![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a17.jpg?itok=mVSzMrxG)
இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய கோவிட் 19அலை ஒமிக்ரோன் பிறழ்வுகளோடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.நாளாந்தம் அதிகரித்துச் செல்லும்தொற்றாளர்களின் எண்ணிக்கைஇவ்வச்சத்திற்கு வலு சேர்க்கிறது.
தென்னிந்தியாவின் தமிழகத்தில் சமீபத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தம். இலங்கையில் கோவிட் 19இற்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பூஸ்டர் ஊசியை ஏற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் மூலம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
அண்மைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்று பரவிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் பூரண இயலளவில் பணியாளர்களை பணிக்கு அழைத்திருக்கும் நிலை தொற்றுப்பரவல் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. தடுப்பூசி ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்காது என சுகாதார தரப்பினர் பலதடவைகள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
தடுப்பூசியானது நோய் காரணமாக ஏற்படும் சிக்கல்களைக் குறைத்து மரணம் ஏற்படுவதைத் தடுக்கும் என்றே நம்பப்படுகிறது. நம்மில் பலர் மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றிவிட்டோம் தானே பிறகெதற்கு முகக் கவசம் அணிவது ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவது, கைகளைக் கழுவுவது என்று கேள்வி கேட்கின்றனர். படிப்பறிவற்ற பாமரர்கள் மட்டுமன்றி நன்கு படித்த உயர் பதவிகளில் உள்ள கனவான்களும் சீமாட்டிகளும் கூட அடக்கம்.
இந்நிலையில் தனிமனித ஒழுக்கமும் சுயபாதுகாப்பு நடவடிக்கைகளும் மாத்திரமே நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். ஆயினும் காரியாலயப் பணிகளில் ஈடுபடுவோர் இரட்டை முகக் கவசங்களை அணிந்து சுகாதார நடைமுறைகளைப் முறையாகப் பின்பற்றினாலும் கூட தேனீர் இடைவெளிகளின் போதும் மதிய போசன இடைவெளிகளின் போதும் முகக் கவசங்களை அகற்ற வேண்டியிருக்கிறது. இந்த இடங்களே நோய்த்தொற்று ஏற்படவாய்ப்பளிக்கும் கவலைக்குரிய சந்தர்ப்பங்களாக உள்ளன. அத்துடன் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பணியாளர்களால் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவது சாத்தியமில்லை.
இலங்கையின் புகையிரத மற்றும் பேருந்துப்போக்குவரத்து வசதிகள் அந்தளவுக்கு வளர்ச்சியடையவில்லை. அரசாங்கம் சட்டம் போட்டு அதைச் செயற்படுத்த முயற்சித்த போதிலும் நடைமுறையில் அது வெற்றிபெறும் சாத்தியமில்லை.
அதேவேளை நாடு டொலருக்கு கையேந்தி நிற்கும் இன்றைய நிலையில் இப்போது தான் உல்லசப்பயணிகளின் உள்வருகை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் கணிசமானளவு டொலர்களை ஈட்டி தற்போதைய நெருக்கடிகளிலிருந்து ஓரளவு ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் என்று பெரும் நம்பிக்கையில் இலங்கை இருக்கிறது.
இப்போது கோவிட் 19இன் இன்னும் ஒரு அலை நாட்டில் உருவானால் இந்த நம்பிக்கை புஸ்வாணமாகிப் போய்விடும். நாட்டில் நோய்த்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் உல்லாசிகளின் வருகை குறைவடையும். எனவேதான் இன்னும் ஒரு அலை நாட்டில் ஏற்படாமல் தடுப்பது இன்றைய சுழலில் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள இரட்டை நெருக்கடிகள் காரணமாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இலங்கை மின்சார சபையும் பெற்றோலியக் கூட்டத்தாபனமும் பொதுவெளியில் வெளியிடும் அறிக்கைகளைப் பார்க்கும் ஒருவருக்கு இவை இரண்டும் ஒரே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அரசு துறை நிறுவனங்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது. அமைச்சு மட்டத்தில் அதிகாரிகளால் மூடிய அறைகளுக்குள் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் முடிவுகளும் பொது வெளியில் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் குற்றஞ்சுமத்தி விமர்சித்து வெளிப்படுத்தப்படும்போது அரச நிருவாகமே அசிங்கப்பட்டு நிற்கிறது.
ஏற்கனவே விநியோகித்த எரிபொருளுக்கு இன்னும் காசு தரவில்லை. இதனால் மின்சார சபைக்கு எரிபொருள் தரமுடியாது என்று பெற்றோலிக் கூட்டுத்தாபனம் அறிக்கை விடுகிறது. எரிபொருள் கிடைக்காவிட்டால் அடுத்துவரும் நாட்களில் மின்சார உற்பத்தியை போதியளவில் மேற்கொள்ள முடியாது போவதால் மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று மின்சாரசபை அறிக்கை விடுகிறது. போதாக்குறைக்கு சட்டப்படி வேலை செய்கிறோம் என்று மின்சார சபை எந்திரிகள் பயமுறுத்துகிறார்கள்.
