![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a14.jpg?itok=N3smzL_A)
பொருளாதாரப் பின்னடைவிலிருந்து நாட்டை மீட்கும் வகையில்அந்நிய செலாவணியின் வரத்து அதிகரித்திருப்பதாக மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் உறுதியளித்துள்ளபோதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுச் சுமை இன்னும் நீங்கவில்லையென்றே கூற வேண்டும். அந்நிய செலாவணியின் பற்றாக்குறையைசமாளித்து அத்தியாவசியப் பொருட்கள்விநியோகம் மற்றும் சேவைகளைத் தடையின்றி பேணுவதற்குஅரசாங்கம் போராடி வரும்சூழலில், மின்சார உற்பத்திதொடர்பான புதிய பிரச்சினைஉருவெடுத்துள்ளது.
இந்தப் புதிய நெருக்கடியை சமாளிப்பதற்கு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் வலு சக்தி அமைச்சர் கம்மன்பில ஆகியோர் ஒருவருடன் ஒருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதால், பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு பரஸ்பரம் உதவி செய்கின்றனர். இருந்த போதும், டொலர் பற்றாக்குறையின் காரணமாக உருவான நிலைமையினால் இரு அமைச்சர்களும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியுள்ளது.
நாட்டில் தற்போது வரட்சியான காலநிலை நிலவி வருவதால், நீர்மின் உற்பத்தி சுமார் 25சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், எதிர்வரும் வாரங்களில் இந்த நிலைமை மோசமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மின் உற்பத்தி குறைந்திருப்பதால், அனல்மின்நிலையங்களைக் கொண்டே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலைக்கு இலங்கை மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது. எனினும், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் போதுமான எரிபொருள் இருப்பு மின்சாரசபையிடம் இல்லாமையால் நிலைமை சிக்கலடைந்துள்ளது. எரிபொருள் விநியோகத்துக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை நம்பியிருக்கும் நிலைமை தோன்றியுள்ளது.
இருந்த போதும் டொலர் பற்றாக்குறையின் காரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதாவது எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்களை திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இருப்பில் உள்ள எரிபொருளை வாகனங்களின் தேவை, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள் போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சமாளிக்க வேண்டியேற்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலை 146ரூபாவிற்குக் கொள்வனவு செய்து இலங்கை மின்சார சபைக்கு அதனை 121ரூபாவுக்கு மானிய விலையில் வழங்க வேண்டியுள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மதிப்பீட்டின்படி நாட்டின் மாதமொன்றுக்கான எரிபொருள் இறக்குமதிக்கான கட்டணம் 450மில்லியன் ரூபாவாகும் (ஜனவரிக்குரியது).
வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் தங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால் அமைச்சர்களான லொக்குகே மற்றும் கம்மன்பில ஆகியோர் அதிகரித்து வரும் மின்சார நெருக்கடியைக் குறைப்பதற்கு தற்காலிகமாக மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான யோசனைகள் பலவற்றை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் எரிசக்தி அமைச்சர் கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், துறைமுகத்திற்கு வந்துள்ள டீசல் ஏற்றுமதிக்கான நிதியை வழங்குமாறு மத்திய வங்கிக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாகத் தெரிவித்தார். மின்வெட்டைத் தவிர்ப்பதற்கான உடனடி ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் விதமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்த வேண்டிய 93பில்லியன் ரூபா கடனுக்கான பணத்தை வழங்குமாறு ஜனாதிபதி இலங்கை மத்திய வங்கிக்குப் பணிப்புரை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 500மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இயற்கையில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் தோன்றும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படுவது காலாகாலம் இடம்பெற்று வருகிறது. இது தற்போதைய அரசாங்க காலத்தில் மாத்திரம் உரியதொரு குறைபாடு அல்ல. இருந்த போதும் டொலர் பற்றாக்குறைக்கு நாடு முகங்கொடுத்திருப்பதால் அனல்மின் உற்பத்திக்கான எரிபொருள் போதிய கையிருப்பில் இல்லாமையே தற்பொழுது நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினையாகும்.
இருந்த போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க சக்திவலு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இருந்த போதும் சூரியப்படல்களைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்குத் தனியார் துறையின் முதலீடுகள் பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரியஒளி கிடைக்கும் என்பதால் சூரியப் படல்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம். இருந்த போதும் மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் புதுப்பிக்கத்தக்க சக்திவலு விடயத்தில் அதிக அக்கறை காண்பிப்பதாகத் தெரியவில்லை. அனல் மின்உற்பத்தி நிலையங்கள் குறித்தே அவர்கள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களிலிருந்தும் ஒத்துழைப்பு போதியளவு கிடைக்கவில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக சேதன உரப்பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் உரிய பலனை அளிக்காமல் இருப்பதைக் குறிப்பிடலாம். அத்திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்புக்களின் ஒத்துழைப்பு இல்லாததையும் குறிப்பிடலாம்.
விவசாயம் மற்றும் மின் உற்பத்தியை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவது என்பது உயர்வான செயலாகும். விவசாயத்திற்கு வேளாண் இரசாயனங்கள் இருப்பது போல், மின் உற்பத்திக்கும் நிலக்கரி உள்ளது. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாத உணவை எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் விவசாய இரசாயனங்கள் மீதான தடைகளால் உணவுப் பற்றாக்குறையை எதிர்த்துப் போராட யாரும் தயாராக இல்லை. அதேபோல, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிலக்கரி எரிப்பதை யாரும் விரும்புவதில்லை, ஆனால் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் தேவை.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த இரண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு நடைமுறை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைய எதிர்க் கட்சியினர் தமது அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் உண்மை.
பி.ஹர்ஷன்