மனிதனின் துடிப்பு -பன்றியின் பையில் | தினகரன் வாரமஞ்சரி

மனிதனின் துடிப்பு -பன்றியின் பையில்

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழக, க்ரூட் ஷூர் மருத்துவமனையில் (Groote Schuur Hospital), 1967ஆம் ஆண்டு கிறிஸ்டியன் பெர்னாட் (Christian Bernard) எனும்   சத்திரசிகிச்சை நிபுணரால் நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சையே (Heart Trans Plant Surgery) உலகின் முதல் மனித இதயமாற்று சத்திர சிகிச்சையாக பதிவாகி உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக 1969ம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வைத்திய நிபுணர் டென்டன் ஆர்தர் கூலி (Dr. Denton Arthur Cooley) என்பவரால் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்ட முதல் செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சை, அதன் பின்னரான பாரிய, வியத்தகு மருத்துவ, விஞ்ஞான, அறிவியல் வளர்ச்சி, இன்று மிருக இனமான பன்றியின் இருதயத்தை மனிதனுக்கு பொருத்திய மற்றொரு சாதனையை வெற்றிகரமாக அரங்கேற்றி உள்ளது , 

அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண மேரி லாண்ட் பல்கலைக்கழக வைத்திய சாலையில் (University Hospital of Maryland) இதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட 57வயதுடைய டேவிட் பென்னட் என்பவருக்கே பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட இந்த சத்திர சிகிச்சை சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

உலகின் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிலர் இணைந்து, ஏற்படுத்திய இந்த சாதனையானது, உறுப்புகளின் மாற்றீடு அவசியமான மனித நோயாளிகளுக்கு விலங்குகளின் உறுப்புகளை வழங்க முடியும் என்கிற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளது இன்றைய மருத்துவ உலகிற்கு.

உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் பல தசாப்தங்களாக விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு இடமாற்றம் செய்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் இந்த பன்றியின் இதய மாற்றீட்டை வெற்றியின் முக்கியபடி என்றே கொள்ள வேண்டும். 

மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பென்னட் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக ஒழுங்கற்ற இதயத் துடிப்புடன் இருதய ஆதரவு தேவைப்படும் நிலையில் இருந்தார் என சொல்லப்படுகிறது. மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட பன்றியின் இதயமானது பல மரபணு மாற்றங்களுடனேயே பென்னட்டிற்கு பொருத்தப்பட்டதாக தெரிவித்தனர் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிபுணர்கள். 

அறுவைசிகிச்சை நன்றாக நடந்தது எனவும் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது எனவும் தெரிவித்த குழுவின் தலைவர் Dr.மொஹிதீன்,  தனது குழுவினர் பென்னட்டின் நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் அவரது இதயத்தின் செயல்திறனையும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

பென்னட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த செயல்முறை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், மேலும் பல நாடுகளின் மருத்துவ குழுக்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சைக்கு முயற்சிக்க முடியும் எனவும் ஆனால் ஒரு நோயாளி பன்றியின் உறுப்புக்கு தகுதியுடையவர் என்பதை வரையறுக்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஜெர்மி சாப்மேன் கூறினார்.  

மேலும், இதுபோன்ற மாற்று சிகிச்சைக்கு முனையும் மருத்துவர்கள் பன்றி இதயத்தின் உடலியலைப் படிக்க வேண்டும் எனவும் அது மனித இதயத்தின் அதே விகிதத்தில் துடிக்குமா - மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆரோக்கியமான மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவார்களா என்பன போன்ற விடயங்களில் மிக நுட்பமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 8மணி நேரம் எடுத்தது எனவும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின்னர் தற்போது வாழ்க்கை ஆதரவுகள் (life support) அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் பென்னட் நலமுடன் இருக்கிறார் என வும் வைத்தியசாலையின் பிந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

17-ம் நூற்றாண்டிலிருந்தே முன்னெடுக்கப் பட்டுவரும் விலங்கினங்களின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்தும் முயற்சிகளின் ஆரம்பமாக செம்மறி ஆட்டின் ரத்தத்தை சிறுவன் ஒருவனுக்கு செலுத்திய இரத்த மாற்று நிகழ்வு பிரான்ஸ் நாட்டில் முதன் முதலாக பதிவாகியது. 

பின்னர் 19-ம் நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் தோல் பகுதிகளை மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1838-இல் முதன்முறையாக பன்றியின் விழிவெண்படலம் (Cornea)) மனிதன் ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 1960-இல் குரங்குகளின் சிறுநீரகத்தை மனிதர்களுக்கு பொருத்தும் அறுவை மாற்று சிகிச்சையை மேற்கொண்டார் அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் (New Orleans) நகரத்தை சேர்ந்த ரீம்ட்ஸ்மா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவர். இவர் சோதனை நடாத்திய 13பேரில் ஒரே ஒருவர் மட்டுமே மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார். பின்னர் 1964-இல் மனிதக் குரங்கின் இதயம் மனிதன் ஒருவருக்குப் பொருத்தப்பட்டு அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1996-இல் பரூவா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவர், 32வயது பூர்னோ சைக்யா என்பவருக்கு பன்றியின் நுரையீரலையும், இதயத்தையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முற்பட்டு, அந்த நோயாளியும் இறந்தது மட்டுமல்லாது, முன் அனுமதி இல்லாமல் இந்த சோதனையை நடத்தியதற்காக மருத்துவர் பரூவா கைது செய்யப்பட்டு, தனது மருத்துவர் பட்டத்தையும் இழக்க நேர்ந்தது. இந்த தோல்வி நிகழ்வுதான் பன்றி ஒன்றின் இதயத்தை மனிதர்களுக்குப் பொருத்தும் முதல் முயற்சியாக பதியப்பட்டுள்ளது. 

மனித உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி அந்நிய உறுப்புக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால், பன்றிகளின் மரபணுக்கள் மாற்றப்பட்டே அவை பயன்படுத்தப் படுகின்றன. இதனால் அவை நிராகரிக்கப்படாமல் சரியாக வேலை செய்யும் என எதிர்பார்க்கிறது மருத்துவ உலகம்.  

ஏனைய விலங்கினங்களைவிட, பன்றியின் உறுப்புகள் மனித உறுப்புகளுடன் அதிகம் பொருந்துவதாக  கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்பட்டுள்ளதால், இதற்காகவே அமெரிக்க நிறுவனம் ஒன்று பண்ணை ஒன்றை ஏற்படுத்தி அதில் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளை வளர்க்கிறது. 

மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக விலங்கினங்களை பலியிடலாமா...? என்கிற மனிதாபிமான கேள்விக்கு, விலங்குகளைக் கொன்று மாமிசமாக உட்கொள்ளும்போது மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக விலங்குகளின் உறுப்புகளை பொருத்துவதில் தவறில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.  

அதேவேளை பன்றி உள்ளிட்ட விலங்கினங்களின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சியில் சில ஆபத்துகளும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எவ்வளவு காலத்திற்கு அந்த உறுப்புகள் மனித உடலில் செயல்படும் என்பதும். அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதும் தெரியாத நிலையிலேயே தற்போதைய மாற்றீட்டு அறுவை சிகிச்சையும் நடாத்தி முடிக்கப் பட்டுள்ளது.  

கோவை நந்தன்

Comments