13 இன் பெறுமதி என்ன? | தினகரன் வாரமஞ்சரி

13 இன் பெறுமதி என்ன?

13என்பதே பிரச்சினைக்குரிய எண் என்பார்கள். அதை நிரூபிப்பதைப்போலவே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் உள்ளது. 1987இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13ஐ ஏற்றுக் கொள்வதில் தொடங்கிய நெருக்கடியானது அதை நடைமுறைப்படுத்துவது வரையில் 35ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இப்பொழுது இந்தப் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்குத்  தமிழ்த்தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கட்சிகள் சில கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பட்டபாடு கொஞ்சமல்ல. முதலில் மலையகக் கட்சிகளும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் தமிழ்க்கட்சிகளோடு இணைந்து இதைப்பற்றிப் பேசின. இறுதியில் மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் விலகி விட்டன. 13ஐ அப்படியே ஏற்றுக் கொள்வதில் இவர்களுக்குப் பிரச்சினை. அதனால் தமிழ்க்கட்சிகளில் ஒரு பகுதியினரே கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை மோடிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேவேளை இந்தப் 13ஏ தவறானது. இது தமிழர்களுடைய அரசியலுக்கும் உரிமைக்கும் வைக்கப்பட்ட சவப்பெட்டி – படு குழி -என்கின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இதை எதிர்த்து அவருடைய கட்சியான அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்  ஊர்திப் போராட்டமொன்றை ஆரம்பித்திருக்கிறது. இந்த ஊர்திகள் இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது வவுனியாவிலிருந்து நெடுங்கேணி வழியாக முல்லைத்தீவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இனி  அவை கிளிநொச்சிக்குச் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் போகும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இந்தப் 13இன் விளைவான மாகாணசபைக்கான தேர்தலில் தாம் – தம்முடைய கட்சி போட்டியிடுவோம் என்று கஜேந்திரகுமார் சொல்லியிருக்கிறார். இதற்கு அவர் ஒரு (சப்பைக்கட்டு) நியாயத்தையும் சொல்லியுள்ளார். அதாவது மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த பின்பு “இந்த மாகாணசபையில் எந்த அதிகாரமும் இல்லை” என்று பிரசித்தம் பண்ணப்போகிறாராம்.

இதைக் கேட்கும்போது உங்களுக்குச் சிரிப்பு வரலாம். கூடவே பலருக்கும் கோபமும் ஏற்படக் கூடும்.

ஏனென்றால், 1987இல் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டபோதே அதனைப் புலிகள் எதிர்த்தனர்.  அதற்குப் பிறகு மாகாணசபை முறையை நிராகரித்தும் இந்தியப் படைகளை எதிர்த்தும் விடுதலைப்புலிகள் 2009வரை செயற்பட்டனர். அவர்கள் சொன்ன காரணம், “இந்த மாகாணசபையில் எதுவுமே இல்லை”

இதற்காக அவர்கள் செலவிட்ட காலமும் இழந்த இழப்புகளும் கொஞ்சமல்ல. இறுதியில் தம்மையே முழுதாக விலை கொடுத்தனர்.

அதை விடவா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஐயும் மாகாணசபையையும் அம்பலப்படுத்தப்போகிறார்?

புலிகளின் வழியில் தாமும் 13ஐயும் மாகாணசபையையும் நிராகரிப்பதாக இருந்தால் ஒரு வகையில் அது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியது. புலிகளின் அரசியற் தொடர்ச்சியை காங்கிரஸ் கட்சியும் தொடர விரும்புகிறது என்று ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், அதை புலிகளைப் போல மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்ய வேணும். அதுவே நியாயமானது. இது அப்படியல்ல. மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவும் வேணும். அதிகாரத்தில் இருக்கவும் வேணும். அது பயனற்றது என்று சொல்லவும் வேணும்.

இதைக் கேட்கும்போது சிரிப்பும் கோபமும் வராமல் என்ன செய்யும்?

பதவிக்கு - அதிகாரத்துக்கு வந்த பின் என்னவெல்லாம் நடக்கும் என்பது யாரும் அறியாத ரகசியமோ வித்தையோ அல்ல.

ஆக இது ஒரு “சுத்தமான பம்மாத்து” என்பதற்கு அப்பால் வேறொன்றுமேயில்லை. எப்படி அகில இலங்கைத்தமிழ்க்காங்கிரஸ் கட்சியாக இருந்து கொண்டே தேர்தலில் வாக்கெடுப்பதற்கான தந்திரோபாயமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரையும் மஞ்சள் – சிவப்பு வண்ணத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அதைப்போலத்தான் இதுவும். சுத்த ஏமாற்று.

ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ள மறுத்தும் ஒரு தரப்பினர் கம்பு சுத்துவார்கள். இவர்களால்தான் தலைவர்கள் எப்போதும் தங்களை வளப்படுத்திக் கொள்வது.

