தோழர் சிவகுமார்: பிரளயத்தினூடாக பயணித்த ஓர் அற்புதம்! | தினகரன் வாரமஞ்சரி

தோழர் சிவகுமார்: பிரளயத்தினூடாக பயணித்த ஓர் அற்புதம்!

37ஆண்டுகளாக சமூக சமத்துவ பெருங்கனவுடனும் இடையறாத தேடலுமாக திரிந்த உடுத்துறை, பச்சிலை பள்ளியிலிருந்து வந்த இளைஞரின் பயணம் எதிர்பாரா வகையில் முற்றுப் பெற்றுள்ளது.

தஞ்சை, குடந்தை, சேலம் சென்னை இலங்கையின் வடக்கு கிழக்கில் நீள அகலங்கள் என விரிந்த தோழரின் பயணம். மிக நீண்ட இருள் சூழ்ந்த ஜனநாயக விரோத காலகட்டம் ஒன்றில் மிக அவசியப்பட்டிருந்தது. அவரால் வழிகாட்டபட்டவர்கள் ஊடகம் இலக்கியம் சமூக, அரசியல் தளங்களில் செயற்படுகிறார்கள். ஜனநாயக விரோத அரசியல் சமூக இலக்கிய செயற்பாடுகளுக்கு எதிராக அவருடைய பயணம் எதிர்நீச்சல் ஆக இருந்தது.

மானிட நேயம் அவரது சமூக இலக்கிய பயணத்தின் அடிநாதமாக இருந்தது. எழுத்திலும் பேச்சிலும் கவிதையிலும் பத்திரிகை சஞ்சிகை வடிவமைப்பதிலும் அவரின் நேர்த்தி மிளிரும். அசாதாரண ஆளுமையும் தன்னடக்கமுமாக வாழ்ந்தவர் தோழர் சிவகுமார்.

முற்போக்கு இலக்கிய அரசியல் சமூக தளங்களிலிருந்து கம்பன் கழகம் வரை செயற்படும் ஆளுமை அவரிடம் இருந்தது பெரும்பாலும் மாற்று ஊடகங்களே அவரை முன் நிறுத்தின. கலை இலக்கிய தளங்களில் உருவாகும் புதிய புதிய கருத்துக்களை அவர் தோழர்களுக்கும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சமூக செயற்பாட்டாளராக, பரந்த வாசகனாக, எழுத்தாளராக, விமர்சகராக, பத்திரிகை ஆசிரியராக, வானொலி இதர ஊடகங்களின் செயற்பாட்டாளராக, புத்தக வெளியீடு கருத்தரங்குகளின் ஆளுமைமிக்க கருத்தாளராக, அறிவும் தர்க்கமும் மிளிரும் உரையாளராக அறிவொளி வீசிய தோழரையே நாம் இழந்திருக்கிறோம்.

தத்துவம், இலக்கியம், ஓயாத தேடல் கொண்ட ஒரு அறிவுக் கருவூலமாக திகழ்ந்தார். மார்க்சியம் பொதுவுடைமை, பெரியாரியம், சாதி ஒடுக்குமுறை பெண்ணடிமைத்தனம் மொழியின் அதிகாரம் பின்நவீனத்துவம் என அவரது பார்வை விரிந்து கிடந்தது.

தோழர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் அவரும் ஒருவராக மிக நீண்ட பயணம் செய்தவர். ஜனநாயக விரோத அரசியலுக்கு மாற்றாக சமூக சகோதரத்துவத்தை, தோழமை நட்பை நேசித்தவர். அரசியல் இலக்கியத் தளங்களில் ஜனநாயக விரோதம் பாசிசம் பற்றிய எச்சரிக்கை உணர்வு எப்போதும் அவரது பிரக்ஞையில் இருந்து வந்தது.

அவரது தமிழக - ஈழ இலக்கிய தரிசனம் ஆழமானது. எமது சமுதாயத்தில் அரிதிலும் அரிதான சமூக அரசியல் இலக்கிய செயற்பாட்டாளரையே நாம் இழந்துள்ளோம். "சுடர்மிகு அறிவுடன் திகழ்ந்தவரை கொடிய நோய் அகாலமாக அவர் உயிரை பறித்து சென்றிருக்கிறது.

எனினும் கருத்தியல் சிந்தனைத் தாக்கம் தோழர்கள் மத்தியில் மிக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்.

தோழர் சிவகுமார் -அமீன் -என்ற எமது காலத்தின்ஆளுமை விரிவாக தொடர்ந்து பேசப்பட வேண்டும். "நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்  இமைப்பொழுதும் சோராதிருத்தல் "என்ற அந்த மகாகவி போல் வாழ முனைந்த சிவகுமாருக்கு தன் முழு ஒத்துழைப்பையும், இணையற்ற அன்பையும் வழங்கி அரணாக நின்றவர் அவர் துணைவியார் வாசுகி. அவரது குடும்பத்தவர்கள் வெற்றிகரமான தருணங்களிலும் துன்பகரமான தருணங்களிலும் உறுதுணையாக நின்றார்கள். தற்போது அவர் மறைந்து பத்து நாட்களுக்குள் அவரின் தாயாரின் மறைவுச் செய்தியும் வந்திருக்கிறது. தாங்கொணாத் துயருடன் எம் பிரியாவிடை. எம் இதய அஞ்சலிகள்!

தி.சிறிதரன்

Comments