நாட்டில் மின்வெட்டு ஏற்பட அனுமதிக்கப்படாது என்று ஒரு சாராரும் மின்வெட்டு ஏற்படும் என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் தற்போது மின் வினியோகம் அடிக்கடி தடைப்படுகிறது. அது மின்வெட்டல்ல மின்சாரத்தடை என்று காரணங் கூறுகின்றனர். மசகெண்ணெய் வராதபடியால் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக பெற்றோலியத் தொழிற்துறைத் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்காலத்தில் வாகனங்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த பின்னர் கீழே கிடப்பவனை இன்னொருவரும் வந்து உதைப்பது போல இலங்கையின் நீரேந்து பகுதிகளில் இப்போது நிலவிவரும் வரட்சி மோசமாகி வருகிறது. இந்நிலை தொடருமாயின் மின்னுற்பத்திக்காக நீர்வழங்கலை மேற்கொள்ள முடியாதென தொடர்புடைய அமைச்சு ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராயப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது. எது எவ்வாறாயினும் இலங்கையின் மின்னுற்பத்தித் துறையானது பாரிய நெருக்கடியில் இருப்பதுவும் நாட்டுக்குத் தேவையானளவு மின்சாரத்தை வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளமையும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதன் அடுத்த கட்டமாக மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் தெளிவாகத் தெரிகின்றன. மின் கட்டண அதிகரிப்பு நாட்டின் சாதாரண மின் பாவனையாளரை மாத்திரமன்றி கைத்தொழிற்றுரையினரையே மிக மோசமாகப் பாதிக்கும். உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். இதனால் ஏற்கெனவே அதிகரித்துச் சென்றுள்ள பொருட்கள் சேவைகளின் விலைகள் மேலும் தீவிரமாக அதிகரிக்கும். சுருக்கமாகக் கூறுவதானால் பெற்றோலிய இறக்குமதி குறைவடைந்து மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் போதியளவில் கிடைக்காத பட்சத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்படும்.
மின்வெட்டு ஏற்பட்டால் இலங்கையின் தொழிற்றுறைகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு பொருள்விலைகள் சடுதியாக உயரும். உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரிக்கும்போது இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் விலைகள் உயரும். இதனால் வேறுநாடுகள் இலங்கையின் சந்தைகளை இலகுவாகக் கைப்பற்றிக்கொள்ளும் ஆபத்து நிலவுகிறது. எனவேதான் எப்பாடுபட்டாவது மின்சாரத்தை சீராக வழங்குவதும். அதன் கட்டணத்தை முறையாகப் பேணுவதும் அவசியமானது.
நீண்டகால அடிப்படையில் மாற்று சக்திவளங்களுக்கு நகர்வது முக்கியமானது குறிப்பாக சூரிய சக்திவளத்திற்கு மாறுவது பற்றி ஆராயவேண்டும். இலங்கைளில் சுூரிய கலத்தொகுதியொன்றை அமைப்பதற்கான செலவுகள் மிகமிக அதிகமாக உள்ளன. அவற்றை மிகக்குறைந்த செலவில் சாதாரண குடும்பங்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வழங்க அரசாங்கம் முயல வேண்டும். இவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள தனியுரிமை நீக்கப்படவேண்டும்.
இதுபோன்ற ஒரு மின்சாரப் பற்றாக்குறையை தென்னிந்தியாவின் தமிழ்நாடு சில காலங்களுக்கு முன்னர் எதிர்நோக்கியது. மத்தியதர வகுப்பினரின் வருமான அதிகரிப்பும் தொடர்ந்து மின்சாரத்திற்கு ஏற்பட்ட அதிகரித்த கேள்வியும் காரணமாக அங்கு நீண்டநேர மின்வெட்டுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டன. அதனால் தமிழ்நாட்டின் தொழில்துறைகள் மோசான பாதிப்புகளைச் சந்தித்தன. கூாடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் தொடங்கப்பட்ட பின்னரே மின்பற்றாக்குறைக்கு அங்கு தீர்வு காணப்பட்டது.
இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி டொலர் பற்றாக்குறை காரணமான ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலுங்கூட அதிகரித்தவரும் மின்சாரத்திற்கான கேள்வியைச் சமாளிக்க போதியளவு மின்னுற்பத்தி நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை. இது ஒரு புரையோடிப்போன நீண்டகாலப் பிரச்சினையாக மாறுமுன்னர் அப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காணவேண்டியது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகும்.
கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்