மறுவளத்தில் – சிங்களத்தரப்பில் 13ஓ மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வோ  தேவையில்லை என்று சொல்லி எதிர்க்கின்ற போக்குத் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்திலிருந்தே இந்தப் 13சோதனைக்குட்பட்டே வந்திருக்கிறது. இலங்கை – இந்திய உடன்படிக்கையை அப்போதே (1987) ஐ.தே.கவின் ஒரு பகுதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக இந்த உடன்படிக்கை செய்யப்பட்டபோது அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஆர். பிரேமதாசவும் அவருக்கு நெருக்கமானவர்களும் இதைப் பகிரங்கமாகவே எதிர்த்தனர். இது தொடர்பாக அப்பொழுது நடந்த எந்த உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளிலும் பிரேமதாசவும் அவருடைய அணியினரும் பங்குபற்றவில்லை.

அவர் ஜனாதிபதியாக வந்த பிறகு மாகாணசபையைச் செயலிழக்க வைக்கும் காரியங்களிலேயே மும்முரமாக ஈடுபட்டார். இதற்காக அவர் அன்று விடுதலைப்புலிகளையும் பயன்படுத்திக் கொண்டார். காரணம், விடுதலைப்புலிகளுக்கும் இந்தப் 13இலும் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையிலும் விருப்பில்லை.

எனவே இதை வாய்ப்பாகக் கொண்டு புலிகள் – பிரேமதாச பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, அன்றிருந்த தமிழ்த்தரப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்தி பிரேமதாச மாகாணசபை முறைமையை வலுவிழக்கச் செய்ய முற்பட்டார்.

இதனால் உண்டான நெருக்கடிகளால் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள், பிரேமதாச அரசாங்கத்தைக் கண்டித்து தமிழீழப் பிரகடனத்தைச் செய்து விட்டு வெளியேறினார். அப்படி அவர் வெளியேறுவதற்கான சூழலை பிரேமதாச அரசும் புலிகளும் இணைந்த அன்று உருவாக்கியிருந்தனர்.

அன்று 13ஐயும் மாகாணசபை முறைமையையும் இலங்கை – இந்திய உடன்படிக்கையையும் தீவிரமாக எதிர்த்த இன்னொரு முக்கியமான தரப்பு ஜே.வி.பி. இடையில் இணைந்த மாகாணசபையை உடைக்க வேண்டும் என்று அது  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதை உடைத்தும் விட்டது. இன்னும் அது மாகாணசபைக்கும் 13க்கும் இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கும் எதிராகவே நிற்கிறது.

சரி, மாகாணசபை முறைமை திருப்தியானதல்ல என்றால், பதிலாக எந்த வகையான ஏற்பாட்டை நீங்கள் முன்வைப்பீர்கள் என்றால், அதற்கு ஜே.வி.பியிடமும் சரியான பதில் இல்லை. ஏனைய சிங்களத் தரப்புகளிடத்திலும் உரிய விடையில்லை.

இருந்தாலும் 13அவர்களுக்கு ஒரு தீராத பிரச்சினையாகவே தோன்றுகிறது. அரசாங்கத்துக்கும் 13இல் திருப்தியில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கும் வடக்குக் கிழக்கு இணைப்பு உட்பட 13இல் சுட்டப்படும் விடயங்கள் தொடர்பாக முழுமையான உடன்பாடில்லை.

இப்படியான குழப்பங்கள் நிறைந்த சூழலில்தான் 13பற்றிய பேச்சுகள் தீவிரம் பெற்றுள்ளன. இப்பொழுது 13நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லாதொழிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

13பற்றி இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு என்ன?

தமிழ்க் கட்சிகளில் சில மட்டும் 13ஐ வலியுறுத்துவதால் ஏதாவது பயன் கிட்டுமா?

ஈ.பி.டி.பி உள்பட அரசாங்கத்தை ஆதரிக்கின்ற சில தரப்புகளும் 13ஐ வரவேற்கின்றன. அப்படியென்றால் அது பலப்படுத்தப்படுமா? தனியே தமிழ்த்தரப்பின் ஆதரவுடன் வடக்குக் கிழக்கில் மட்டும் 13ம் மாகாணசபைக்கான அதிகாரப் பகிர்வும் நடக்குமா? அது சாத்தியமாகுமா? முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, கிழக்கை மையப்படுத்தி இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உட்பட வேறு சில தரப்புகளும் வடக்குக் கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியென்றால் 13இன் பெறுமதி என்ன? 13ஐ வலியுறுத்தும் தமிழ்க்கட்சிகளின் கடிதத்துக்கு மதிப்பென்ன?

இப்படிச் சிக்கலானதொரு நிலையில் இலங்கை இந்திய உடன்படிக்கை, 13ஆவது திருத்தம் -  மாகாணசபைகளின் அதிகாரம், வடக்குக் கிழக்கு இணைப்பு எல்லாம் எப்படியாகப்போகிறது?

இதற்குள் பழைய முறையிலா புதிய முறையிலா மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்ற வாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

தேர்தலே நடக்குமா என்பது இன்னொரு கேள்வி.

எல்லவாற்றையும் விட 13சோதனைக்குள்ளாகிறது. எல்லோரையும் 13சோதனை செய்கிறது.

ஆனால் எல்லா எண்ணுக்கும் உரிய தனித்துவமும் சிறப்பும் 13க்கும் உண்டு. இப்பொழுது அதுதான் (13) அதிவிசேசமாக இருக்கிறது. எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

கருணாகரன்

Comments