![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a23.jpg?itok=3Qt4eUmG)
Sail Lanka Yachting Group தனது Building a Future Foundation திட்டத்தினூடாக இலங்கையின் வட பிராந்தியத்தில் கடற்றொழில் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்க முன்வந்துள்ளது. இதனூடாக வடக்கைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கடற்றொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், படகு நிர்மாண பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
யாழ். மாவட்டத்தின் வேலணைப் பகுதியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த, Sail Lanka Yachting Group இன் தவிசாளர் பிரே பிரிங்கியர்ஸ், “இலங்கையின் தென் பிராந்தியத்தில் 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சமூகத்தாருக்கு உதவிகளை வழங்கும் வகையில் முன்னெடுத்திருந்த
‘Building a Future Foundation’ திட்டம் வெற்றிகரமானதாக அமைந்திருந்தது. இவ்வாறான திட்டத்தை வட பிராந்தியத்திலும் முன்னெடுப்பது எமது சிந்தனையாக அமைந்துள்ளது.
நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை BAFF ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பன்னிரண்டு இளைஞர்கள் இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள BAFF பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே 12மாத காலப்பகுதிக்கான கோட்பாட்டு மற்றும் பிரயோக பயிற்சிகளை பின்பற்றியுள்ளனர்” என்றார்.
இந்தத் திட்டத்தின் அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டதுடன், மேலும் பல சிறப்பு அதிதிகளும் பங்கேற்றனர். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்நிகழ்வுக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தார்.
“கடல்சார் மற்றும் அனுபவசார் சுற்றுலா மையமாக யாழ்ப்பாணம் திகழ்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. மிரிஸ்ஸ மற்றும் கொழும்பு மரீனா போர்ட் சிற்றியைத் தொடர்ந்து இது எமது மூன்றாவது செயற்பாட்டு மையமாக அமைந்திருக்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா வளர்ச்சியை கட்டியெழுப்ப எமக்கு ஏதுவாக அமைந்திருக்கும். வேலணையில் 4.5ஏக்கர் காணியில் 540சதுர மீற்றர் பகுதியில் புதிய SLYG பயிற்சி நிலையம் மற்றும் படகுத்துறை ஆகியன அமைந்துள்ளன” என்றார்.
யாழ்ப்பாண பயிற்சி நிலையத்தினால் எந்திரவியல் பொறியியல், மின்சாரம், வெல்டிங், குளிர்சாதனப் பெட்டி மற்றும் வாயு குளிரூட்டி போன்றவற்றில் அடிப்படை திறன் பயிற்சிகள் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து படகு நிர்மாணம் மற்றும் உள்ளக மற்றும் வெளியக என்ஜின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரயோக பயிற்சிகளும் வழங்கப்படும். ஒரு வருட காலப்பகுதிக்கு கற்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், கோட்பாட்டு மற்றும் பிரயோக ரீதியான பயிற்சிகளைக் கொண்டிருக்கும். அதனூடாக பட்டதாரிகளுக்கு படகு நிர்மாணத் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் Ocean Diamond - 80அடி மிதக்கும் புட்டிக் ஹோட்டல் மற்றும் Ceycat - 55அடி மிதக்கும் கட்டுமரம் போன்ற படகுகள் நிர்மாணம் தொடர்பான பிரயோக பயிற்சிகள் வழங்கப்படும்.
பிரிங்கியர்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “போர்ட் சிட்டி கொழும்பு மரீனா மற்றும் யாழ்ப்பாணம் இடையே படகுச் சேவையை ஆரம்பித்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான தூரத்தை நெருக்கமாக்க நாம் முயற்சிக்கின்றோம்.
அதனூடாக வடக்கை நீர் அடிப்படையான சுற்றுலா மற்றும் கடல்சார் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான புதிய மையமாக கொண்டிருக்க முடியும். சிலோன் சிப்பிங் கோர்பரேஷனுடன் இணைந்து படகுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இவை ஆரம்பத்தில் உள்நாட்டில் பயன்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் எல்லைகளுக்கிடையே பயணிக்கக்கூடிய படகுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். பயிற்சி முற்றிலும் இலவசமானதாகும், சகல மாணவர்களுக்கும் இலவச காலை உணவு, மதிய உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தினசரி கொடுப்பனவு வழங்கப்படும். அவர்கள் பயிற்சியை பூர்த்தி செய்ததும், அவர்களுக்கு NAITA மற்றும் BAFF சான்றிதழ்கள் வழங்கப்படும். இவை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் செல்லுபடியாகும்” என்றார்.