியோகிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 3.18பில்லியன் ரூபாவை கொடுப்பனவாக செலுத்தி வந்துள்ளது
கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளிடமிருந்து தினசரி கொள்வனவு செய்யப்படும் பாலானது, கிராம சங்கங்களால் சேகரிக்கப்பட்டு, அவை பாலின் புத்துணர்ச்சி மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வெப்பநிலையில் பேணப்படும் திறன்கொண்ட, பால்பவுசர்களில் நிரப்பப்பட்டு, அவை PDIL குளிர்விக்கும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
பால் சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்படும் பாலானது, குளிர்வித்தல் - விநியோகச்சங்கிலி தொழில்நுட்பம் மற்றும் வெப்ப பாதுகாப்பு தொகுதிகளுக்கு கிடைத்தவுடன், அது நான்கு பாகை செல்சியஸிற்கு உடனடியாக குளிர்விக்கின்றன. பால் சேகரிப்பு மையங்களில் இருந்து, விசேட பாதுகாப்பு அம்சங்களுடனான பால் பவுசர்கள், குளிரூட்டப்பட்ட பாலை புத்தளவில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றன. அதனைத் தொடர்ந்து குளிர்விக்கப்பட்ட பால் குளிர்ந்தபால், தொழிற்சாலையின் சிலிண்டர் தொட்டிக்குள் சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, பால்பவுடரை உருவாக்குவதை உறுதிசெய்யும் அளவிலான கொழுப்பு மற்றும் திண்ம கொழுப்பு அற்ற (Solid-Not-Fat) SNF மட்டத்தை பேணி அது “தரப்படுத்தப்படும்“. தொட்டியிலுள்ள பாலை தரப்படுத்திய பின்னர், விசிறி உலர்த்தும் ஆலையானது பாலிலுள்ள நீர்த்தன்மையை ஆவியாக்கி, பால்மாவை பிரித்தெடுக்கிறது. இந்த உற்பத்திச் சங்கிலி முழுவதும், உயர் தரத்தில் பேணப்படுகிறது. பெல்வத்தவினால் நூறுவீத தர உத்தரவாதம் பேணப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
சுய கைத்தொழில் முயற்சிகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படாமையே நாடு அபிவிருத்தியில் இன்னமும் பின்தங்கியிருப்பதற்கான பிரதான காரணமாகும். கால்நடை வளர்ப்பில் நீண்டகாலத் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமையால் அனைத்து வளங்களும் நிறைந்த இந்நாட்டில் பால்மாவிற்காக வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் பால்மா தேவையைப் புூர்த்திசெய்வதற்கு நீண்டகாலத் திட்டம் அவசியம். படித்த இளைஞர்கள் மத்தியில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். ஆர்வமுள்ள வர்களுக்கு கடன் உதவிகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு இல்லாமல் எவ்வித அபிவிருத்தியையும் எதிர்பார்க்க முடியாது.
பெலவத்தையைப் பார்த்து திரும்பிய என்னில் உதித்த உண்மை இது.
பி. வீரசிங்கம்